இன்னுமொரு தாஜ்மஹால்

உன் நினைவுகள்
கொண்டே இரவுகள்
உடைக்கப்படுகின்றன
காமம் இல்லா காதலாக
ஒவ்வொரு கணமும் நாம் கடக்க
நட்பின் பரிமாணங்கள்
சூரியக்கதிர்களாய்
நம்முள் எட்டிப்பாய்கின்றன...!

அர்த்தம் பொதிந்த
உன் மெளனங்களோடு
நட்பாய் கரம் கோர்க்கும்
கணங்களில்
காமம் அங்கே
தற்கொலை செய்யும்...!

காதல் காதல் என்று
பெண்ணை
காமத்திற்கு இழுக்கும்
சமுதாயத்தில் நட்பு நட்பு
என்று சொல்லி
காதலை என்னுள் நிறைப்பாய்!

உன் வார்த்தைகள்
என்னை வெல்லும்
கணங்களில் எல்லாம்
நான் வாழ்க்கையை வென்றிருக்கிறேன்....!
உன் தோள் சாயும் தருணங்கள்
தாய்மையை எனக்குள்
ஊற்றி நிறைக்கும்!

ஆணாதிக்க சமுதாயத்தில்
ஒன்று பெண் கூடுவதற்கு
அல்லது சுமைகளை கூட்டுவதற்கு
இன்று திருமண பந்தங்கள்
நம் நட்புக்கு நெருப்பு வைத்தன
சம்பிரதாய கழுகுகள்
பார்வைகளால் கொத்தி தின்றன

மரபு மரபு என்று
உன் திருமணத்திற்குப் பிறகு
பிரிவுகளின் பின்னே
மெளனமாய்
ஓடி ஒளிந்தது நம் நட்பு!
ஆளுமை செய்ய
அடையாளம் இட்டுக்கொண்ட
உறவுகளுக்கு மத்தியில்
சர்சையாகிப் போனது
ஆண் பெண் நட்பு!

நெருப்பாய் என்னை நேசித்த
நீ இன்று நெருங்க முடியா தூரத்தில்
திருமணம் நட்புக்கு முற்றுப்புள்ளியா?
நட்பென்றால் என்ன
வெறும் வெற்றுப் புள்ளியா?
கேள்விகளால்
எரிந்து சாம்பலானது மூளை!

நகர்ந்து போன நாட்களில்
கவனமாய் சேர்த்து வைத்த
நினைவுகளில் மெளனமாய்
எழுப்புகிறேன் நட்புக்கான
இன்னுமொரு தாஜ்மஹாலை...!


இன்னமும் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாகத்தான் இருக்கிறது ஆண் பெண் நட்பு. ஆணும் ஆணும் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பு கொண்டிருக்க வேண்டும் என்று நமது மூளை பழக்கப்பட்டு போனதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நெறிப்படுத்தி வைத்ததும்...ஆணின் அத்துமீறலாம் ஏற்பட்ட ஒரு பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் எல்லா விசயங்களிலும் பயன்பாட்டின் தன்மையை பொறுத்து அது நன்மை தீமை என்று பிரிக்கிறோம். உதாரணமாக இணையத்தின் பயன்பாடு என்பது...தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எதிர்மறையான பயன் பாடும்....அதை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துபவர்களக்கு நேர்மைறையான பயன்பாட்டினையும் கொடுக்கிறது.

பொருளிலோ அல்லது மனிதர்களிலோ இல்லை குறைபாடு அதை எப்படி கையாளுவது அல்லது அல்லது எப்படி எண்ணுவது என்பதை பொறுத்து....விளையும் நன்மையும் தீமையும் வேறுபடுகின்றன. அதே போலத்தான் ..ஆணுக்கு பெண் என்றால் போகம், பெண் என்றால் காமம் என்று காலம் காலமாக போதிக்கப்பட்து அந்த ஒரு மனோபாவம் கொண்ட சமுதாயத்தில்..பெண்ணோடு பழகும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு காமம் தான் தலை நோக்கி இருக்கும்.

காலம் காலமாக பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைத்து அவளுக்கு மூக்கு குத்தி... அடிமைப்படுத்திய காலங்கள் போய்விட்டன... என்பதை ஒத்துக் கொள்ளும் ஆண்கள்... பெண்களை மரியாதையாக நடந்த வேண்டும். ஒரு விசயத்தை ஆண் அணுகும் முறையும் பெண் அணுகும் முறையும் வேறு வேறானவை.... அது கடவுளாக இருக்கட்டும் இல்லை கம்பியூட்டராக இருக்கட்டும்.

நல்ல நட்பாய் இருக்கும் ஒரு தோழியின் மூலம் அல்லது ஒரு தோழனுடன் ஆரோக்கியமான கருத்து விவாதங்களும்... வெளிப்பாடுகளும் உள்ளபோது புதிய புதிய கருத்துக்கள் பிறக்கும். ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் மிலேச்சர்கள் தவறாக நடக்கவும் வாய்ப்பு இருப்பதால் ஆணும் பெணும் தன்னுடைய நட்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும் அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ !சாதனை.....

" பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்...
புவிப்பேணி வளர்த்திடும் ஈசன்.
மண்ணுக்குள்ளே சில மூடர்...
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்."

எழுதியவர் : Dheva S (11-Oct-14, 7:40 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : inumoru tajmahaal
பார்வை : 249

மேலே