அன்புள்ள நியந்தாவுக்கு 12- கடிதங்கள் தொடரும்

டெலிபோன் அடித்துக் கொண்டே இருந்தது.... அடித்துக் கொண்டே இருந்தது.... அடித்துக் கொண்டே இருந்தது....... வேறு வழியில்லை.. எடுத்து தான் ஆக வேண்டும்.. எடுத்து, காதுக்கு ரிசீவரைக் கொடுத்தேன்.....

அவன் இல்லையா....

எவன்...

அவன் தான்.... பொண்ணுங்கள் ஏமாத்தறதையே வேலையா வெச்சிட்டு இருக்கானே.. அவன் தான்....

அப்டியெல்லாம் பேசாத... அவ வேற....

எனக்கு தெரியாத என்ன வேற...

நீ மீனலோச்சனியா... காஞ்சனமாலாவா....

சுமித்ரா ......

சரி..... நீ பேசிட்டே இரு.... ஒரு சின்ன வேலை என்று நான் இந்த பக்கம் வந்து உங்கள் முன்னால் நின்று கொண்டேன்.... என்ன பார்க்கறீர்கள்.....?
இனி நான் தான் உங்களுக்கு மீதிக் கதையை சொல்ல போகிறேன்....நியந்தாவின் கடிதம் படித்து, அப்போதே அவளைத் தேடி போய் விட்டான் இத்தனை நாட்களாக உங்களுக்கு கதை சொன்னவன்...கதையை எங்கு இருந்து ஆரம்பிப்பது..... ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் கதையை இன்னொருவர் முடிப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை...அது பாக்யராஜ் போல சிறந்த திரைக்கதையாளருக்கு வேண்டுமானால் கை கூடலாம்....(அவசர போலிஸ் 100 படம் பார்த்தவர்களுக்கு புரியும்)....அதுவும் இந்த கதை முழுக்க முழுக்க அவன் நியந்தாவுக்கு எழுதிய கடிதம் தான்... இதில் நான் எங்கு இருந்து தொடங்குவது.... சரி முடிந்தளவுக்கு சொல்கிறேன்.. சில இடங்களில் நீங்களாகவே.... யூகித்துக் கொள்ளுங்கள்.. எததனை நாளைக்குத்தான் வாசகன் வாசகனாகவே இருப்பது....?

நியந்தாவைத் தேடி தேடி எங்கெங்கோ அலைந்து ஏதோ பிரச்சனையில் மாடிக் கொண்டது போல ஒரு தோற்றம் இருந்தாலும் அவன்.. செய்த அத்தனையும், திட்டமிட்டது தான்..... சிந்தாவுக்கு கடந்த 3 மாதங்களாக அவனும் அந்த பொடிப் பசங்களும் சேர்ந்து தீட்டிய திட்டம்... காரணம்.. சிந்தா வாழத் தகுதியற்றவள்... சாமியும் கண்ண குத்தல.. சட்டமும்... கண்ண குத்தல...

வேறு வழியின்றி கடவுளாக சில நேரங்களில் தன்னை நினைக்கும் மனோவியாதி தான் நல்ல தீர்ப்பை வழங்குகின்றன....

இப்போ ஓரளவுக்கு அவனின் செயல்பாடுகள் புரிந்து இருக்கும் என்றும் நம்பும் இடத்தில் ஒரு கட் போட்டு விட்டு கேமராவைத் தூக்கிக் கொண்டு நியந்தாவிடம் செல்கிறேன்..

யார் இந்த நியந்தா... கடந்த நாட்களில் அவன் அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் இந்த நியன்தவை பற்றி இனியும் மறைத்தால் அது வாசகனின் மூளைக்குள் பனிக்கட்டி கொட்டுவது போலத்தான்...

