ஒரு அப்பாவின் இதயம் அயல் நாட்டிலிருந்து
புதியதோர் உலகைக் காண
ஆசை தீயாய் எரிந்தது
அனுமதி கிடைத்த இரண்டொரு
நாளில் உறவுகள் பிரிந்தது
பூமிப்பந்தின் புதிய இடத்தில்
புதிய காற்றை சுவாசித்தேன்
தொலைபேசி என் மனைவியானது
என் குழந்தையானது
அவர்களின் அன்பின் மொழி
என் செவியை நிரப்பியது
செவிக்கு உணவில்லாதபோது சிறிது
வயிற்றுக்கும் உணவிட்டேன்
எடையை இழந்தேன் பிரிவிற்கு
சான்றாய் உடலை மெலிந்தேன்
புலன்கள் ஐந்தில் நான்கு சோர்ந்தது
காது தொடர்ந்து பிழைத்தது
மகனே உன்னைக் காணாது
என் கருவிழி காய்ந்தன
உன் பரிசத்தை உணராது
என் நாசிகள் எரிந்தன
உன்னை அணைக்காத கைகள்
அசைவின்றி நிலைத்தன
உன்னை தூக்கி திரியாத
என் கால்கள் ஒடிந்தன
என் வானில் ஒளியில்லை
நினைவுகள் திரண்டது மேகமாய்
சுவடுகள் தெரியவில்லை என்
பயணம் தொலைதூரமாய்
கரைகள் தென்படவில்லை உன்
அன்பு கலங்கரை விளக்கமாய்
மகனே உன் முத்தங்கள்
என் கனவில் சத்தமானதே
உன் வார்த்தைகள் என்
கனவில் சொர்க்கமனதே!
தேனும் கசக்கிறது
நிறையும் பணமும் புளிக்கிறது
நரகமும் இதுதானோ?
உன்னிடத்தில் விடியல்
என்னிடத்தில் இரவு
என் இரவு விடிவது
எந்நாளோ?