மனிதாபிமானத்துக்கும் நிறமுண்டு------அஹமது அலி-----
அமெரிக்க ஏகதிபத்தியத்தின்
அடிமை விலங்குகளே...
மேல்நாட்டு ஊடகங்களின்
ஊளையிடுதலை செவியேற்று
செவிடான செவிடர்களே...
சாதியப் பிசாசுகளின்
சகுனிப் பிடியில்
சல்லாபித்துக் கிடக்கும்
சபலையர்களே....,
ஐநா சபையை
அநியாயத்துக்கு நம்பித் தொலைக்கும்
அம்மாஞ்சிகளே...
மனிதாபிமானத்துக்கு
புதிதாக நிறம் கொடுத்துப் பார்க்கும்
புத்தி ஜீவிகளே...
மேதாவித் தனத்தில் மிதந்து
கோமாளியாய் போன
ஏமாளிகளே...
அடிமைத்தனத்தை
எதிர்ப்பவரெல்லாம் இங்கு
தீவிரவாதியாம்...
அமெரிக்காவை
எதிர்ப்பவரெல்லாம்
பயங்கரவாதியாம்...
அடிமைத்தனத்தையும்
அமெரிக்காவையும்
எதிர்த்த சிலர் மட்டும்
போராளிகளானார்கள்...
அடிமைத்தனத்தையும்
அமெரிக்காவையும்
எதிர்த்த சிலர் மட்டும்
தீவிரவாதிகளானார்கள்...
ஏனிந்த பாகுபாடு?
எதற்கிந்த இரட்டை நிலை?
நடுநிலை செம்புகள்
நழுவுவதும் ஏனோ?
பிரிவினையைச் சொல்லி
ஆயுதம் விற்பவரையும்
அரசியலில் நிற்பவரையும்
அறிந்தும் ஆழ்ந்த மெளனம் ஏன்?
அடி வாங்கும் போது
பார்த்து ரசிப்பதும்
அடிபட்டவன் திருப்பி
அடிக்கும் போது
தீவிரவாதி என்பதும்
மனிதாபிமானத்தின் உயர் பாடாமா?
அற்ப காரணங்களுக்கு
போராடுபவனெல்லாம் போராளி
தாய் நாட்டை மீட்க
போராடுபவன் தீவிரவாதி...
அபிமானிகளுக்கு காட்டும்
அபரிமிதமான மனிதாபிமானம்
மெச்சத்தக்கது...
அபிமானமல்லாதவர்க்கு
காட்டாத மனிதாபிமானம்
துரதிஷ்ட வசமானது!