மதம் கொண்ட யானைகள்

என்னை ஒரு கேள்வி எப்போதும் ஆக்கிரமிக்கும் ...
நம் தமிழ் மண்ணில் பல மதங்கள் எந்த வித அடக்குமுறை இல்லாமல் பரவலாக பின்பற்ற படுகிறது .
பவுத்தம் ,சமணம் ,கிறிஸ்துவம் ,இஸ்லாம் என இங்கு பின்பற்ற படும் எந்த மதமும் தமிழ் சமூகத்தில் திணிக்க பட்டதில்லை மாறாக மக்களால் பின்பற்ற பட்டு வளர்ந்து இருக்கிறது .
வரலாறுகளில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக அடக்கு முறைகள் ஆட்சியாளர்களால் பயன்படுத்த பட்டிருக்கிறது குறிப்பாக சமண ,பவுத்த ,சைவ வைணவ நெறிகளுள் ஏற்பட்ட அடக்குமுறைகளை காணலாம் .
இன்னும் சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சமண மதமும் மகாவீரர் தோற்றுவித்த சமணமுமும் ஒரே மதம் இல்லை என்பதை கால முரண்பாடுகளில் உணர முடிகிறது . எப்படி ஒரு குறுகிய நிலப்பரப்பு பல மதங்களை அன்போடு அரவணைத்தது என்று எழும் வினா எனக்கு சிலவற்றை உணர்த்தியது .
இந்த தமிழ்சமூகம் வாழ்ந்த பகுதி முதல் மனித இனம் வாழ்ந்த பகுதி என வரலாறு சொல்கிறது . இஸ்லாம்/கிறிஸ்த்துவம் சொல்லும் ஆதாம் இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது . ஆதாமின் மகன்களின் கல்லறை என்று ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தர்காவில் நம்பிக்கை உள்ளது . வடக்கில் இருந்து வந்த இந்து மதம் சார்ந்த இராமர் இங்கு காலம் கழித்ததாக நம்ப படுகிறது. எது எப்படியோ இந்த சமூகம் ஒரு பண்புற்ற சமூகம் என்பதையும் நாகரீகத்தின் முன்னோடி என்பதையும் இதன் மூலம் உணர முடிகிறது.
ஒரு வேளை மேற்சொல்லப்பட்ட குறியீடுகளே நாம் பல மதத்தை அங்கீகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்ற உணர்வை தோற்றுவிக்கிறது.
எனது பார்வையில் உலகின் மூத்த குடியாகிய இந்த சமூகம் வெறும் சடங்குகளை மதம் என்று நம்பி வாழ்ந்ததாக புலப்படவில்லை . நிச்சயம் மிக தொன்மையான ஒரு இனம் தனது சடங்குகளின் வரலாறுகளை ஒரு நிர்ணயித்த அளவுகோலுடன் கொண்டிருக்க வாய்ப்பில்லை .
இப்போது அறியப்படும் இந்துமதமோ , ஏனைய நம்பிக்கைகளோ நமது முதன்மை மதமாக இருந்திருக்குமா என்றால் பல முரண்பாடுகளை காண முடிகிறது. ஒரு உண்மை என்ன வென்றால் தமிழர்கள் தங்கள் வாழ்வியலை மதம் சார்ந்ததாக வைத்திருக்கவே இல்லை . நமது இலக்கியங்கள் இதற்க்கு சான்று சொல்கின்றன.
தமிழர்களின் வாழ்வியல் நெறி சார்ந்தது. ஒரு உயர்ந்த பண்பாட்டினையும் ,ஒழுக்கத்தையும் கொண்ட ஒரு சமூகமாக வாழ்ந்திருந்தது . களப்பிரர்கள் காலம் கடந்து இந்த சமூகம் நெறி சார்ந்த வாழ்வையே முன்னிறுத்தி இருந்துள்ளது . அறம்,பொருள்,இன்பம் , என பகுத்து வாழ்ந்த சமூகம் இது .
இங்கு சடங்குகளை போதிக்கும் மதங்கள் இரண்டாம் பட்சமே . நெறிகளை மூலமாக கொண்ட எந்த இறைகொள்கையையும் இந்த சமூகம் ஏற்க தயாராக இருந்தது அதுவே இந்த சமூகத்தின் தலையாய அடையாளமாக இருந்தது. அதற்க்கு மாற்றாக எதையும் எந்த மதம் போதித்தாலும் அதை தவிர்த்து தனக்கென ஒரு தனித்துவ நெறியுடன் இது பயணிக்கிறது.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ யாதும் ஊரே யாவரும் கேளீர்” முதல் சிலப்பதிகாரம் , மணிமேகலை காப்பியம் வரை எதுவும் ஒரு மதத்தை சொல்லித்தரவில்லை மாறாக தனிமனித ஒழுக்கத்தையும் , ஆட்சி நெறியையும் தான் போதித்தது . வெறும் மரங்களை , பூக்களை , இன்னும் உருவம் உடைய வழிபாடு ஒருவம் இல்லாத வழிபாடு , ஓரிறை கொள்கை பல இறை கொள்கை , என தங்கள் வழிபாடல்களில் பல்வேறு மாறுபாடு இருந்தாலும் நெறியில் ஒழுக்கத்தில் ஒரே சிந்தனையும் முக்கியத்துவமும் கொண்ட சமூகமாக இது விளங்குகிறது .
