முதல் சந்திப்பு
அதிகாலைப் பொழுது...
I -Pod ஐ செவிகளில் மாட்டிய இந்தக் காலத்து இளைஞனாய்,
தொடங்குகிறது என் நடைப்பயிற்சி...
மேற்கத்திய இசையின் தாளமும்,
கிழக்குச் சூரியன் கொண்ட பூபாளமும்,
எனக்கே படைக்கப்பட்டனவாய் இருந்தன...
கதிரவனின் பொற்கிரணங்கள்
மண்ணோடு புணரக் காத்திருந்த நேரம்...
அந்த அமைதியான சாலையில்
கொஞ்சிக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகள்
சட்டென்று வெட்கம் கொண்டு மரங்களுக்குள் பதுங்கின...
என்னவென்று காதிலிருந்ததை கழற்றி பார்த்தல்,
அச்சமயம் ஏதோ பறவையின் கானம்
என்று ஏமாந்திடவே தோன்றியதாய் ஒரு குரல்...
அந்த அழகிய பெண்ணுருவம்,
உள்ளத்தில் மேற்கத்திய இசை மறைந்து
உதித்து இளையராஜாவின் இசை மருந்து....
இந்த நிலவை சூரியனால் மறைக்க முடியவில்லை....
ரோஜா நிறத்தில் அவள் அணிந்திருந்த உடை,
அது ரோஜாவென்றே எண்ண வைத்தது...
நான் அவளை அழைக்கிறேன்...
முறைப்பாய் விழிக்கிறாள் - நான்
விறைப்பாய் நகர்கிறேன்...
வல்லினக் கண்களும்,
மெல்லின தேகமும்,
இச்சைமிகு இடையினமும்
ஒருங்கே அமையப் பெற்ற இளவரசி அவள்...
அவளது ஆட்சியில் சேவகனாகவாவது சேரத் துடிக்கிறேன்...
இந்த இளைஞனை பிடிப்பதாய் அவள் கண்கள் பேசுகின்றன...
என் உள்ளத்திலேஅவை பொன்னொளி வீசுகின்றன...
தரைகளுக்கு வலிக்காமல் மெதுவாக நகர்கிறாள்...
இனி மீண்டும் இவளைக் காண்போமோ என்று உள்ளம் குமுற,
காத தூரத்தில் சட்டென்று அவள் திரும்ப,
அவள் பார்வை கீற்றுகள் என் தேகத்தை புனிதமடையச் செய்தன...
மெய் மறத்தல் என்பதை அத்தருணமே உணர்ந்தேன்...
ஆயிரம் கவிதைகள் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தன மின்னல்களாக..
கண்களை மூடி கனவு காண விழைந்தேன்...
கண் திறந்தேன்...
சற்றுத் தொலைவில்,
முத்தமிடும் தூரத்தில்அவள் முகம்...
பஞ்சணையில் என்னோடு படுத்திருந்தாள் என் மனைவியாக...
என்னையே அறியாமல் சிரிக்கிறேன்...
இந்தக் கனவினை எண்ணி சிலிர்க்கிறேன்...
அவளும் அழகாய்ப் புன்முறுவல் பூக்க,
கூறுகிறாள் "Good morning dear"...
முத்தமிட்டேன்...
இதை விட ரம்மியமான காலையை,
எந்தக் கதிரவனும் புலர முடியாது....