ஊஞ்சல்
ஊஞ்சலின் பாதை ஓயாமல் ஒன்றே தான்.
எவ்வளவு தான் உந்தினாலும்
பாதைநீளம் சங்கிலியின் அளவால் தான் !
சற்றே சங்கிலி பிரியும் நேரம்
பாதை தடம் கோணலாகும்
பிரிந்ததை மட்டும் கோர்த்தால்
ஆட்டம் குறுகிப்போகும்
பிரியாத பக்கமும் வெட்டி பின் கோர்க்க வேண்டும்
மீண்டும் புது பாதை..
ஆனாலும் சங்கிலி நீளம் வரையே!
இப்படியே ஊஞ்சலின் வாழ்க்கை பாதை..
பிரிந்த சங்கிலிக்காய் ..
பிரியாத பக்கமும்.. வெட்டி பின் கோர்த்து...
பாதை வேறு என்று தெரியாமல்..
உயரம் போகிறதாய் எண்ணி, உந்தி உந்தி...
ஒருநாள்..
சங்கிலி ஒருபக்கம் கரைந்தே போயிற்று
மறுபக்கம் தொங்கி மலைப்பாக நின்றிருக்க
விறு விறு வென..
உ
ரு
விக்
கொண்
டு ...
தரையில் விழ..
அப்ப்ப்ப்பாடி..!
மறுபடி அது மணப்பலகை!!!
உயரத்திற்கு அலைந்து களைத்த ஊஞ்சல்,
தன்னை நாடி வருபவர்களை...
உயர்த்தி வைக்கும் மணப்பலகையாய் !!