மழை
வானம் பார்த்திருந்த விவசாய நிலங்கள்
மானம் அற்று எம் பதின் பருவத்தினர் போல்
பயிர்களேன்னும் கூறை உடுத்த மறந்து நிற்கின்றன;
வளமான கிணற்றடிகள்
விதவையென வெறிச்சோடிக் கிடக்கின்றன!
அழகான ஆற்றங்கரைகள்
ஆழப்படுத்தப்பட்டு உயிர்களுக்கு எமனாய் நிற்கின்றன!
மிடுக்காய் முகம் மலர்ந்திருந்த மலைகள்
முகமறைத்துப் புலம்புகின்றன!
எல்லாம் உன்னால்-இவை
எல்லாம் உன்னால் மழையே!!
கண்ணகி இல்லையென்றா
கண்ணாமூச்சி ஆடிச் செல்கின்றாய்?
பாரதி இல்லையென்றா-எம்மைப்
பாழாக்கி நிற்கின்றாய்?
சீதை இல்லையென்றா-எம்மக்களைச்
சீரழிக்கின்றாய்?
அருந்ததி இல்லையென்றா
அலைக்கழிக்கின்றாய்?
ஆதிரை இல்லையென்றா
ஆட்டிப்படைக்கின்றாய்?
காதலில் வீழ்ந்தாயோ வானவனிடம்?
காத்திருக்கின்றாய் அவனுக்காக-எங்களைக்
கதறவைக்கின்றாய் உனக்காக!
உன் தாய் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றாள்,
உன்னால் மட்டுமே அவளை ஆற்றுப்படுத்த முடியும்;
சுமந்தவள் சோகத்துடன் இருக்கின்றாள்,
சுகமாக்க உன்னால் மட்டுமே முடியும்:
வரதட்சணை என நீரைப் பறித்துகொண்ட நீ,
வரமாக வரமாட்டாயா எனத் தவமிருக்கிறாள்.
காத்திருக்கிறாள் அன்பு மகளைக் காண
கானல் நீராய் மறையாதே!
கவலைத் தீர்க்கக் கண்ணீர்த் துடைக்கக்
காதல் கொண்டு பொழிவாயே!!!