பிரிய திருவுளமோ

எந்த நேரம்
இந்த ஈரம்
நீயா பாரம்
நானா தூரம்
நமக்குள்ளா பூகம்பம்
அதற்குள்ளா ஆதங்கம்
தாங்குமா காகிதம்
இறங்குவேனா பாதாளம்
போதா காலம் போகுமா
மேள தாளம் மீண்டும் கேட்குமா?

தாகம் கொண்டவனில்லை
துரோகம் செய்ய
சத்தியமும் சாத்தியமும்
சாமர்த்தியமாய் சண்டையிட்டு
உண்மையை உடைக்கும்
சாவி கொண்டு
மேவி வந்து
ஆவி அணைத்தது
காவியும் காவு போகும்
சோர்வு இது -இதில்
நான் சிறிது

வேகமாய் நடந்தது
வேகும் முன் பரிமாறியது
வேறு பதம் ஆனது
விதி வலியது
மதி விலகியது
சதிக்குள் சறுக்கியது
கதையில் கிறுக்கியது
இப்படி யார் எழுதியது?

முன்பும் நீ தான்
முட்டியதும் நான் தான்
எழும்ப தானோ விழுந்தேன்
எழும்பும் முன் நீ நகர்ந்ததேன்
தழும்புகளா இவை
தயவு செய்து தள்ளி வை
விழாத இலை
விதைக்குள் இல்லை

புயல் நீ
வயல் என்னாகும்
புண்ணியம் வேண்டும்
கயல் நீந்தும்
புத்தியின்றி செய்தேன்
சத்தமின்றி மெல்லுகிறாய்
சத்தம் போட்டு கொல்லுகிறாய்
மெதுவாக இடி
மெல்லமுடியாத படி
சொல்ல முடியாத வலி
சொல்ல முந்தும் விழி

விழுந்த இலை
விழுங்கிய கல்
கிழிந்த வலை
நலிந்த நிலை
தொலைத்த கலை
விழித்தே இரவு
விழிக்காததால் பிரிவு
விழுங்கிவிட்டேனோ நிலவு
உளி பட்டும்
வெளிப்படா கல்
எது செய்வேன்
எங்கு சாய்வேன்
கருகிவிடுமோ
முடியாமல் முகிழ்கிறேன்
முடிந்து முடிந்து நீந்துகிறேன்
முடியுமா ஏங்குகிறேன் ...!

எழுதியவர் : Raymond (3-Nov-14, 10:34 pm)
பார்வை : 121

மேலே