தாயீ
எந்தாயீ ஒன்வயித்தில்
ஏன்வந்து நான்பொறந்தேன் ?
முந்திபெத்த மூத்தவனா
முள்ளாக ஏன்முளச்சேன்?
என்சிரிப்ப நீரசிப்ப
நாந்திங்க நீபசிப்ப !
ஒன்பசியப் புரியாத
ஒண்ணுக்கும் ஆகாத ....
என்ன ஏன் பெத்தாயோ?
ஏன் தினமும் செத்தாயோ?...
பால்கொடுத்து வளத்தவளே
பக்குவமா பாத்தவளே!
காலமுக்கி எனக்காக
கண்தூக்கம் தொலச்சவளே!
காலஉதறி நான் அழுதா
கக்கத்தில் அனச்சவளே!
காச்சளுன்னா நீதுடிப்ப
கண்திருஷ்டி கழிச்சி வப்ப !
மூச்செல்லாம் என வச்சி
முழுசா நீவாழ்ந்திருப்ப !
என்னென்ன கற்பனையோ
என்னை பத்தி கண்டிருப்ப?
உன்னைவிட்டு போகேன்னு
உத்தமியே நினைச்சிருப்ப ...
நீதந்த உடம்பாலே
நான் பெத்த அறிவெல்லாம்
நீர்மேலே நெருப்பாச்சு
நிலையில்லா கதவாச்சு !
இப்போது நீ இருக்க...
நான் தூரம் போய்விட்டேன் !
எப்போதும் உனக்காக
இரவுபகல் இறைஞ்சிடுறேன் ..
அடுத்த சென்மம் இருக்குன்னு
ஆராரோ சொல்றாங்க
கொடுத்து வச்ச மகராசி
கொடுமைக்கார புள்ள என்ன
எடுத்தும் வளக்க நெனைக்காதே
ஏறெடுத்தும் பாக்காதே !
படுத்தும் பாவம் போதுமம்மா !
பட்ட மரமாய் ஆனேனம்மா ..