எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் - விரல் மாறும் தொடர்கதை பாகம் - 4 - கிருத்திகா தாஸ்

சத்தியமாய் வருவான் என்னுயிர் நண்பன் ....."சத்யா" ....


என்ற நம்பிக்கை நிறையவே உண்டு ஜீவிதாவுக்கு தன் நண்பன் மேல்...


ஆனால் , தன்னைப் பற்றிய விவரங்களை சத்யாவுக்குத் தெரியப் படுத்தலாமா வேண்டாமா.. அப்புறம் தன் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் தன்னைப் பற்றித் தெரிந்து விடுமே..


குழப்பம் மட்டுமே மிஞ்சியது , ஜீவிதாவுக்கு...


ஆயிற்று ..... கோவை வந்து இறங்கியாயிற்று...


கோவை முழுக்க சுற்றி , பல துரத்தல்களுக்கும் விரட்டி அடிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகு , வடவள்ளியில் ஒரு மூலையில் , ஒண்டிக் கொள்ள ஒரு சின்ன இடம் கிடைத்தது ஜீவிதாவுக்கு..


போக்கிடமே இல்லாமல் , எங்கு போவதென்றே தெரியாமல் அனாதையாக சுற்றித் திரிந்தவளுக்கு , அந்த இடம் சொர்க்கமாகத் தெரிந்தது...


இனி , அவள் யாருக்கும் பாரமில்லை..


அவள் , அவனாய் இருந்த போது அவன் மேல் உயிராக இருந்த அவனது பாட்டி ஆசையாகக் கொடுத்த பிறந்த நாள் பரிசான , அந்த தங்க சங்கிலியே இப்போது காப்பாற்றிக் கொண்டிருக்கிறது...

இனி , அவள் , அவள் மட்டுமே....


நாட்கள் உருண்டோடியது...வேளையில் சேரும் நாள் வந்தது...


மாவட்ட வருவாய் அலுவலகத்தில் டைபிஸ்ட் வேலை.......


அவளுக்கான முதல் அங்கீகாரம்.....என்று அவள் நினைத்தாள்..


முதல் நாள் அலுவலகம்...


மிகுந்த கனவுகளோடும் ஆசைகளோடும் , அலுவலகத்தின் உள் நுழைந்து நடந்து கம்பீரமாக நடந்து சென்றாள் ஜீவிதா..


ஆனால் அங்கு அவளுக்கு கிடைத்ததோ வேறு...


".ஏய்....என்னடா இது கூத்து......" , ஜீவிதாவைப் பார்த்து அங்கிருந்த ஒருவன் ..


".இங்க என்ன எதுனா ........................................" , இது இன்னொருவன்......


"ஹஹஹ....." , இது சுற்றி இருந்த எல்லாரும்.....


கேவலமான வார்த்தைகள் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவள்..


எத்தனை கூனிக் குறுகும் பார்வைகளும் ஜீவிதாவை அசைக்கக் கூட இல்லை....


அசராத ஒரு துணிச்சலை அந்த குறுகிய கால அவமானங்கள் அவளுக்குக் கொடுத்திருந்தது...


தனது நாற்காலியில் போய் அமர்ந்தாள்..


தனது மேஜை மேலிருந்த டைப்ரைட்டிங் மிஷினை , ஆனந்தமாகத் தொட்டுப் பார்த்தாள் ..


"ஜீவிதா மா.."


ஒரு குரல் கேட்டு , சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள்..


பியூன் தாத்தா டீ டம்ளரோடு நின்றிருந்தார்..


"அம்மாடி...இந்தாம்மா...டீ குடிச்சுட்டு வேலை பாரும்மா....இவங்க பேசுறதை எல்லாம் காதுல வாங்காத மா....இவங்க இப்படி தான்.....நீ நல்லா இருப்ப ........இந்தா...டீ ...குடி மா...."


சொல்லி விட்டு நகர்ந்து விட்டார் பியூன் தாத்தா.....முதல் முதலாக ஒரு கரிசன வார்த்தையைக் கேட்டு தொண்டையில் வார்த்தை வரவில்லை அவளுக்கு..


அந்த டீ டம்ளரை எடுத்து , கண்களில் கண்ணீரோடு குடித்தாள்..


