சொல்லத்தான் நினைக்கிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
க்ரீச்....
ராமநாதன் சடாரென பிரேக்கை அழுத்த கார் ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.. ரோட்டை கடக்க முயன்ற மாட்டின் மீது மோதி விடாமல் தப்பித்தார்.
காரின் உள்ளே "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்ற M.S.விஸ்வநாதனின் கணீர் குரலில் வந்த பாடலை கேட்டுக் கொண்டே டிரைவ் செய்து கொண்டிருந்த ராமநாதனின் நினைவுகள் பின்னோக்கி 40 வருடங்களுக்கு முன் செல்ல அந்த படம் வந்த காலமும் அதையொட்டி அவரது வாழ்க்கையில் தொடர்ந்து வந்த காதல் , தோல்விகள், பிரிவுகள் என்று பல சம்பவங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதை அவரால் நிறுத்த முடியவில்லை.
காரை ஓரமாக பார்க் செய்துவிட்டு கடற்கரை ரோட்டில் நிதானமாக நடக்க ஆரம்பித்தார். வேலை நாள் என்பதால் கூட்டம் இல்லாத கடற்கரை சற்றே அமைதியாய் இருக்கவே மணலில் சென்று கடலை பார்த்தபடி அமர்ந்தார்.
இந்த அவசரமான வாழ்க்கைக்கு நடுவே இப்படி ஒதுங்கி கொஞ்சம் நினைவுகளை அசை போடுவது கூட சுகமாக தான் இருக்கிறது. ஆனால் ஏதோ மனதின் மூலையில் வலி ஒன்று ஆழத்தில் இருப்பதை உணர்ந்தவராய் தனது இளமைக் கால நினைவுகளில் மீண்டும் மூழ்கினார்.
"மீனா !"
தான் பால்ய சினேகிதி . அவள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும் வகையிலேயே எப்போதும் குழைந்து குழைந்து அவனிடம் பேசுவாள்.."நாதன்..என்ன..பரீட்சைக்கு ரொம்பதான் விழுந்து விழுந்து படிக்கிற போல..எங்கிட்ட பேசக் கூட நேரமில்ல இல்ல? " அவள் சிணுங்கல் இப்படிதான் ஆரம்பிக்கும்.
கொஞ்சம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்த பின் திடீரென " சரிப்பா..எங்க அண்ணி தேடுவாங்க.. நான் வர்றேன்" னு சொல்லிட்டு அந்தரத்தில் அவனை விட்டு விட்டு ஓடுவதில் அவளுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்..
பரீட்சை முடிந்த மறு நாள் அவளிடம் தனது மனதில் உள்ளதை சொல்ல வாயெடுத்தான் .
" மீனா..!"
"ம்"
" மீனா..!"
"சொல்லு.."
"எனக்கு..எனக்கு"
" ப்ச்"
"சொல்றேன்.. சொல்றேன்"
"ம்"
"உனக்கு ...சொல்லத்தான் நினைக்கிறேன்"
"ஏய்..என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு.."
"சொல்லவா" என்று அவன் ஆரம்பித்து சொல்லி முடிக்கும் போது அவள் முகம் கடு கடு என்றிருப்பதை பார்த்த ராமநாதன்.." என்ன மீனா .. உனக்கு என்னை பிடிக்கலையா.." என்று ஈன சுரத்தில் கேட்க,
" நாதன்..உன்னை பிடிக்கும் அளவுக்கு ஒன்னும் இல்ல.. ஏதோ ஜாலியா பேசினா நீ இப்படியெல்லாம் நினைச்சிக்குவன்னு நான் கனவுல கூட நெனக்கில"
அடிப்பாவி..!
'மீனா.. நான் உன் கூட பழகிய இந்த மூன்று வருஷத்தில் ஒரு நாள் கூட என் விரல் கூட உன் மேல் பட்டதில்ல.. ஆனா மனசெல்லாம் நீ தான் தெரியுமா?'
