அம்மா

சந்தேகம் கேட்டதும் சங்கடங்கள் களைபவளே!
அம்மா! எனக்குச் சில சந்தேகங்கள்
கண்ணீர் தழுவிய என் கன்னக்கதுப்புகள்
உன் சேலை நுனியின் சுகந்தம் தேடுவதேன்
முடியும் என்ற ஒற்றைச் சொல்லில்
நம்பிக்கை காற்றை எப்படி சுவாசிக்கக் கொடுத்தாய்
நான் சறுக்கும் கணங்களில் உன்
இடுக்கிய கண்களில் கூரிய வாள்கள்
இரணமற்ற அறுவை சிகிச்சையை நிகழ்த்திக்
காட்டி நிமிரச் செய்வது எங்ஙனமோ?
சொல்லவை போற்ற நிற்கச் செய்தவள்
நல்லவை மட்டுமே சொல்லிக் கொடுத்தவள்
அல்லவை வரின் அடக்குவது பற்றிச்
சொல்லி வைத்து இருந்தாலென்ன?
பெரும் துன்பங்களை புலன்களில் வாங்கி
மூளையில் நிறுத்தி தீர்வு காண்பாய்
வைத்த செடி வாடிப் போனாலும்
கண்ணீர் உகுத்து கரைந்து போவாய்
ஒழுங்கற்ற கோடுகளால் வரிசைப் புள்ளிகளில்
வரைந்த ஓவியம் உன் உருவம்
அப்படியே பிரதி எடுத்து
எனக்குத் தந்தது நீயா? இறைவனா?
முரண்களை எனக்குப் பழக்கியவள் நீ
கடும் புயலிலும் கொடும் மழையிலும்
பெயர்ந்து போக நாணலாய் என்னை
நனைத்து வளைத்தவளே நிழலின் நன்றியிது!