திருக்குறளை ஒரு இந்து எழுதியதாகவும் , நாலடியாரை சமணர்கள் எழுதியதாகவும் ,அவ்வையாரை ஒரு இந்துவாகவும் பின் வந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களால் பரப்ப பட்ட மதம் சார்ந்த அணுகுமுறையின் விளைவாக ஒரு தவறான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் கூறி கூறி தங்கள் உண்மையான நெறியை மறந்த நம்பிக்கையில் உழல்கின்றனர்.
உண்மை அவர்கள் தமிழர்கள் அவ்வளவே . தமிழர்கள் தங்கள் நெறியை போதித்தனர் .இதில் மத அடையாளமே கிடையாது . வாழ்வியல் ஒழுக்கமே தமிழரின் மதம் . அதனால்தான் அவர்கள் எழுதிய எந்த நூலிலும் முரண்பாடுகள் கிடையாது எதை வள்ளுவர் போதித்தாரோ அதையே அவ்வையும் போதித்தார் .அதைத்தான் நாலடியும்,சிலப்பதிகாரமும் போதிக்கிறது .
எப்படி அனைத்து மதத்திற்கும் பொதுவானதாக வள்ளுவம் இருக்கிறதோ அதுபோலவே தமிழர்களின் வாழ்வும் அனைத்து நெறிகளுக்கும் பொதுவாக இருந்தது .அதனால்தான் இங்கு எந்த மதமும் ஒரு குறிப்பிட்ட நன்னெறியுடன் இங்கு வருகையில் அது பரவலாக ஏற்றுகொள்ள பட்டிருக்கிறது.
ஒரு இஸ்லாமிய கொள்கையை பின்புலமாக கொண்ட எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு ஏன் இந்த தமிழ் சமூகத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு நபி (திருத்தூதர்) வரவில்லை என்று யாரறிவார் ஒரு பண்பட்ட நெறி உடைய சமூகத்திற்கு நபியின் வருகை அவசியமில்லாமல் இருந்திருக்கலாம் உண்மை இறைவனுக்கே தெரியும்.
நாம் நமது நெறியை நமது இலக்கியத்தில் உணரலாம் கடவுள் நம்பிக்கையால் மட்டுமே பிரிவுகள் எழலாம் வாழ்வியல் ஒழுக்கத்தால் நாம் அனைவரும் ஒத்த நெறி உடையவர்களே . கள்ளுண்ணாமை முதல் பொறையுடைமை வரை நாம் கொண்டிருந்த உயர்ந்த நெறிகள் ஏராளம் .
இராமாயணம் தமிழுக்கு தந்த கம்பர் கூட அதனை இராமரின் வல்லமை சொல்லும் நோக்கு இல்லாமல் பிறன்மனை நோக்கா பேராண்மை போதிக்கும் பாடமாகவே தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார் .
மிக உயர்ந்த பண்பாடு உடைய இந்த சமூகம் தனது நெறியை நோக்கியே பயணிக்க வேண்டும் ஆனால் தமிழர்களாகிய நாமோ நம்மை மத அடையாளங்களால் பிளவு படுத்தி கொண்டு இன்னும் சாதிய முட்களுக்குள் சிக்கிக்கொண்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறி தொலைத்து
அன்பகத்தில்லா உயிர் வாழ்தலுடன் , பயனில்லா சொல் பாராட்டி , வீண் கேளிக்கையில் புரண்டு , பிறன்மனை நோக்கா பேராண்மை தொலைத்து
இந்துவாகவோ ,இஸ்லாமியனாகவோ,கிறிஸ்துவனாகவோ தன்னை அடையாளமிட்டு கொண்டு ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாக வாழ்ந்துவரும் ஈன நிலையில் இருந்து இந்த சமூகம் மீண்டு வர வேண்டும் . நெறியுடன் கூடிய மனிதம் போதிக்கும் வாழ்வியலுடன் நகர வேண்டும் .
மதங்களால் பிளவுற்று இலங்கையில் உண்டான காயங்களில் இருந்தும் இந்த சமூகத்திற்கு பாடம் கிடைக்காமல் போனதா ..
எங்கே உலக அளவில் பரவியுள்ள கிறிஸ்த்துவர் , இஸ்லாமியர்கள் சூழலில் வாழும் தமிழர்களே நீங்கள் உலகில் உள்ள பல்வேறு கிருஸ்த்துவர்களோடு, இஸ்லாமியர்களோடு உங்களை ஒப்புமை செய்து சொல்லுங்கள் அவர்கள் அனைவரையும் விட நீங்கள் ஒழுக்க நெறி சார்ந்த வாழ்வில் முன்னோடியாக இருக்கிறீர்கள் அதற்க்கு தமிழன் என்ற இன அடையாளம் காரணம் என்பதை மறுக்க முடியுமா .. அதுபோலவே இந்துமதம் சார்ந்த தமிழர்களே பிற பகுதி இந்துமத கொள்கையாளர்களோடு உங்களை ஒப்புமை படுத்தி பாருங்கள் உங்கள் சிறப்பு உங்களுக்கு தெரியும் .

பிரியும் நதி சேறும். பிளவுற்றுபோகும் கரைகள் ?.... தமிழர்களாய் இணைவோம் , டாஸ்மாக் அகற்றுவோம் .. நெறி வழுவா வாழ்வை உணர்வோம் .

குறிப்பு : தங்கள் கருத்துக்களை பகரவும் ஒற்றுமை நோக்கியே..

எழுதியவர் : சிந்தா (7-Oct-14, 7:57 pm)
பார்வை : 254

மேலே