குச்சிக்காலன் 6
குச்சிக்காலன் 6
குச்சியப்பன் தனிக்குடித்தனம் வந்தபின் அவனது பெற்றோர்
ஒப்பிலியும் சுடலைமாரியும் மகனையுன் மருமகளையும் பார்க்க முதல் முறையாக அவர்கள் திருமணமாகி ஆறு மாதம் கழித்து வந்தனர். வந்தவர்களுக்கு முறையான வரவேற்புக் கொடுக்காமல் குச்சியும் கலாவும் மிகவும் கேவலமாகப் பேசி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர்.
திருமணத்திற்குப்பின குச்சி முற்றிலுமாக மாறிவிட்டதைக் கண்டு அவன் பெற்றோர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தனர். அவனது உருவம் குரல் மட்டும் மாறவில்லை. மற்ற எல்லாவகையிலும் குச்சி ஒரு புதிய மனிதனாக மாறிவிட்டான். கலாவைத் திருமணம் செய்து கொண்டதை ஒரு செயற்கரிய செயலாக எண்ணிய குச்சி, தன் பெயரோடு கலா பெயரையும் சேர்த்து ‘கலாபலராமன்’ என்று மாற்றிக் கொள்ள எண்ணி அரசிதழில் பதிவு செய்ய வக்கீல் (நோட்டரி பப்ளிக்) ஒருவரைப் பார்க்கச் சென்றான். மனைவியின் பெயரைக் கணவன் தன் பெயரோடு சேர்த்துப் பயன்படுத்துவது உலக வழக்கம் இல்லையென்று அவர் சொன்னார். அதற்கு முன்பே அவனுடன் பணியாற்றும் சிலரும் அது பற்றி வழக்குரைஞர் சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் குச்சி தன் ஆசையை வேறுவழி இல்லாமல் கைவிட்டான்.
இருப்பினும் குச்சி விடும் ஒவ்வொரு மூச்சும் தன் காதற்கிளத்தி பத்தினி தெய்வம் கலாவின் பெயரையே உச்சரிக்கும். பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாடலில் வரும் முதல் இரண்டு சொற்களையும் நீக்கிவிட்டு ”கலாவல்லி என்னும் போதினிலே இனபத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று அவ்வப்போது பாடி சந்தோஷ அடைவான் குச்சியப்பன். அவனைக் கலாபித்தன் என்றழைத்தால் பொருத்தமாக இருக்கும். இந்தப் பெயரை அவன் காதில் விழும்படி யாராவது சொல்லிவிடாதீர்கள். புதுமைப்பித்தன், புலமைப்பித்தன் போல பலராமன் கலாபித்தன் ஆகிவிடுவான்.
ஒரே முறை தன்னைப் பார்க்க வந்த தன் பெற்றோரை குச்சி அவமானப்படுத்தி அனுப்பினான் அல்லவா. அவர்கள் ஊருக்குப் புறப்படும்போது கண்ணிர் விட்டுக் கதறி, “ ஒனக்கு ஆம்பள வாரிசே இல்லாம போகும்டா. பொறக்கறதெல்லாம் பொட்டையாத் தாண்டா பொறக்கும். நாசமாப் போட நெட்டக்காலு நாயே” என்று சாபம் கொடுத்துவிட்டுத்தான் சென்றனர். அவர்கள் சாபம் பலித்தது போல குச்சியின் வாரிசாக மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் ஸ்வேதாவுக்கு பதினோரு வயது. அடுத்து சிந்து. அவளுக்கு வயது எட்டு. கடைக்குட்டி சுகன்யாவுக்கு வயது ஆறு.
ஆண் குழந்தை ஒன்றுக்கு ஆசைப்பட்டு இடைவெளி விட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாலும் பிறந்த மூன்று குழந்தைகளும் பெண்பிள்ளைகளாகப் பிறந்தது குச்சிக்குப் பெருத்த ஏமாற்றம். பெற்றோரின் சாபம் தான் காரணம் என்று எண்ணி குச்சி வருந்தினான். எனவே மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளே கலாவுக்குத் தெரிவிக்காமலே குச்சியப்பன் கு. க. ஆபரேஷன் செய்து கொண்டான்.
தன் பெற்றோர் ராக்கப்பன் மூக்காயி போல ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சுரைக்காய் மூஞ்சி கலாவல்லியின் கனவு கானல் நீராய்ப் போனது. கலா தனக்கேற்ற ஆண்மகனை வலைவீசிப் பிடித்து மணங்கண்டுவிட்டாள் இன்னும் இரண்டு பெண்குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் குச்சிக்காலன் கெடுத்துவிட்டது பற்றி அவளுக்குத் தீராத வருத்தம். ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள கலா ஆசைப்படக் காரணம்……..
(தொடரும்)