நியந்தா..... பேர் சொல்லும் போதே இனிக்கும்.... நாவின் சுவையில் இன்னும் ஆயிரம் மொட்டுக்கள் கூடி விடும்.... மூக்குத்தி பெண்.... கொரியன் முகம்... அவள் ஒரு கவிதைக்காரி.... கூட காதல்காரியும்.... அவளுக்கு மழை பிடிக்கும்.... வெயில் பிடிக்கும்.... கனவு பிடிக்கும்... கனவின் நினைவு பிடிக்கும்....அறிவின் சுடர்.... கண்கள் உருட்டி விளையாட்டுக் காட்டுவதில் பூனைகள் பாம்பாய் மாறி தலை ஆட்டும்....ரசனையின் உச்சம் அவளது கனவின் மிச்சம் என்று கவிதை எழுதி காற்றில் பறக்க விடும்.... பச்சை மிளகாய் கோபக்காரி...நடந்து கொண்டே இருப்பாள்.... காடு மறந்து காமம் மறந்து சில போது காதல் கூட மறந்து.... அவள் பாதச் சுவடுகளில் இனம் புரியாத ஒரு மயக்க நிலை இலைகளற்ற சப்தங்களைச் சுமந்து கொண்டே பின் தொடரும்....

தொடுவானம் தொட்டு விடும் அவள் விரல்களில் நீலம் பூத்த வெண்ணிலவின் கடைசி இனுங்கல் ஒட்டிக் கொண்டிருக்கும்.... சிரித்தால் பூ பூக்கும்.. முறைத்தால் தீ வேர்க்கும்.... அவளைப் புரிந்து கொள்வது அத்தனை சுலபமல்ல... புரிந்து கொண்ட பின் அத்தனை சிரமமல்ல... சிறு குழந்தையின் தாவல்கள் அவலெங்கும் சித்திரம் வரைந்து கிடக்கும்.......பார்த்து முடியாத முகத்தின் சாயல்களை வானத்தில், காடுகளில், கடல்களில்.... படிக்கின்ற இலக்கியங்களில் எங்கும் காண முடியும்.. உணர முடியுமா என்பதில் தான்... அவனுக்கும் நியந்தாவுக்கும் உள்ள காதலின் முடிச்சு இன்னும் இன்னும் இறுகிக் கொண்டே போகிறது....அவளை உள் வாங்குவது யாருக்கும் எளிது.... உள் வைத்திருப்பது கடிது.... புத்தனைப் போல ஒரு யுத்தக்காரி... கத்தும் குயிலின் ஓசையில் மிகச் சிறந்த முத்தகாரி....

அவளுன் நியந்தாவும் ஒரு இலக்கிய சந்திப்பில் தான் கண்டு கொண்டார்கள்... இக் கதையின் முதல் அத்தியாயத்தில் சொல்லப் பட்டது போல.... ஆனால்.... அது நடந்து ரெம்ப வருடங்கள் ஆகி விட்டன... அதாவது அப்போது இருந்து இந்தக் கதையை எழுதி இருந்தால் இந்நேரம் 150 அத்தியாயம் கிட்ட போய் இருக்கும்.... பின் ஏன் ஏதோ போன மாதம் நியந்தாவைப் பார்த்தது போல எழுதி இருக்கிறான்..... நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்... அல்லது என்னைத் தொடருங்கள்...

கண்டதும் காதல் இல்லை... பார்வை.. பேச்சு.. நட்பு... பின் காதல்.. பெருங்காதல்.... தீராக் காதல்.... காதல் என்றால் என்ன.... இருவருக்குமே இப்படி ஒரு கேள்வி வரத்தான் செய்தது.. இலக்கியவாதிகள் ஆயிற்றே...அவன் தாஸ்தாவெச்கியை அழைத்தான்.... நியந்தா டால்ஸ்டாயை அழைத்தாள்....பாரதி இல்லாத காதலா.... அவன் தாசன் சொல்லாத கடைக்கண்ணா...வெண்ணிற இரவுகளில் பொன்னிற மேனிகளில் மன்மத அன்புகளில் தன்னிலை மறந்த பின்னிரவில் உன் மீசை எனக்கு வளர வேண்டும் என்று அவன் நெஞ்சில் தன கால் கட்டை விரலில் இவள் இட்ட கோலம்.... அழியாத வரம் வாங்கிய கவிதைச் சித்திரம்...உன் மார்புச் சுமை நான் சுமக்க வேண்டும் என்ற பொழுதில் அவள் தலை குனியவில்லை.. சொன்ன கூற்றின் இரண்டாம் வரி தலை நிமிர்ந்தது.. வள்ளுவனின் காமத்துப் பாலில் மிதந்த இரவுகளில்.... ஜிப்ரானின் கவிதையாய் காதல் வழிந்தது....மசிம் கார்கியின் தாள்களாய் கோபங்களில் கொப்பளித்த நாட்களிலும் இருவருமே அவரவர் உயிர் தாண்டி அழுதார்கள்.... பெருங்குரலெடுத்த ஜெயகாந்தனின் புரட்சியைப் போல.....அழுகையின் ஆழம் காதலை இன்னும் ஆழமாய் பூட்டியது..... இனி மறுப்பதற்கு எவனுமில்லை... சாதி மதம்... கருமம்.. எழவு எல்லாம் ஓடி ஒளிந்து கொள்ளட்டும் தங்களின் ஒற்றை முத்தத்தில்..... என்று தினம் தினம் முத்தத்தில் நுழைந்து முத்தமாகவே ஆனார்கள்...விவிலியக் கூற்றுப்படி காதலாக ஆக நினைத்து அதுவாகவே ஆனார்கள்... காதலைப் போல ஒரு கடவுள் உண்டோ என்று காதுக்குள் கிசு கிசுத்துக் கொண்டார்கள்...