" ம்ம். ஐயாவுக்கு அப்படி எல்லாம் கூட எண்ணம் இருக்குதோ" என்று சொல்லி ஏளனமாய் சிரித்த மீனாவை சோகமாக பார்ப்பதை தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை அவனால்.
" இங்க பாரு நாதன் .. என் கூட நெறைய பேர் பழகுறாங்க.. சிலரை எனக்கும் பிடிக்கும் .. அதுக்காக?.. அப்படியே பார்த்தாலும் உன் பர்சனாலிட்டி ஒன்னும் அப்படி என்னை இழுத்திடல"
" அப்படீன்னா.. " கோபத்தில் நாதன் குரலை உயர்த்த.. " இங்க பாரு நாதன்.. நா ஒன்னும் உன் பொண்டாட்டியில்ல.." என்று சொல்லி விட்டு விருட்டென எழுந்து இருளில் மறைந்தாள்.
அவள் போன வழியை விட்டு பார்வையை எடுக்காத ராமநாதன் மனதில் அப்போதும் கூட "நா ஒன்னும் உன் பொண்டாட்டியில்ல" என்று அவள் சொன்ன வார்த்தையே கோபத்தையும் ஜில்லென்ற உணர்வையும் மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டே இருந்தன..
அப்புறம் கோயமுத்தூரில் உள்ள எஞ்சினீரிங் காலேஜுக்கு போய் சேர்ந்த அவன் மனதில் அவள் உருவம் அழியவே இல்லை..
ஒரு வகையில் அவள் ஆணவத்தை எண்ணி ஆத்திரப் படுவான்.. மறு நேரம் அவளது அழகு பிம்பம் தன்னுள் இன்னும் ஏற்படுத்தும் அலைகளை ரசிப்பான்...
மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கோவிந்தன் அவளை பற்றி சொன்னான்.. கடைசியாக அவளை பற்றி கேள்விப் பட்டது அது தான்..
யாரோ ரெடிமேட் கடைக்கு துணி தைத்து கொடுக்கும் ஒரு ஆளுக்கு கட்டி கொடுத்து விட்டார்கள் என்றும், தினமும் அவளும் அந்தக் கடையில் தையல் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தாள் என்றும்..!
"மீனா.."
துக்கம் தொண்டையை அடைத்தது ராமநாதனுக்கு..
நண்பனிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு அல்லவா அன்று உதறி விட்டு போனாள்!..
ஆனாலும் அவளது வாழ்க்கை தடம் மாறியதை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..!
"கோவிந்த்..இப்ப அவ எங்க இருக்கா தெரியுமா உனக்கு?"
"இல்லப்பா.. அவ மெட்ராசுக்கு போய் அப்புறம் அங்கிருந்து ஆமதாபாத் போய் விட்டாள் என்று கேள்விப்பட்டேன்.. இதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது"
அதற்கு பிறகு ஆண்டுகள் ஓடின..ராமநாதன் கெமிக்கல் இஞ்சினியராக வாழ்க்கையை துவங்கி ஈஸ்வரியை மணந்து இரண்டு பையன்கள் ஒரு பெண்ணுக்கு தகப்பனாகி , இதோ ஒரு பெரிய நிறுவனத்தின் M.D. ஆகவும் காலத்தை ஒட்டிக் கொண்டு இருக்கிறார்..!
அவரது வாழ்க்கை டைரியில் கிழிந்து போன பக்கம் ஒன்று .. அவ்வப்போது கண்ணில் தோன்றி மறையும்..அதோடு சரி..!
மெல்லிய குரலில் " சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று பாடிய படி பீச் மணலை உதறிக் கொண்டு எழுந்து நடந்தார் ராமநாதன்..
சற்று தூரத்தில் அவரை அடையாளம் கண்டு கொண்டும் கூப்பிட தைரியம் இல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள் மீனா.. தனது கையில் இருந்த ரப்பர் வளையல்களை ஒரு கையால் பிடித்துக் கொண்டு!
" நாதன்...!" என்றழைத்தாள் மனதுக்குள்ளே!