தூரத்தே ஒரு
"தம்பி உனக்கு
வேட்டி எடுத்திருக்கோம்டா..."
கறை காட்டிச் சொல்வார்
அப்பா....
"என்னடா எல்லாம்
வாங்கிட்டியா..?" அர்த்தமாய்
சிரித்திருப்பான் அண்ணா...
"நீ புடிக்கிற மாதிரி
உருண்டையா இருக்கா..?"
நெய்யுருண்டை காட்டி
விளையாடுவாள் அண்ணி....
"இந்தக் கம்மல்
நல்லாருக்கா..?" காதுகள்
ஆட்டிக் கேட்டிருப்பாள்
தங்கை....
"தலைக்கி எண்ணெய்
வச்ச உடனே
குளிச்சிராத....! மாவுக்
கைகளுடனே அம்மா....
எல்லோருக்கும்
பதில் சொல்லி.....
"நம்ம ஊரு மாதிரி
வருமா..?" அறை நண்பனிடம்
பகிர்ந்த வேளையில்...
"என்னதான் இருந்தாலும்
எம்புள்ள இங்க
இருக்க மாதிரி வருமா...?"
அம்மாவின் கேள்விகளுக்கு
மொத்த
விஞ்ஞானங்களும்
மௌனித்துப் போயிருக்கும் ...
சற்றுமுன் நான்
அணைத்து விட்டிருந்த
கணினித் திரையைப்
போலவே .........!!

