அழவிட்டு நீ போ

காதோடு இதழ்வைத்து இனிக்கும்
இதமான காற்றும் -உனைக்கேட்கும்
மூச்சுத் திணறிட அதைவெறுப்பேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

கடிக்கும் கட்டெறும்பும் கனிவோடு
கருநிறமேனி அழகன் -உனைக்கேட்கும்
அதை கடிந்துபேசி உடைந்துபோவேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

இசை பாடும் குயிலும்
மயக்கும் குழலோசை -உனைக்கேட்கும்
குரல் இழந்துகூனிக் குறுகிப்போவேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

காட்டுமல்லிக் கொடியும் தளர்ந்து
தாகத்தோடு தயவாக -உனைக்கேட்கும்
பதிலின்றி சருகாகி உதிர்ந்துபோவேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

எழில்மிகு சோலையும் நாணலாகி
கூந்தலைப்பாரென்று நகைத்து - உனைக்கேட்கும்
நீயின்றி பின்னிமுடிக்க ஆளேதெனக்கு
என்பதை அறியாதவனா நீ போ....!

துள்ளிக் குதிக்கின்ற மீனும்
உன்துணை எங்கேயென்று -உனைக்கேட்கும்
இவள் விழிகளும் துடித்துப்போகும்
என்பதை அறியாதவனா நீ போ....!

மணம் வீசும் மலர்களும்
முள்குத்தி மனம்கவர்ந்தவன் -உனைக்கேட்கும்
கல்லாகி உணர்ச்சியற்ற சிலையாவேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

கார்மேகம் கேட்டும் ஆடமறுக்கும்
தோகை விரிக்கவே தயங்கி
மயிலும் மாயவன் -உனைக்கேட்கும்
நெஞ்சம் கசந்துப்போய் நடையிழப்பேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

உதிருமென் பாதச் சுவடுகளையும்
உனதுநிழல் குடைபிடித்து ரசிக்கும்
வறண்டகாற்று அதைத்தீண்டி -உனைக்கேட்கும்
பாதம் நோக வலியுணர்வேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

ஒளிந்து மறையும் எனைபிடித்து
தோழிகள் திட்டாது -உனைக்கேட்பர்
துக்கம்சொல்லி அவர்களின் தோள்சாய்வேன்
என்பதை அறியாதவனா நீ போ....!

இருந்தாலும் இருக்கட்டும்
இவளென்றுச் சொல்லி
தவிக்கட்டுமென்று நீ போ
கண்ணா அழவிட்டு நீ போ........!!

எழுதியவர் : மணிமேகலை (18-Sep-14, 7:24 am)
பார்வை : 423

மேலே