சுற்றி பலர் இருந்தும் , தனிமையாக மட்டுமே ஓடியது அந்த நாள்..அந்த இடம்..அந்த சூழல்..


மதிய உணவு இடைவேளை வந்தது..


டிபன் பாக்ஸோடு இவள் வந்து டைனிங் டேபிளில் உட்கார , டேபிளில் இருந்த அனைவரும் இவளைப் பார்த்து அருவருப்பாக முகத்தை வைத்துக் கொண்டு பட்டென்று எழுந்து சென்று விட்டனர்..


அவர்களின் நடவடிக்கையைப் பார்த்து குனிந்தபடியே உட்கார்ந்து இருந்தாள் இவள்.... மனம் சுத்தமாக நொந்தே போனது...


சாப்பாட்டை சாப்பிடாமல் பிசைந்து கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தாள்...


சட்டென்று யோசனையைக் கலைத்தது , இவளின் பின் புறம் இருந்து வந்த அந்தக் குரல்..


"நீ...நீ..........."


சற்று பரிச்சயமான குரல்...


சடாரென்று திரும்பிப் பார்த்தாள் ஜீவிதா...


தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்..........


ஐயோ.........இது...இவள்..........சரஸ்வதி........ சத்யாவின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருந்த பெண்......சத்யாவின் காதலி..........


ஐயோ.....இவள் என்னை அடையாளம் தெரிந்து கொண்டாளா....


நம்மை யாருக்கும் தெரியாத தூரம் அப்படின்னு ஒன்னு இல்லவே இல்லையா உலகத்துல...


நொந்து போன ஜீவிதா , சரஸ்வதியைப் பார்த்த வேகத்தில் பட்டென்று டிபன் பாக்சை மூடி , அங்கிருந்து வேக வேகமாக நகர முயற்சி செய்தாள்..


"ஜீவா............நில்லு..........."


சற்று கடுமையான ஆனால் உறுதியான குரலில் சொன்னாள் சரஸ்வதி.......


ஜீவிதாவின் கால்கள் நின்றன....அவளையும் மீறி........


குனிந்த தலையை நிமிர முடியாமல் , அப்படியே திரும்பி நின்றாள் ஜீவிதா........


"ஜீவா...நிமிந்து பார்...."


வார்த்தை உதடு வரை வந்து வந்து உள்ளே சென்று வெளி வந்து விழுந்தது ஜீவிதாவுக்கு..


"என் பேர் ஜீவா இல்ல..........ஜீவிதா..........."


அழுகையினூடே ஜீவிதா கூனிக் குறுகி சொல்வதைக் கேட்ட சரஸ்வதிக்கு , அழுகை பொங்க ,


"என்னைப் பார்த்ததும் எதுக்கு ஓடி ஒளியிறே நீ....நான் என்ன உனக்கு எதிரியா........?"


".................."


"உன்னை எனக்கு அடையாளம் தெரியாதுன்னு நினைச்சியா...காலைல இருந்து உன்னை பாத்துட்டு தான் இருக்கேன்....."


எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள் ஜீவிதா.......


"நீ இங்க வரப் போறதா சத்யா என்கிட்டே சொல்லவே இல்ல...?"


"நான் இங்க வரப் போறதா நானே அவன்கிட்ட சொல்லலை சரஸ்வதி........."


"ஏன் ..........."


"நான் ..யாரும் இல்லாம வாழ நினைக்கிறேன்.........எனக்கு யாரும் வேண்டாம்......."


"சத்யா கூடவா ..........வேண்டாம்........"


அமைதி


ஜீவிதா குறுகிப் போய் குற்றவாளி மாதிரி நிற்பதைப் பார்த்த சரஸ்வதி மனம் தாங்காமல் ,


"நான் சத்யாவுக்கு போன் பண்றேன்...."


"ஐயோ சரஸ்வதி.சொன்னாக் கேளு......வேண்டாம்....நான் .செத்துப் போனதா இருக்கட்டும் எங்க வீட்டுக்கு.........நானுன்னு ஒருத்தி...ஒருத்தன்....வேண்டாம் சரஸ்வதி....இனி யாருக்குமே நான் வேண்டாம்....என்னை விட்டுருங்க......நான் போய்டுறேன்........"


