ஆயா மரம்

"ஆயா
படுத்துருக்காக
கும்புட்டுக்கோடி..."
ஆத்தா
சொல்வாக
நானும்,தம்பியும்
கும்புட்டுக்குவம்....

அடுத்த
நாளும்
சொல்வாக
"பாத்தியால
ஆயா எம்புட்டு
பெருசா
வளந்துருச்சினு....?"

ஒன்னுமில்லேங்க
ஆயாவ
பொதைச்ச
எடத்துல
மாமரம் நட்டுருக்காக
அதத்தே
எங்க ஆத்தா
ஆயானுது.......

மைக்காநாள்
மாம்பழம்
கொத்து கொத்தா
காச்சித்தொங்கும்
பேய் காயினு
எவனும்
புடுங்க
மாட்டாய்ங்க....

எங்க ஆயா
எங்களுக்குதே
கொடுக்குதுன்னு
அம்புட்டையும்
புடுங்கி
மொளகா பொடி,
உப்பு தடவி
அவிங்கள
பாக்க வச்சி
திம்பம்.......

பரீட்சைக்கு
போகையில
ஒரு பக்கம்
விடிய முன்ன
எந்துருச்சி
ஆயா மரத்துக்கு
கீழ மண்ணெடுத்து
வச்சிக்கிட்டு
வீராப்பா திரிவம்......

பச்ச மரம்
கொஞ்சம்
பட்டுப்போனாக்கா
ஆயாவுக்கு
ஜொரமின்னு
சட்டய கலட்டி
போத்தி வச்சம்......

ஆயாவுக்கு
பசிக்குமேன்னு
பள்ளிக்கூடம்
போகயில
ரொட்டித்துண்டு
பிச்செடுத்து
குழி தோண்டி
பொதச்சி வச்சம்......

வரியம்
கடந்த பின்னும்
பக்குவம்
மொளச்ச பின்னும்
அந்த மாமரந்தே
எங்க ஆயா....

இன்னும்
எங்க ஆத்தா
இப்புடித்தே
சொல்லுது.....

எழுதியவர் : ம.கலையரசி (2-Nov-14, 10:17 am)
பார்வை : 156

மேலே