என்னுள் தமிழன்பன் எழுதிய போது
'வெறுமையில் நிரம்பும் போது....' என்ற உலகமகாக் கவி தமிழன்பனின் கவிதை ஒன்றினைப் படித்ததும் என்னுள் எழுதத் தோன்றியது இது...:
மரத்தைப் போலவேதான்
மதமும்.
மரத்திலிருந்து
கதவு சன்னல்கள்,
செய்வதைப் போலவே
நாமும்,
மதத்திலிருந்து
பலவற்றைச் செய்யலாம்.
கதவு சன்னல்கள்
ஏன் செய்யவேண்டும்
என்று கேட்பவர்களுக்காகத்தான்
சொல்லப்படுகிறது
‘கதவுகளைக் கொஞ்சம்
திறந்து வையுங்கள்
காற்று வரட்டும்’ என்று!
திறந்து மட்டும் வைத்துவிட்டால்
தீர்ந்துவிடுமா
விசாரணைகள்!
இன்னும் தேவையுள்ளவர்கள்
பலர் இருக்கிறார்களே!
நாற்காலி, முக்காலி,
பரணுக்கான பலகை,
பழைய புத்தகங்களுக்காகப்
பெட்டிகள்
பார்த்துக் கனவுகாணப்
பழகும் குழந்தைகளுக்கான
விளையாட்டுப் பொருட்கள் என்று!
ஏன்,
கத்திக்குக் கைப்பிடி
செய்பவர்கள் கூடத்தான்
மரத்தை நாடுகின்றார்கள்!
மரமும் பரமும்
அதனால்தான்
வெறுமே நிற்கின்றனவோ,
ஒன்றும் சொல்லாமல்!
அந்த வெறுமைக்குள்
அடங்கியதோ இத்தனையும்?
மரத்தை மறைத்ததும்
மாமத யானை
மரத்துள் மறைந்ததும்
மாமதயானையே!
=== ====