கருத்தில் பேசும் கவி- மணமுடித்து அள்ளிச் செல்
214504- மகிழினியின் கவிதைக் கருத்தில் பேசிய கவி
==========மணமுடித்து அள்ளிச் செல்!============
தனித்திருந்த நந்தவனத்தில் தவித்தி ருப்பேன்;
==தன்,நிலவை இழந்தமதி போலி ருப்பேன்!
இனித்திருந்த இரவுகளை நினைத்தி ருப்பேன்!
==இனிவருமோ அவைகளென ஏங்கி நிற்பேன்!
கனிந்திருக்கும் உதடுகளைக் கடித்து நிற்பேன்!
==கனவெனவோ எனை,நானே கிள்ளிப் பார்ப்பேன்!
பனித்திருக்கும் இளந்தென்றல் படர்ந்தென் மேலே
==படுத்துகின்ற பாடுகளைச் சகித்து நிற்பேன்!
பொங்கியெழும் உணர்வுகளை உடைம றைக்கும்!
==பூத்துவிடும் நாணத்தை எது,ம றைக்கும்?
சங்கிலிகள் போலுனது கைகள் என்னைச்
==சந்தித்த இறுக்கத்தை எது,த டுக்கும்?
சங்கொலியோ முனகலெனச் சாற்றி வைக்கும்
==சந்திப்பைத் தாயறியத் தூற்றி வைக்கும்!
மங்கிவரும் உடல்,நிறமும்; மனது வைத்து
==மணமுடித்தே அள்ளிச்செல், மனந்து டிக்கும்!