விதையின் கதை
விளையாடும் விடலைகள் கூட
வினாவோடு விளிக்கிறார்கள்,
விதைக்காமல் விட்டுவிட்டார்களே, இந்த விதையை என்று
காற்றிருக்கு, தூற்றிக்கொள்ள கருவிருக்கு
நாற்றிருக்கு, நயமான தெம்பிருக்கு
நிலம், ஆம் நிலமில்லை...
விதித்துவம் மறந்த சிந்தனையாளர்கள்
செவித்துவம் செம்மையடைய
விட்டுச்சென்ற கவித்துவங்கள் பல...
காத்திருந்தால் காலம் வரும்,
காலத்தின் புது காட்சி வரும்,
காட்சி வந்தால் எழுச்சி வரும்...
காத்துத்தான் இருக்கிறேன், காணாமல் போகாமல்
இதுதான் தனித்துவமோ?
விதித்துவம், செவித்துவம், கவித்துவம்
கடந்த தனித்துவமோ?
இது தனித்தவம்,
ஆம், தனித்து விடப்பட்ட தவம்...
பொருள் சேர்க்கும் பெருந்தவமில்லை இது,
உயிருக்கு உரம் சேர்க்கும் தவமில்லை இது,
தரணி ஆள தறிகெட்ட தவமில்லை இது,
பின் ஏன் இந்த தனித்தவம்?
காகித காவியத்தில்,
கருதேடும் கவிஞனோ...
ஓவிய தூரிகையில்,
ஒளி தேடும் ஓவியனோ...
யாரென்று யாரும், இதுதான்
நானென்று சொன்னதில்லை,
சொல்லவும் முடிவதில்லை
விளையாத நிலங்களையே
விரும்பாமல் பார்க்கும் உலகம்,
விதைக்காத விதையை மட்டும்
விட்டு விடவா போகிறது...
முடிக்கும் முடிவில், முனைப்போடு சொல்கிறேன்,
நான் ஒரு விதைதான்,
நான் ஒரு விதைதான், நிலம் விழுங்காத விதை
விளைவேன் நிச்சயமாய் என்பதால் விழத்தயங்காத விதை,
வீரமாய் சொல்கிறேன், விழுவேன்,
விழுந்தால் எழுவேன்...