என் கனவும் அப்படித்தான்

சிறுவயது முதலே
தொடர்ந்து வரும் கனவு
சிந்தனை முழுதும்
நிறைந்து வரும் கனவு...

சில நேரம்
கை பிடித்து ,
சில நேரம்
கட்டிப் பிடித்து...

காண்பது வேறு..
கண்டபின் கண்டதாய்
நினைப்பது வேறு,
அறிவது வெவ்வேறு!!

இருட்டறையின்
உட்புகுந்த ஒளி
துளாவிப் பரவும்
பார்வை இன்றியே....

என் கனவும் அப்படித்தான் !

அதற்குப் பார்வை இல்லை..
நானும் பார்க்க முடியாது
கண் திறந்து!
அது பரவுவதை
தடுக்கவும் முடியாது
தடித்த கரங்களால் ..

காற்றில் மிதக்கும்
பஞ்சுப் பூவுக்கு
இலக்கா இருக்கிறது ?
தரை இறங்கிய அக்கணமே
தலை தூக்கி பறக்கிறதே!

என் கனவும் அப்படித்தான் !

இலக்கின் தூரம் தெரியாது
இழக்கும் பாரம் தெரியாது!

மென்மையாய்,கனமாய்
துக்கமாய் ,சுகமாய்
நிசமாய் ,'அநிசமா'ய் ...
தொடரும்..

பக்கத்தில் இருக்கும்
தூரத்து வாழ்க்கை....

வாசல் மட்டும் காட்டும்
சுரங்கப் பாதை,
வழிகள் பலதாய் பிரிந்தால்
உள்ளே சிக்கியவன்
ஊர் போவதெப்படியோ...?!

என் கனவும் அப்படித்தான் !
உன் கனவும் இப்படித்தான்!

எழுதியவர் : அபி (12-Oct-14, 10:41 am)
பார்வை : 105

மேலே