"நான் சொல்றதைக் கேளு ஜீவா....இல்ல......சாரி.ஜீவிதா...நான் சத்யாவுக்கு போன் பண்றேன்....."


"நான் அருவருப்புன்னு எல்லாரும் நினைக்கிறாங்க...நான் அசிங்கமுன்னு எல்லாரும் என்னை ஒதிக்கிட்டாங்க......." , உடைந்தே இருந்தது குரல்..


"அப்படி சத்யா உன்னை நினைச்சானா.."


"................"


அவள் மனம் , யாரேனும் கிடைக்க மாட்டார்களா தனக்காக யாரேனும் இருக்க மாட்டார்களா என ஏங்கியதை சரஸ்வதியால் உணர முடிந்தது..


இனி ஜீவிதாவிடமிருந்து அனுமதி தேவை இல்லை சரஸ்வதிக்கு..


அவள் சத்யாவுக்கு போன் பண்ணினாள்.....ஸ்பீக்கர் ஆன் பண்ணி விட்டாள்..


ரிங் அடிப்பதைக் கேட்க கேட்க , பேசி விட மாட்டோமா சத்யாவிடம் என்று இருந்தது..ஜீவிதாவுக்கு...


"ஹலோ..........."..........சத்யா............


அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒரு உறவின் குரல்.....அது...


சத்யா பேசினான்...ஸ்பீக்கரில் அவனது குரலைக் கேட்டு தொண்டை அடைக்க நின்று இருந்தாள் ஜீவிதா..


ஜீவிதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சத்யாவிடம் பேசினாள் சரஸ்வதி..


"ஹலோ.....சத்யா........நான் சரஸ்வதி...உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்........இங்க என் கெஸ்ட் ஒருத்தங்க இருக்காங்க..ரொம்ப முக்கியமானவங்க.........நமக்கு ரொம்ப ஸ்பெசலானவங்க கூட.....அவங்க உங்க கிட்ட பேசனுமுன்னு விருப்பப்பட்டு காத்துக்கிட்டு இருக்காங்க சத்யா....நீங்க பேசுறிங்களா....."


"ம்ம்...குடு மா....பேசுறேன்..."


புன்னகைத்துக் கொண்டே போனை ஜீவிதாவிடம் நீட்டினாள் சரஸ்வதி...


போனை வாங்காமல் அமைதியாகவே இருந்தாள் ஜீவிதா..


"ஹலோ.....ஹலோ........சரஸ்......ஹலோ.........." , இது சத்யா..


ஸ்பீக்கரில் சத்யாவின் குரலைக் கேட்க கேட்க , வைராக்கியம் உடைந்தது ஜீவிதாவுக்கு...


மெதுவாக , அவளையும் அறியாமல் கை நீண்டது போனுக்கு.....


வாங்கி காதில் வைத்தாள்...அப்பவும் பேசத் தயக்கம்......


பேசலாமா வேண்டாமா......


பேசலாமா வேண்டாமா..................


நீண்ட யோசனைக்குப் பிறகு.........


"ஹ........ஹலோ....." , பெரிய தயக்கத்திற்குப் பிறகு....ஜீவிதா...


"ஹலோ........" , இது சத்யா.....


குரலும் மனமும் ஒரே நேரத்தில் உடைந்து போனது ஜீவிதாவுக்கு....சத்யாவின் குரலைக் கேட்டு..


"ஹலோ.......சத்யா...........நான் ஜீவிதா.......உன்னோட ஜீவாடா........."


அடக்கி வைத்திருந்த அழுகை தாங்க முடியாமல் வெளி வர .........பொத்தென்று அருகில் இருந்த நாற்காலியில் விழுந்து டைனிங் டேபிள் மேல் படுத்து வெடித்து அழுதாள் ஜீவிதா.....


அவள் அழுவதைப் பார்த்து போனை மெதுவாக வாங்கிய சரஸ்வதி , ஜீவிதாவைப் பற்றிய விவரங்களை சத்யாவிடம் முழுதாக சொன்னாள்....


போனைக் கட் பண்ணி விட்டு , ஜீவிதாவின் தலையில் ஆறுதலாகக் கை வைத்து வருடிக் கொடுத்த சரஸ்வதி , மெதுவாக சொன்னாள்..