நான் நியந்தா பேசறேன்.... என்று அவள் முதன் முறையாக அவனிடம் பேசிய அலைபேசி வார்த்தையை அவன் காற்றோடு கைது செய்து நுரை ஈரலுக்குள் பச்சை குத்தி வைத்திருப்பதாக அவளிடம் அடிக்கடி கூறுவான்.... அத்தனை காதலா... என்பாள்.... அத்தனையும் காதல் என்பான்... விட்டால் தின்பேன் என்பான்...ம்ஹும் என்பாள்.... அது ம்ம்.. என்பது என்பான்...

என் திசைகள் வியக்கின்றன.....என்றான்.... ஒரு கடிதத்தில்.... கடிதங்களில் மிதந்து வந்து கட்டிக் கொண்டாள்.... அவள் தலை குனிந்திருந்து அவனைப் பார்க்க நிமிரும் போதும்.... அல்லது ஏதாவது வெட்கம் வருவது போல சொல்லிவிடும் சமயத்தில் அவன் மீதிருந்த கண்களை வேறு திசைக்கு மாற்ற சட்டென தலையை திருப்பும் போதும் .. ஒரு வித ஸ்டைலாக, அவள் கழுத்தைத் திருப்பும் பாவனை..... அப்பப்பா...... தீராது என் காதல் என்பேன்..... நீ தீ அள்ளி தின்ன சொல் தின்பேன்..... உனைப் பெண் பார்த்ததும் தள்ளி பின் பார்த்ததும் சுட்டாலும் மறக்காது நெஞ்சம்..... முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்.... வைரமுத்துவை விட்டு விட முடியுமா.. காதல் என்று வந்த பிறகு...

நியந்தா..... ஒரு மாற்றுப் பொருள்... புரிந்த பின்னும்....புரியாமலே.... புதைந்து கொள்வாள்.... கதை பேசி தீரா இரவுக்குள் நடமாடிய பிறகும் கால்தடம் அழித்துக் கொண்டு விடியலில் சிவந்திருப்பாள் ... கேட்டால் அடிப்பாள்...அழுவாள்...அவளின் நிறங்களில் அவனுக்கான வானவில்லை அவனால் கண்டு பிடிக்கவே முடியவில்லை... ஓ வென கதறி ஓடி வந்து கட்டிக் கொண்டு முத்தம் பதிக்கும் அதே நேரத்தில் அவளின் இன்னொரு கை அவனின் முதுகைப் பிய்த்து எடுத்துக் கொண்டிருக்கும்.......தன்னை பேய் என்று சொல்லுவாள். ஓடி விடு என்பாள். பேயாக இருந்தாலும் காதலை வைத்த பின் எப்படி ஓட... எங்கு தான் ஓட... அவன் அவளை அதிகமாக நேசிக்கத் தொடங்கினான்.... அவளும் தான்.... அவள் தீர்க்கமானவள்... திருத்தமானவளும் கூட. இப்படி ஒருத்தியைக் காதலிக்காமல் விட்டால்தான் பிறப்பின் அர்த்தம் இல்லாமல் போகும் என்று மீண்டும் மீண்டும் முத்தங்களில் அவளை நிறைத்துக் கொண்டே இருந்தான்....

ஒரு நாள் ஆனது.. இன்னொரு நாள் ஆனது.. 3 , 4, 5, 6, 10, 15, 30, மூன்று மாதம், 6 மாதம்.... ஆனது.... நியந்தாவைக் காணவில்லை....

