ஏன் இந்த பொய்யான வாழ்க்கை இப்படிக்கு மனசாட்சி

ஏன் இந்த பொய்யான வாழ்க்கை..? இப்படிக்கு மனசாட்சி
எழும்பு
நீ சாதிக்க வேண்டியவைகள்
ஏராளம் உண்டு
எம்மட்டும் உறங்கிக்கொண்டிருப்பாய்
எம்மட்டும் கனவுலகத்திலே
வாழ்ந்துக் கொண்டிருப்பாய்
உனக்கு ஏன் இந்த பொய்யான வாழ்க்கை ..?!
இதோ ..!
என் மனசாட்சி என்னோடு
பேசத்தொடங்கியது,
நீயே உன்னை மூடனென்று
எண்ணிக்கொண்டாய்
பிறரையும் சொல்ல வைத்தாய்
அட மூடனே - உன்னை
மூடனென்று சொன்ன ஞானி
இங்கே எவனடா ?
வாழத்தெரியாமல்
வாழ பயந்து
வாழ்கையை சாவிடம்
விற்றவர்கள் எல்லோரும்
இங்கே மூடன் தானடா
இன்னும் ஐந்தறிவு ஜீவனாய்
வாழ்கிறாய்
கடவுள் உனக்கு ஆறறிவு
கொடுத்தான் என்பதை
மறந்து வாழ்கிறாய்
ஆழ்கடலில் மூழ்கி
பறக்க சிறகுகள் கேட்கிறாய்
வானத்தில் மிதந்து கொண்டு
நீந்த இறக்கைகள் கேட்கிறாய்
உன்னால் முடியும் எனும்
தன்னம்பிக்கைக்கு
முக்காடு
போட்டு மறைத்து விட்டாய்
முடியாது எனும்
கோழைத்தனத்தை
விமர்சனமாய் திரையிட்டாய்
அட மூடனே
உனக்கு ஏன் இந்த பொய்யான வாழ்க்கை ..?
தெய்வமும் கைவிட்டதே
தெருவில் நிண்டு
புலம்புகிறாய்
கை விட்டது அவனா அல்லது நீயா ?
என்னிடம் கேட்டுப்பார்
சொல்கிறேன்,
மொழிகள் தெரிந்தும்
ஊமையாய் நடிக்கிறாய்
பாதைகள் இருந்தும்
குருடனாய் அலைகிறாய்
ஓட முடிந்தும்
குழந்தையாய் தவழ்கிறாய்
வாழத் தெரிந்தும் ஏனடா
பொய்யான வாழ்க்கை வாழ்கிறாய்..?
இப்படிக்கு
மனசாட்சி