"ஜீவிதா.........நாளைக்கு சத்யா......உன் சத்யா .உன்னைப் பாக்க கோயம்புத்தூர் வரான்......."


பட்டென்று நிமிர்ந்து பார்த்த ஜீவிதாவின் கண்கள் மின்னியது......


அவளது மகிழ்ச்சியைப் பார்த்த சரஸ்வதி , "ஆமா ஜீவா......."


ஜீவா என்று மறுபடி சரஸ்வதி அழைக்க , சற்று நொந்து போனவளாக சரஸ்வதியைப் பார்த்தாள் ஜீவிதா..


"அச்சோ.சாரி சாரி......இனி ஜீவிதா தான்....."


மகிழ்ச்சியாக ஜீவிதாவின் தோளில் கை வைத்து , ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சரஸ்வதி...


சத்யா வருகிறான்....நாளை.....


இனி வாழ்நாளில் பார்ப்போமா மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த என் ஒரே உறவு . சத்யாவை நாளை பார்க்கப் போகிறேன்..


நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்து இருந்தாள் ஜீவிதா , மகிழ்ச்சியும் அழுகையும் மாறி மாறி..


அடுத்த நாள் காலை....


அலுவலகத்திற்கு சற்று சீக்கிரமாகவே வந்து விட்டிருந்தாள் ஜீவிதா....அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை...இரவெல்லாம் தூக்கமில்லை.......


சத்யா....சத்யா.....சத்யா......


மனசெல்லாம் இந்த ஒரே பெயர் மட்டுமே..ஓடிக் கொண்டிருந்தது...


அன்று நாள் முழுக்க வேலை கூட சரியாக ஓடவில்லை...


மாலை ஐந்து மணி எப்போது ஆகுமென்று காத்திருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு புறப்பட்டாள்..


"என்ன ஜீவிதா......ப்ரெண்ட் வர்ற சந்தோசத்துல என்னை மறந்துட்டியே...."


அவசரமாகக் கிளம்பிய ஜீவிதாவைத் தடுத்து நிறுத்தியது சரஸ்வதியின் குரல்..


"அச்சோ அப்படி எல்லாம் இல்ல...." , என்றாள் ஜீவிதா குனிந்து புன்னகைத்துக் கொண்டே..


"அச்சோ பார்ரா......" , அவளை விளையாட்டாய்க் கிண்டல் செய்தவள் , "சரி சரி ரொம்ப வெக்கப் படாதே.......உன்கிட்ட போன் இருக்கா......"


இல்லையே என்பது போல் வருத்தமாக நிமிர்ந்து பார்த்தாள் ஜீவிதா...


"இந்தா இந்த போனை வெச்சுக்கோ......அதுல சத்யா நம்பர் சேவ் பண்ணி வெச்சு இருக்கேன்......கூப்பிட்டு பேசு......இன்னிக்கு நைட்டு 11.30 மணிக்கு நீ அவனோட நேர்ல பேசிட்டு இருப்பே...."


ஆனந்தத்தில் கைகள் நடுங்க , போனை வாங்கி கொண்டாள் ஜீவிதா...


அவளது மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்துக் கொண்டு , அவளின் கன்னத்தில் தட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சரஸ்வதி.....


நீண்ட நேரம் போனையே பார்த்துக் கொண்டிருந்தவள் , பஸ்சில் வீட்டுக்கு போகும் வழியெல்லாம் கூட , அதில் உள்ள சத்யாவின் நம்பரை திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்...


சரஸ்வதி , ஜீவிதா தங்கியிருந்த இடத்தின் விலாசத்தை , சத்யாவுக்கு சொல்லி இருந்தாள்.. சத்யா அன்றிரவு பஸ்சில் கோவை வந்து ஜீவிதாவின் வீட்டிற்கு வந்து விடுவான்...


சத்யா.....


இன்னிக்கு அவனைப் பார்க்கப் போகிறாள் என்ற மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் நிலை கொள்ளாமல் இருந்தாள் ஜீவிதா...


ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியாகக் கரைந்தது அவளுக்கு...


இரவானது...


மணியைப் பார்த்தாள்...10.30...


இல்லை...இதற்கு மேல் பொறுமை என்று ஒன்று இல்லவே இல்லை..


