ஐந்திணைகளில் என் திணையினை எங்கே தேடுவேன்

எனக்கான
அடையாளமின்றி யலைகிற
என்பிறப்பிடத்தை
நஞ்சுக் கொடியோடொட்டியயென்
வழித் தோன்றல்களுக்கு
அடையாளம் காட்டிட
ஐந்திணைகளி லொன்றான
என் ஆதித் திணையினை
எங்கே தேடுவேன் ?

என் ஆதித் தாயின்
பால் வாசம்
படிந்த
தொட்டில் சேலையினாலதை
நிர்மாணித்து
சொர்க்க மரங்களை
பயிரிட்டிருந்தார்கள் -
இப்போதனைத்தும்
குருதி படிந்திருக்கும்
முட்கிரீடங்களால்
குவிக்கப் பட்டுச்
சிலுவைக் காடுகளாய்
மாறிப் போய் கிடக்கின்றது !

ஸ்திரப்டுத்துதலின்
முயற்சியற்றிருந்ததால்
இலகுவான
அநாகரீகக் கபளீகரத்தினால்
அவள் தாலாட்டின்
பள்ளி எழுச்சியில்
விடிந்த யென்
அதிகாலைகளைப் பறித்து
பாவமும்
பாவம் சார்ந்தவையுமான
பொட்டல் வெளிப்
பொலி காடுகளாய்
மாறிப் போய் கிடக்கின்றன !

திணை யென்பது
நிலம் மட்டுமன்று -
வாழ்வின் ஊற்றுக்கண்
பீரிடலில்
என் முன்னோர்
விட்டுச் சென்ற
எச்சங்களின் மிச்சங்கள்
என்கிற போது
என் உயிரோடு கலந்திருந்தும்
தொலைந்து போய்
அந்நிய அரிதாரப் பூச்சோடு
சுய முகம் தொலைந்தலைகிற
என் திணையினை
என் வழித்தோன்றல்களுக்கு
அடையாளம் காட்ட
நான் எங்கே தேடுவேன் ?

எழுதியவர் : பாலா (29-Oct-14, 10:13 pm)
பார்வை : 99

மேலே