ஊனமான வாழ்க்கை
பிஞ்சு நடை குழந்தை உள்ளம் - ஆனால்
பேசவும் தெரியாது சொன்னாலும் புரியாது
முகங்கள் தெரிந்தாலும் பழக தெரியாது
தன்னிலை அறிந்திலேன் – உலகில் நான்
உயிர் இருந்தும் இல்லாத நடைபிணம்
வெறுப்பினில் திளைத்த துயரத்தின் வடிவம்.
என் தேவைகள் என்னென்ன காண்பார் அறியார்
தேவைக்கும் சேவைக்கும் எனக்காக என் அன்னை
உன் வாழ்வினை எனக்காக இழந்தாயோ அம்மா
முகத்தினில் சிந்தும் சிரிப்பினை மறந்தாயோ
துக்கத்தால் வாடி உயிர்வற்றி கண்களில் நீரின்றி
ஏக்கத்தோடு நிதமும் என்னை வழிநடத்தி சென்றாயே
அடியெடுத்து வைக்க காலம் பல ஆனபோதும்
எனக்காக பொறுமைக்காத்து அழைத்துச்சென்றாய் அம்மா
தூக்கிச்செல்ல வலுவிருந்தால் தூகிச்சென்றிருப்பாய்
மனதில் சுமந்தாய் என் உடலை சுமக்க கூடுமோ
முகத்தில் மீசை முளைத்தாலும் நான் இன்னும் குழந்தையே
உண்ணும் உணவும் நீ ஊட்டினால் புசித்துக்கொள்வேன்
உலகைப் பொறுத்தவரை உனக்கு கொடுக்கப்பட்ட சாபம் நான்
என்னைப்பொறுத்தவரை எனக்கு கிடைத்த கடவுள் நீ
சிரிக்க மறந்தாய் உண்ண மறந்தாய் தன்னையே நீ மறந்தாய்
காண்பவர் சிலர் எனக்காக கண்ணீர் சிந்தினாலும்
என் அன்னையின் கண்ணீரினை தடுக்க முடியாது
ஏளனம் செய்த உள்ளங்கள் ஆயிரம் ஆயிரம்.
கனவுகள் காண இரு கண்களுண்டு ஆனால்
கனவுகள் உள்ளத்தால் ரசிக்கப்படுவதில்லை – நான்
நடந்து செல்ல கால்களுண்டு ஆனால் பின்னியிருக்கின்றன
கூப்பி வணங்க கைகள் உண்டு ஆனால் சக்தியில்லை
நானோ பாதிக்கப்பட்டவன் உடலால் மட்டுமல்ல மனநிலையிலும்
அன்னையின் வாழ்வழித்தேன் அவளுக்கு மகனாய் பிறந்து
பாவியானேன் உனக்கு வாழ்வில் சுமையினைத்தந்து
என் வாழ்வில் இவன்பாரமே என்றெண்ணி – எனை
நீ விட்டுச்சென்றாலும் உலகினை நான் அறியேனம்மா
கல்லால் அடிக்கவேண்டி எனை துரத்தும் ஒரு கூட்டம்
பைத்தியம் என்றெண்ணி எள்ளி நகையாட ஒரு கூட்டம்
சுற்றும் முற்றும் பார்த்தாலும் நான் ஒன்றும் அறிந்திலேன்
கையைப்பிடித்து கூட்டிச்செல்வாய் என்று அங்கும் உன்னைத்தேடுவேன்.
ஊனத்துடன் நானிருக்க கண்ணீருடன் நீயிருக்க - உனக்காக
என்னை மாய்த்துக்கொள்ள கூட எனக்கு தெரியாதம்மா
சிரிப்பறியா வீடு , கண்ணீரில் மிதக்கும் உன் கண்கள்
இந்த வேதனையை கடவுளும் கண்டுகொள்ளவில்லை
சிரமமே வாழ்க்கையாக அமைந்தது என்னால் உனக்கு
என்னை விடுதியில் சேர்த்து நீ நிம்மதியடைவாய் என் தாயே..!