ஒரு முடிவுக்கு வந்தவளாக , வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள் , பேருந்து நிலையத்திற்கு..


நேரிலேயே சென்று சத்யாவை அழைத்துக் கொண்டு வந்து விடுவோம்....என்று.....


ஒரு ஆட்டோ பிடித்து முழுதாக அரை மணி நேரப் பயணத்திற்கு பிறகு , பேருந்து நிலையத்திற்கு வந்தாள்..ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது..


கோபிச்செட்டிப்பாளையம் பேருந்துகள் நிற்கும் ஏரியாவில் அவள் கண்கள் அலைந்தன....சத்யாவைத் தேடி....


நொடிக்கொருமுறை மணியைப் பார்த்தாள்..


'ம்.இவளோ நாள் பொறுத்தோம்....இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்க மாட்டோமா..'


யோசித்தவாறே , அங்கிருந்த ஒரு திட்டின் மேல் அமர்ந்தாள்..


சின்ன வயது முதல் நேற்று வரையிலான வாழ்க்கை ,, காட்சிகளாக கண் முன் ஓடியது...


அம்மா.........அப்பா...............சத்யா..........என் சத்யா.................


இன்னும் கொஞ்சம் நேரத்தில் பார்க்கப் போகிறேன் சத்யாவை...


இன்னும் கொஞ்சம் நேரத்துல , எல்லாம் சரி ஆகிடும்....


நாளை காலை என்பது ஒரு புது விடியலாக இருக்கப் போகிறது..


என் வாழ்வில்...


எல்லாம் சரியாகி விடும்..


இனி , சந்தோசம் மட்டுமே..


சந்தோசம் மட்டுமே..


நினைக்க நினைக்க , மகிழ்ச்சியில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது ஜீவிதாவிற்கு..


அவளையும் அறியாமல் சிரித்துக் கொண்டே இருந்தாள் கண்ணீரின் ஊடே...


உலகமே ஆனந்தமாக தெரிந்தது அவளுக்கு..


அப்போது ,,,,,,,


சட்டென்று யோசனையை கலைந்தது , அவளைக் கடந்து சென்ற எவனோ ஒருத்தன் குடி போதையில் பொத்தென்று இவள் மேல் வந்து விழுக..


எரிச்சலான இவள் , "பாத்து போங்க சார்...." , கொஞ்சம் கோவமான குரலில்..


இவள் மேல் விழுந்தவன் அவளைத் தாண்டிப் போய் , பின்பு இவள் குரல் கேட்டு , இரண்டு ஸ்டேப் பின்னாடி வந்து பார்த்தான்...


இவளை அவன் அப்படி உற்றுப் பார்த்தது , இவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது வெகுவாக..


"என்ன சார் வேணும்...." , கடுப்பாக..


"இல்ல ல ல ....சும்மா தான் பாத்தேன் ...." , இழுத்தான் அவன்...போதையில்...


அவள் , எரிச்சலில் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள்...


அவனோ , ஜங்கென்று அந்தத் திட்டின் மேல் இருந்து குதித்து , அவள் அருகில் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்தான்..


"ஏய்........வா......." , கேவலமான தொணியில்...


"என்ன....." , கோவம் உச்சக்கட்டமாக மாறியது ஜீவிதாவிற்கு.....


"ஏய்...சிலுக்கு ..... வாடின்னு சொல்றேன் இல்ல.....சிலுத்துக்குறியே என்னமோ....."


"சார்...நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க......."


"எல்லாம் சரியாத்தாண்டி புரிஞ்சுக்கிட்டு இருக்கேன்......" , என்று சொல்லி அவளது கையை இறுக்கப் பிடித்தான் அவன் , குடி போதையில்.......


அவனது பிடியில் இருந்து கையை விடுவித்துக் கொண்டு , அவனிடமிருந்து தப்பிக்க , அவள் அங்கிருந்து எழுந்து வேகமாக நகர்ந்தாள்..


வேக வேகமாக நடந்தவளை , இவனும் வேக வேகமாக பின் தொடர்ந்தான்..


ஜீவிதா இவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே , வேகமாக நடந்து கொண்டே இருந்தாள்..


