முதுகெலும்பி 2

முத்தாயி அம்மாச்சி....
எனக்கு மூணு இல்லாட்டி நாலு வயசிருக்கும்.. அப்பலேர்ந்து பாத்துகிட்டு இருக்கேன். எப்பவுமே கடுகடுன்னு இருக்கும். ஆனா மனசு மட்டும் பச்சப்புள்ளயாட்டம். எங்க ஊர்ல அம்மாச்சி குளுப்பாட்டாத பயபுள்ளையே இல்ல. புள்ளைய மல்லாக்க கிடத்தி ... எளஞ்சூட்டு தண்ணிய பதமா ஊத்தி...தலதொவட்டி.. காதுக்குள்ள ஊதி எடுக்கும் லாவகமிருக்கே... பெத்த தாயி பதற.. பச்சப்புள்ள கதற.. பச்சத்தண்ணிக்கே வேத்துரும். அம்மாச்சி மட்டும் எதுக்கும் அசராம பாடிக்கிட்டே குளுப்பாட்டி முடிச்சிருக்கும்.
இதுவரைக்கும் அம்மாச்சி எந்தப் புள்ளைக்கும் பவுடரு போட்டது கெடையாது. காரணம்..... நாங்களும் கேட்டதில்ல. ஒரு நா அம்மாச்சி வரப்புல வரும்போது ஓடியாந்து வேட்டிய கட்டப்போனேன். “ எலேய்.. வேலையப் பாருடா...நாபாத்து வளந்தபயடா நீ...” ன்னு சொல்லிகிட்டே போச்சி. அன்னிக்கிதா வெளங்கிச்சி அந்த வாக்கு எனக்கு....

எல்லா ஊருலயும் பொட்டிக்கடைன்னு சொல்வாங்க. எங்க ஊர்ல மட்டும்தே அது நெசமாலுமே பொட்டிக்கடை. முத்தாயி அம்மாச்சிதா அதோட மொதலாளி. ஒரு ஒலைப்பொட்டிலதா கடையே....!! தேனுமுட்டாயி, கல்கோனா, நெய்யுருண்ட, ஆரஞ்சு முட்டாயி, பட்டாணி, வெத்தல சீவலு எல்லாம் வச்சிருக்கும். யாரு எங்க நின்னு கேட்டாலும் எறக்கி எடுத்து குடுக்கும் . ஆனா.. அந்த பொட்டில ஒருநாகூட பீடி சிகரெட்டு , பொகயில சாமானத்த நா பாத்ததேயில்ல.


முத்தாயி அம்மாச்சி பத்தி சொல்லன்னுமினா.. அது எங்க ஊருக்கு எப்ப வந்திச்சி... யாருக்கு என்ன சொந்தம்... யாருக்காக இங்கினையே இருக்குன்னு எங்கள்ள பலபேருக்கு தெரியாது. யாரும் கேட்டுக்குறவும் மாட்டோம். எப்பயாவது எங்க பெரிய அப்புச்சி மட்டும் சொல்லுவாக ....
“ இந்தப் பெரியபாண்டி மட்டும் இருந்திருந்தான்னா இவா இன்னைக்கி இந்த ஊரோட ராணிடா...........!..”

அம்மாச்சி நல்லா பாட்டு படிக்கும்...
“மசண்ட கொளத்தோரம்
மலந்திருக்குந் தாமரையும்
குருவி குதிச்சோட
குமிழுவிட்ட நீரலையும்
கூட்டமா காவக்காக்க
கொஞ்சிக் கெடந்தோம் நெனப்பிருக்கா...?

சரிஞ்ச எம் மாராப்புக்கு
விழுந்த ஒம் வீராப்புமா
என்னோட கெண்டக்காலு
ஒன்னோட தண்டச்சத்தம்
இருட்டுக்கு குளிரடிக்க
இணங்கி கெடந்தோம் நெனப்பிருக்கா....? இப்பிடியே போகும் அதோட ராகம்.

ஒருதடவ கூட இந்த பாட்டு யாருக்குன்னு சொன்னதே இல்ல அது. கேக்கப் போனா “ போடா.... போயி தண்ணிய மறிச்சி விடுன்னு.... பொட்டிய தூக்கி விடச்சொல்லி யாருக்குமே தெரியாம முந்தான உருவி கண்ணத் தொடச்சிக்கிரும். கெழவிக்கு அம்புட்டு வீராப்பு...!!

எல்லாப் பயகளையும் அதட்டி வெரட்டும் அம்மாச்சிக்கு சாமித்தாத்தா எதுக்கால வாரப்போ மட்டும் வழி ஒதுங்கி நின்னுக்கிரும். அவரும் இன்னும் கொஞ்ச வழிவிட்டு பவுசா ஒதுங்கி போயிருவாரு. ரெண்டு பெரும் பேசிக்கிட்டதே இல்ல. நா பாத்த அளவுல ரெண்டு பேருக்கும் நடுவால ஒரு மரியாதை இருக்கும். அம்மாச்சி ஒருநா கூட தாத்தா கடைக்கி எதுத்தால கடை விரிச்சி நா பாத்ததே இல்ல. காரணம் கேட்டா “ அது.... இந்தக்கால புள்ளைகளுக்கு புரியாதுடா..”ன்னுட்டு போயிரும்.

ஒருதடவ இதுக்காகவே இழுத்துப் புடிச்சி உக்கார வச்சே..! “ அம்மாச்சி இங்கின வா.. என்னதா ஒங் கத...?” கேட்டே புட்டேன்.. “ அட விடுறா.... போக்.....” “ நா போக்கத்த.... பொசக்கெட்ட பயலாவே இருந்திட்டு போறேன்.. நீ சொல்லுடி கெளவி...” நா கையப்புடிச்சிழுக்க.... நெசமாவே குந்திருச்சி அம்மாச்சி....!
“ இது வரைக்கும் எவனுங் கேட்டதில்லடா...நீ கேக்க....!! உங்கப்புச்சி சொல்லிருப்பானே...பெரியபாண்டின்னு...” அந்த வயசிலையும் அம்மாச்சி மொகத்துல ஒரு மின்னலு மின்னி போனிச்சி...!!

சரிங்க....!! அம்மாச்சி சொல்லிட்டு போயிருச்சி.. இப்ப மறுபடியும் அடுத்த ஓட்டுக்கு நா ஏறக் கட்டணும். அப்பதே பத்தர டிரிப்பு வாரப்போ மாடு அவுத்துவிட முடியும். ஒழவு முடிச்சிட்டு வருவோம்ல... அப்ப பேசுறேன்....
(அடுத்து.... பெரிய பாண்டி.....!!)

எழுதியவர் : நல்லை.சரவணா (8-Oct-14, 5:50 pm)
பார்வை : 131

மேலே