இயற்கை போற்றுதும்

இயற்கை இனியது..

எண்ணிலடங்கா உயிர்கள்
எத்தனையெத்தனை வகைகள்
அத்தனையும் தோற்றுவித்து
அழகாய்க் காக்கிறது.

நீலவான்..
நிமிடத்தில் உருமாறும்
வெண்பஞ்சு மேகங்கள்
வண்ணவண்ணமாய்
விண்பரவும் கதிரொளி

தண்ணொளிச் சிந்தி
வளர்ந்தும் தேய்ந்தும்
விளையாடும் சந்திரன்
பூக்கூட்டமாய்
புன்னகைக்கும் தாரகைகள்

கருத்துப் பெருத்துக்
கர்ச்சிக்கும் கருமேகம்
வெட்டும் கொடிமின்னல்
விட்டுவிட்டு விண்ணதிர
தட்டும் இடியோசை

சுழித்தோடும் நதி
சுற்றித் தலையசைக்கும் வயல்
செழித்தோங்கும் தோப்பு
செருக்கில்லாவமைதியில்
செறிந்துறையும் மலைகள்..

அழகில்லாவெதுவும்
இயற்கை தரவில்லை
அருமையாய்ப் பேண
நமக்குத் தெரியவில்லை.

கோடிகோடி உயிர்வகையில்
ஒருவகையே மனிதவினம்.
மற்றுயிரின் சிறப்பெதுவும்
மதிக்க மறுக்கும் குணம்.

பகுத்துணரத் தெரிந்ததனால்
பரிணாம வளர்ச்சியுற்று
பலங்கூட - பல்வேறு
மலங்கூடு மனங்கொண்டோம்.

சுயநலப்பேய் கையில்
சுலபமாய் சிக்கியதால்
இயற்கையை அடிமையாக்கும்
இழிவெண்ணம் தலைக்கேறி

செய்யத் தகாததெல்லாம்
செய்து சீர்கெடுகின்றோம்.
உய்யும்வகை மறந்து
உற்பாதம் நாடுகின்றோம்.

மரபணு மாற்றஞ்செய்து
மரணமில்லா வாழ்வுபெற
முதுமையடையாமல்
முற்றா இளமைபெற

நோய்ப்பற்றா உடல்கொள்ள
தேய்வில்லாச் சித்தம்பெற
ஓய்வின்றி உலகெங்கும்
ஆய்வுகள் செய்கின்றோம்.

விஞ்ஞான வளர்ச்சிகண்டு
வித்தகம் மிகுதேசங்கள்
பித்தேறி மற்றெல்லாம்
பிடியினில் கொள்வதற்காய்

ஆளுமை மிகுந்திடவே
ஆயத்தம் செய்திடுது.
உயிரியல் ரசாயன வகை
ஆயுதங்கள் பெருக்கிடுது

பக்கவிளைவுகளால்
பேரழிவிலாழும் காலம்
பக்கம்வரக் கண்டு
பதைபதைப்பிலாழும் மனம்.

மற்றுயிரெல்லாம்
இயற்கையில் இயைந்துவாழ
மனிதன் மட்டும் இயற்கையொடு
மல்லுக் கட்டுவதேன்?

இயற்கைவிதி மாற்றும்
இயல்புடை ஆய்வெல்லாம்
பயங்கர விளைவுகளாய்ப்
பரிணமித்தல் அறிகிலரோ?

கடலின் ஒருதுளியே
நிலத்தின்கண் விழ
கனமழையாய் காணுகிறோம்
கடும்விளைவை நோக்குகிறோம்.

வெள்ளப்பெருக்குக்கு
உள்ளதெலாம் இழந்திடும்
தொல்லைமிகு வாழ்வு
தொடர்ச்சியாய்ப் போனதின்று.

நிலந்தாங்கும் தட்டுகள்
சிறுவசைவுக் காரணமாய்
சீறும் எரிமலை
சுனாமி என்றெல்லாம்
ஓங்குஞ் சீற்றந்தப்ப
ஓடியொளியும் மனிதவினம்.

ஓஸோன் படலத்தில்
ஓட்டைபோடும் வினைபுரிந்து
ஓட்டையடைக்க வழிதேடி
ஓடுகிறோம் அங்குமிங்கும்.

ஓட்டை அதிகமானால்
ஒடுங்கிடும் உலகிலெல்லாம்
மாற்றொணா விளைவுகளால்
மடிந்திடும் உயிரெல்லாம்.

கரியெரித்துக் கிடைக்கும்
மின்சாரம் காணாதென்று
அணுப்பிளந்து மின்சாரம்
ஆக்கும் அழிதொழிலை

ஆர்வமுடஞ் செய்யும்
அறிவுக்கொழுந்துகள் நாம்
அழிவை ஆழத்தழுவும்
அற்புதப் பிறவிகள் நாம்.

உண்பொருள் விளைச்சல்மிக
வன்பொருள் ரசாயனத்தை
அள்ளித் தெளித்து
அழிக்கின்றோம் மண்வளத்தை.

வாகனப்புகை மண்டி
வளி முழுதும் மாசடையும்.
வடிகட்டி முகம்பூண
வடிந்திடுமோ வளிமாசு?

மக்காத பொருள்பெருக்கி
மண்ணிலிடும் மடையரே நாம்.
மண் கெடுத்து விண் கெடுத்து
மடிவதற்குள் திருந்துவமோ?

காடழிக்க முற்பட்டால்
வீடழியும் வீணில் காணீர்.
பூடழிய புழுபூச்சி
புள்ளினமழிய

காட்டுமிருகமெலாம்
போக்குவழி தொலைந்து
நாட்டுக்குள் புகுந்து - உண்
வேட்டையிடல் காணீர்.

செய்யும் செயலெதிலும்
சீரில்லை செறிவில்லை
முற்றிடும் அழிவின்கண்
முழுதாய்ச் சிக்கிடுமுன்

இயற்கையை மதித்து
இனியேனும் நடக்கணும் நாம்.
இயற்கைக்கு ஊறுசெய்யும்
இயல்பை ஒழிக்கணும் நாம்.

இனிவரும் சந்ததியர்
இகழாமல் வையாமல்
இயற்கையுடன் இயைந்து
இதமாய் வாழணும் நாம்.

பெற்ற உயிர் இரவல்
பேணும் உடலும் கடன்.
வாழ்வோ காலவெளி
வழிச்செல்லும் பயணம் தான்.

தாங்கும் உலகு
தங்கும் விடுதிபோல.
உண்மையிது உணர
உவக்கும் நம்வாழ்வு.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (25-Oct-14, 12:17 pm)
பார்வை : 137

மேலே