சொல்லத்தான் நினைக்கிறேன்- II

ராமநாதன் சென்ற திசையையே கலங்கிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் மனக் குதிரை எளிதாக பின்னோக்கி ஓடியது..

அன்று.. அவனிடம் அவள் அப்படி பேசியதற்கு காரணம்..முந்தின தினம் ராமனாதனின் அம்மா கடைக்கு வெளியே இவளை அழைத்துக் கொண்டு சென்று கூறிய வார்த்தைகள் தான்..வார்த்தைகளா அவை?.. அமில மழை!

" ஏய்..மீனா.. என்னடீ நான் கேள்விப்படுவது எல்லாம் உண்மைதானா?"
"என்னங்கம்மா"
"பின்ன என்னடீ...எம்பையன் ஏதோ ஒன்னாண்ட சிரிச்சு சிரிச்சு பேசிக்கிடிருக்கதால.. அப்படியே இழுத்துகின்னு ஓடலாம்னு பார்க்கிறாயா .. ஹூம்.. ஒங்க அண்ணன்கிட்ட சொன்னா என்ன ஆகும்னு தெரியுமில்ல.."
"ம்மா..அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா ... நாதன் நான் பழகுற பசங் எல்லாரிலும் ரொம்ப நல்லவன் .."
"அதாலே..?"
"கள்ளம் கபடம் இல்லாதவன்.."
" ஹூம்.. அதான்.. இது மாதிரி இளிச்ச வாயா யாரும் கெடைக்க மாட்டாங்கன்னு நெனச்சிட்ட போல "
" ஹையோ.. அப்படி இல்லம்மா.."
"வேறு எப்படி..தோ பாரு ! அவன் மேல படிச்சி தலஎடுத்து ரெண்டு தங்கச்சிகளுக்கு கலியாணம் செய்து கொடுக்கணும்..அம்மாடி நீ நல்லா இருப்ப.. நான் ஒன்ன தப்பா பேசியிருந்தாக் கூட மறந்துடு..ஒன்ன கையெடுத்து கும்புடறேன்.."- என்று சொல்லி தன்னை கட்டி பிடித்து அழுத ராமநாதனின் அம்மாவை அன்போடு பார்த்த படி " பயப் படாதீங்கம்மா.. நான் நாளை மறு நாள் எங்கம்மா வீட்டுக்கு..மெட்ராசுக்கு போயிடுவேன்..ஒங்க பிள்ளை என்ன மறக்கிறா மாதிரி நடக்கும்..நாளைக்கு " என்றாள் மீனா.

அப்புறம் அண்ணன் வீட்டை விட்டு சென்னைக்கு வந்து தனது இளம் தளிர் காதலை கிள்ளி எடுத்தெறிந்து விட்டு குடும்ப சூழ்நிலையில் ராஜுவின் மனைவியாகி, இரண்டு பிள்ளைகளை பெற்று , அவன் உடல் நலம் குறைந்த வேளையில் வேலைக்கும் சென்று, பிள்ளைகளை சுமாராக படிக்கவும் வைத்து ........

இதோ .. இளையவனின் பிள்ளைகளோடு வந்து பீச் மணலில் அமர்ந்திருக்கிறாள்..மீனா.!..

மீண்டும் மனசுக்குள் " தெரியுமா.. நாதன்.. நான் மனசார உன்னைத்தான் விரும்பினேன் என்றும்.. அதை சொல்லக்கூட தைரியம் இல்லாமல் தான் பல இரவுகளை கழித்தேன் என்பதும் !.. வாழ்க்கை அப்படிதான்..நாம் ரெண்டு பேருமே சின்ன விகற்பம் கூட இல்லாமல் பழகியதும் சூழ்நிலைகளால் பிரிந்ததும் பிறகு ஏற்றுக் கொண்ட வாழ்க்கைக்கு உண்மையாக வாழ்ந்து வந்ததும் நம் மனங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.. உலகத்துக்கு அது தெரிந்தாலும் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள கூட முடியாது. நல்லா இரு நாதன்..!" என்று சொல்லிக் கொண்டாள் மீனா!

மீனா..ஏழைதான்..ஆனால் உள்ளத்தில் பெரும் பணக்காரி !

எழுதியவர் : karuna (24-Sep-14, 4:40 pm)
பார்வை : 219

மேலே