பேருந்து நிலையத்தின் கழிவறைப் பக்கம் அவள் செல்ல , வேகமாகப் பாய்ந்த அவன் ,, கழிவறைக்குள் அவள் செல்வதற்கு முன் அவளை இழுத்துக் கொண்டு கழிவறைக்குப் பின் புறமிருக்கும் புதர் போன்ற மறைவான இடத்திற்கு சென்றான்...


"டேய்......விடுடா.......விடுடா என்னை....."


இவள் அவனது கையை விலக்கி விட முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்..


அந்த புதருக்குள் இவளை அவன் தள்ள , அவள் தடுமாறிக் குப்புற விழுந்து கிடந்தாள்..


"அம்மா....." , அனத்திக் கொண்டே சிரமப்பட்டு எழுந்தவள் ,


"சார்........என்னை விட்டுருங்க...........நான் போய்டுறேன்....என்னைப் போக விடுங்க....." , கும்பிட்டுக் கெஞ்சினாள்..


அவன் இவள் பேசியதை எல்லாம் காதில் கூட வாங்காமல் , இவளது துப்பட்டாவை உருவி புதருக்குள் வீசினான்..


"ஐயோ ....யாராவது வாங்களேன்........."


கேட்க ஆளின்றி அலறினாள் ஜீவிதா பரிதாபப்பட்ட குரலில்..


அவன் இவளருகில் வந்து , அவன் முகத்தைக் கொண்டு வந்து இவள் முகத்தோடு உரச ,


"ச்சீ நாயே ..." , உச்சக்கட்ட அருவருப்பு கொண்டு இரண்டு கைகளாலும் நெட்டித் தள்ளி விட்டாள் அவனை..


"என்னடி.என்னமோ பத்தினி மாதிரி சிலுத்துக்குரே...கிராக்கிக்காகத்தானேடி உக்காந்துட்டு இருந்தே அங்க.....?"


என்று சொல்லி , அவளது சுடிதார் டாப்பின் கழுத்தில் கை வைத்து அவன் வெறித்தனமாக இழுக்க , சுடிதார் சர்ரென்று கிழிந்தது......


கிழிந்த சுடிதாரை குனிந்து பார்த்த அவளுக்கு , கோவம் கண்ணை மறைக்க ,


"டேய்..........." ,


என்று அலறிக் கொண்டே இருந்த பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து , இரண்டு கைகளாலும் அவனை தர தரவென்று தள்ளிக் கொண்டு போய் பொதேரென்று மொத்தமாகத் தள்ளி விட்டாள் மண்டிக் கிடந்த புதருக்குள்....


அவன் , புதருக்குள் மல்லாக்க விழுந்து கிடந்தான்...


ஆத்திரத்தோடு அவனைப் பார்த்த ஜீவிதா , கீழே கிடந்த அவளது துப்பட்டாவை எடுத்துப் போர்த்திக் கொண்டு சுடிதார் கிழிந்து இருந்த இடத்தை துப்பட்டாவால் நன்றாக மறைத்துக் கொண்டு , ஆடை முழுவதையும் சரி செய்து கொண்டு நிமிர்ந்து அவன் விழுந்து கிடந்ததைப் பார்த்த போது ........


கொஞ்சம் கூட அசைவே இல்லாமல் கிடந்தான் அவன்...


அதைப் பார்த்து சற்று பயம் தொற்றிக் கொண்டது அவளுக்கு..


மலங்க மலங்க விழித்துக் கொண்டே , அவன் அருகில் மெதுவாக நடந்து சென்று , மண்டிக் கிடந்த புதரை சற்று விலக்கிப் பார்க்க


ஐயோ...


உயிர் போக அதிர்ந்தாள்.......


அங்கு ......அவன்........


ரத்த வெள்ளத்தில்....மண்டை பிளந்து .....பிணமாக அவன்............அவனது மண்டைக்கடியில் ஒரு பாறாங்கல்......


உடல் விறைக்க அதிர்ந்தவள் , படாரென்று தூர தள்ளி நின்றாள்...கை கால்கள் பயத்தில் அடித்துக் கொண்டது அவளுக்கு..


குளிரையும் தாண்டி வியர்த்து நனைத்தது...


ஐயோ............ஐயோ.................


". ஏ ......ஏய்.........." , என்று அவனை பார்த்து கொண்டே அவனருகில் ஓடி சென்று அவனது மூக்கில் கை வைத்துப் பார்க்க ,


"ஐயோ ........"


