நியூட்டனின் மூன்றாம் விதி

நமது
போராட்டங்கள்
கேயாஸ் தியரிப்படி
இப்பிரபஞ்சத்தில்
ஏற்படுத்தும் விளைவுகள்
அவர்களுக்குப்
புறக்கணிக்கத்தக்கவை !

இஃது
இன்னோர் விடுமுறை
என்றுதான்
அவர்கள்
கடந்துபோகிறார்கள்
நமது
கடையடைப்புக்களை !

மூன்று
நாட்களுக்கு மேல்
பேருந்துகளை
முடக்கி வைத்தால்
அது
நமக்கே பதிப்பு
என்று அவர்களுக்கு
நன்றாகவே தெரியும் !

உண்ணாவிரதங்கள்
நமது
வயிற்றினில் ஏற்படுத்தும்
நீர்த்த அமிலங்களில்
அவர்கள்
நீச்சல் பழகுகிறார்கள் !

நாம்
நாளெல்லாம்
நின்று கத்திச்செய்யும்
ஆர்ப்பாட்டங்களால்
அதிகப்பட்சம்
அன்று மாலை
மழை வரலாம் .........
அவ்வளவே !

நமது
மொட்டை போடுதல்களையும்
தீச்சட்டி ஏந்துதல்களையும்
சத்ரு சம்ஹார
யாகங்களையும்
முன்னெப்போதும் போலவே
இப்போதும்
அசுவாரசியமாய்ப்
பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்
கடவுள் !

நமக்கான
தியாகிப்பட்டம்
சுமந்துவரும்
செய்தித்தாள்களின்
தற்கொலைப்
பெட்டிச் செய்திகள்
காலப்பெருநெருப்பில்
அழிந்து போகலாம்
நம்மைப் போலவே .........!

அப்போதும்
இப்போதும்
எப்போதும் ..........
கைகட்டி
வேடிக்கை பார்க்கவும்
இரும்புக்கரம் கொண்டு
அடக்கவும்
இருக்கவே இருக்கிறது
அவர்கள் வசம்
காவல்துறை !

இறுதியில் ........

போராடிப்போராடி
ஒருநாள் முற்றாக
ஓய்ந்து விடுவோம்
என்ற
அவர்கள் நம்பிக்கையை
நாம்
பொய்யாக்குவதில்லை !

என்ன .......
நாளை
அவர்களின்
நலம் வேண்டியும்
அவர்களுக்கே
அவர்களுக்காக நடக்கும்
மேற்கண்ட
அதே போராட்டங்களின்
அதே செயல்படாத்தன்மையில்
நியூட்டனின்
மூன்றாம் விதி
அவர்களுக்கும்
பொய்த்துப் போகலாம் !

எழுதியவர் : குருச்சந்திரன் (6-Oct-14, 3:18 pm)
பார்வை : 412

மேலே