கண்ணனை களவாடும் கண்கள் - வினோதன்
நான் காணாதபோது
எனைக் கண்டு
நான் காணும்போது
காணாதது போல்
கள்ளத்தனம் காட்டும்
கறுப்புக் கண்ணாடி !
நான் நிதானிக்க
எத்தனிக்கும் முன்னே
எழ விடமால்
இடை விடமால்
வீழ்த்தும் - எனத்
தெரிந்தே வீழ்கிறேன்
அகம் விரும்பியே !
காணமல் சூடாகும் நான்
கண்டதுமே உருகுகிறேன்,
உன் கரம் கண்ட
காரத்தின் காரணத்தால்
உருகிக் கிழியும்
பனிக் குழாமென !
என் கண் முன்னே...
நான் களவாடப்படுகிறேன்
களமாட தெரிந்தும்
விரும்பாமல் - விரும்பியே
காணாமல் போகிறேன்
உன் கருவழியின்
காந்தக் காட்டோரம் !
உன் இமைக்கும் விழிக்குமான
நுண்ணிய இடைவெளிகளில்
மெல்லிய படலமாய்
எனை படரவிட்டபடி
உறங்குகிறாய் - நான்
மட்டும் - உன் கனவுகளின்
திரையோரம் - காதலை
அணிலென கொறித்தபடி !
கண்ணனின் கண்கள்
எங்கும் உன் கண்களில்
குடியிருத்தலை விடவும்
சொர்க்கம் மேலானதாக
இருக்க வாய்ப்பே இல்லை,
நகரும் சொர்க்கமது - எனை
நோக்கி நகரும் சொக்க மது !
- வினோதன்