ஒட்டுக் கேட்கும் சுகம்

ஒட்டுக் கேட்பதிலே
கிடைக்கின்ற சுகத்தையெல்லாம்
ஓரிரு வார்த்தைகளில்
உரைத்திட முடியாது
அமுதத்தைச் சுவைத்தவன்
அதன்சுவையை எல்லோர்க்கும்
பகிர்ந்தளிக்க முடியாது
ஒட்டுக் கேட்தில்
வருகின்ற இன்சுவயும்
அனுபவித்தோரே அறிவார்
சுற்றியுள்ள வீடுகளில்
நடக்கின்ற கதைகளை
ஒட்டுக் கேட்பதற்கு
துணிச்சல் மட்டும் போதாது
காதைத் தீட்டி
கவனத்தை ஒருங்கிணைத்து
காத்திருக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும்
குறிப்பிட்ட நேரங்களில்
உம்மைப்போல் எல்லோரும்
கமக்கமாய் இருப்பதில்லை
ஓட்டைவாய் மனிதர்கள்
ஒவ்வொரு செயலையும்
வாய்விட்டுப் பேசியே
வழிப்போக்கன் காதுக்கும்
அவர்வீட்டுக் கதைகளை
வாரி வழங்கிடுவார்.
அருகில் குடியிருக்கும்
எனைபோன்ற பெண்களுக்கு
அதைக்கேட்டும் கேளாமல்
இருப்பதுவா பெருமை?
சிலநிமிடம் நின்றாலும்
பலகதைகள் விருந்தாகும்
அவற்றில் சிலசமயம்
உண்மைகளும் மறைந்திருக்கும்
கேட்டதை மனதில்
பூட்டிவைக்க முடியாது
பகிர்ந்திடக் காத்திருப்பார்
எனைபோன்ற பெண்களெல்லாம்
அக்கினி வெயிலா
அடைமழைக் காலமா
எப்பருவம் என்றாலும்
எமைப்போன்று அலைபவர்
எந்நேரம் என்றாலும்
அழைப்பிற்கு செவிசாய்க்க
ஆவலுடன் காத்திருப்பார்.
அவர்கள் கூட்டணியில்
கதைகள்பல பின்னிடலாம்
கேட்பது ஒன்று என்றால்
நாலாக்கித் தருவதற்கே
நாவிருக்கும் எமக்கெல்லாம்
கற்பனை வளங்கூட்டி
கதையொன்றைக் காவியமாய்
உருமாற்றிக் காட்டினால்
சுவையான வதந்திகளை
ஊரெங்கும் பரப்பலாம்
உண்மையை நம்பத்தான்
யோசிப்பார் பலபேர்கள்
வதந்திக்கு மட்டுமே
சிறப்பான மரியாதை
இப்படித்தான் சிலபெண்கள்
பொழுதினைக் கழிக்கின்றார்
அவர்களில் நானுமோரு
கைதேர்ந்த பெண்ணாவேன்
எங்களுக்கு மகிழ்ச்சி
நாள்தோறும் இலவசம்
பலபேரின் நற்பெயரைக்
களங்கப் படுத்தி
களிப்புற்று வாழ்வதே
எங்களுக்குக் குறிக்கோளாம்.