அவள் வரவேயில்லை..... அவன் யோசித்துக் கொண்டே இருந்தான்.... அவன் யோசித்துக் கொண்டே இருந்தான்....அவன் யோசித்துக் கொண்டே இருந்தான்..........யோசிக்க யோசிக்க யாசிக்கும் நினைவுகள் வாசிக்கப் பழகுவது போல, நியந்தா மெல்ல கண் முன்னே தோன்றத் தொடங்கினாள்....

கனவுகள்.... நிஜமாகத் தொடங்கியது..... குடை வெறுத்து மழை ரசிக்கத் தொடங்கினான்.. துளிகளில் நியந்தா விழத் தொடங்கினாள்...... ஜன்னல் திறந்த பின்னிரவில் அலைவரிசைகள் ஏதாவதொன்றில் அவள் குரல் கேட்கத் தொடங்கியது.....அறையெங்கும் நியந்தா... சுவரெங்கும் நியந்தா... கதவெங்கும் நியந்தா...

பாவம்ல.... இந்த சின்ன பசங்க.... எப்டிதான் சீரழிக்க மனசு வருதோ ........ என்றோ ஒரு நாள் நியந்தா கூறிய சொல்லின் வீரியம் புரியத் தொடங்கிய நாட்களில்..... கடைசியாக சிந்தாவின் மரணம்....

நியந்தாவின்.... மௌனத்தை அவன் போட்டுக் கொள்ள தொடங்கினான்...அவளின் சிரிப்பை அவன் வாசிக்கத் தொடங்கினான்.... அவளின் கனவுக்குள் இவன் கவிதைகளை நடை பழகின... ஒரு நாள் எழுகையில் அவளாகவே எழுந்தான்.... அவளின் ஆடை மட்டுமல்ல.... கண்ணாடியில் நியந்தா சிரித்துக் கொண்டும் இருந்தாள்....வீட்டுக்குள் நியந்தா நடமாடத் தொடங்கினாள்... பின் மெல்ல மெல்ல வெளியேயும்..... நியந்தவின் பாவனைகள்... அவனிடம்... வெளிப்பட்ட தருணத்தில் அவளைப் போலவே அழவும் தெரிந்திருந்தான்.... காதல் எல்லாம் செய்யும்.... சில நேரங்களில் இல்லாமலும்...... சில நேரங்களில் இருப்பதாகவும்....

படிக்கும் வாசகர்களில் யாராவது மருத்துவர் இருப்பின் விளக்கலாம்.... இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இல்லை.... சந்திரமுகியில் ரஜினி சொல்வது போல ஒருவர் இன்னொருவராக மாறுவது... அது இல்லை... அந்நியனில் விக்ரம்க்கு வந்த வியாதியும் இல்லை.... நியந்தாவாக 3 மாதம் தன்னை உலகுக்கு அடையாள படுத்திக் கொள்பவள் பின் ஒரு மூன்று மாதங்கள் தன்னை தானாகவே காட்டிக் கொள்ளத் தொடங்கினான்....

எப்பொழுது அந்த மாற்றம் வருகின்றது என்பது உங்கள் யூகம்....

அவளின் காட்டருவியில் அவன் மீனாகி குதிக்கத் தொடங்கினான்.... தூரத்தில் விழும் மின்னல் ஒன்றில் இருவரும் ஒரு ஒளியாக ஆனது போல அவனின் பல கவிதைகள் மாயம் செய்து கிறுக்கல்கள் ஆனதை ஆந்தையின் இரவு என்று எழுதத் திட்டமிட்டுள்ளான்...

சரி என போரடிக்கிறேனா..... என்ன பண்ண.. அவன் அளவுக்கு சுவாரஷ்யமா என்னால எழுத முடியாதுன்னு முதல்லையே சொல்லிட்டேன்...பாருங்க... அந்த மீனலொசனியொ....காஞ்சனமாலாவோ.... .. இல்லல.... சுமித்ரான்னு தான... கடைசியா சொன்னங்க...இன்னும் லைன்ல.... அயோ சொல்ல மறந்திட்டேனே.... நான் யார்னு....

நாந்தாங்க........ அந்த நியந்தா.......


கடிதங்கள் தொடரும்...........ஒரு சிறிய இடைவெளிக்கு பின்......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-Sep-14, 6:33 pm)
பார்வை : 205

மேலே