மூச்சு இல்லை.....வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டாள் .....முகம் சில்லிட்டுப் போயிருந்தது இவளுக்கு..


ஐயோ .என்ன செய்வது.......இப்போ என்ன செய்வது...கடவுளே...


அவனுக்கு அருகிலேயே போய் உட்கார்ந்து கொண்டு , தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்..


"ஐயோ கடவுளே........டேய்........நான் பாட்டுக்கு சும்மா தானேடா உக்காந்துட்டு இருந்தேன்......நீயாத்தானே டா வந்தே.....படுபாவி....."


இரண்டு கைகளாலும் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு கதறி அழுதாள்..


ரத்த வெள்ளத்தில் மண்டை பிளந்து கண்கள் தெறித்து மல்லாக்க விழுந்து கிடந்த அவனது பிணத்தை பார்க்க பார்க்க பயம் , கொடூர பயமாக மாறிக் கொண்டிருந்தது அவளுக்கு...


"டேய்.......விளங்காதவனே.......இப்போ தாண்டா ஒரு நரகத்துல இருந்து தப்பிச்சு வந்தேன்........இனி எல்லாம் சரியாகுமுன்னு நம்பினேனேடா ,.....ஐயோ.....மொத்தமா போச்சேடா........"


கைகளுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதாள் ....


"டேய்....... இப்ப நான் என்னடா பண்ணுவேன்..........ஐயோ........"


சுற்றி எங்கும் இருந்த அமைதி பீதியைக் கொடுத்தது இவளுக்கு...


அங்கு ஓரத்தில் படுத்திருந்த ஒரு நாய் , திடிரென்று ஊளையிட்டது...


அதைக் கேட்டு அதிர்ந்து போய் விருட்டென்று எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தாள்..முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே..


பயத்தில் உயிர் போய்க் கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாய்..


படாரென்று எழுந்து நின்றவள் ....சுத்தி முத்திப் பார்த்தாள் .....


கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாருமே இல்லை.........


விழுந்து கிடந்தவனது பிணத்தைப் பார்த்தாள்...சுற்றிலும் யாரும் இல்லை...இங்கு நடந்த எதையும் யாரும் பார்க்கவும் இல்லை..


ஆம்....


சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் , வேக வேகமாக கீழே விழுந்து கிடந்த இவளது கைப் பை போன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள்....


வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே பார்வை எல்லாப் பக்கமும் ஓட விட்டாள்..


மிக மெதுவாக சத்தமில்லாமல் அவள் அங்கிருந்து நகர முற்பட , , ஊளையிட்டுக் கொண்டே இருந்த , அந்த நாய் இவளைப் பார்த்துக் குறைத்துக் கொண்டே ஓடி வந்தது......


இவளைப் பார்த்து வேகமாக ஓடி வந்த அந்த நாயைப் பார்த்து பயந்த ஜீவிதா , , அதனிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்..


ஓடினாள் ....


இத்தனை நாள் பல இரண்டு கால் நாய்களால் துரத்தப் பட்டவள் , இப்போது ஒரு நான்கு கால் நாயைப் பார்த்து ஓடினாள்..


ஓடிக் கொண்டே இருந்தாள் .....


அதே நேரத்தில் ,


பேருந்து நிலையத்தில் , பெருத்த ஹாரன் ஒலியோடு வந்து நின்ற அந்தப் பேருந்தில் இருந்து முதல் ஆளாக இறங்கினான் , சத்யா...


தூரத்தில் .......


வெகு தூரத்தில்.......


இன்னும் தூரத்திற்கு......


வெகு தூரத்திற்கு ஓடி விடும் முடிவோடு , ஓடிக் கொண்டிருந்தாள் ஜீவிதா...


பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கிய சத்யா , ஜீவிதாவின் போனுக்கு அழைத்தான்...



திரும்பிப் பார்க்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள் , ஜீவிதா...

ஜீவிதாவின் போனுக்கு அழைத்துக் கொண்டிருந்தான் சத்யா...


ஜீவிதா

சத்யா



ஜீவிதா...............இனி..................




- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (26-Sep-14, 2:37 pm)
பார்வை : 224

மேலே