யாசகியாக ஒருநாள்

எப்போதும் பூங்காவென இருக்கும் மனம், என்றாவது மௌனத்தில் மயானமாகிவிடுகிறது. அன்று எனக்கும்.

மனமுறிந்த மாலைவேளையது, கைவிட்டுப்போன தொழில், காலைவாரிவிட்ட நட்பு, அப்போதே சொன்னேன் என்று அனல் கக்கிய உறவுகள். யாருமற்ற அலுவலகம்.
இனி எனக்கென்ன வேலை இங்கு? எஞ்சிய பொருட்களையெல்லாம் வீட்டிற்கு ஏற்றுமதி செய்தாகிவிட்டது. இழவிற்கே வராத கண்ணீர் இதற்கா வந்துவிடப்போகிறது....? அழுத்தம் அதிகமென்ற பெயர் வாங்கிகொடுத்தது வெளிவராமலே என் கண்ணீரும்.

இது ஒன்றுதான் குறைச்சல், வண்டியை விட்டுவிட்டு பொடிநடையாக தனிமைத் தேடி பயனப்பட்ட கால்கள் அந்த கோவில் வாசலில் நின்றது. பகுத்தறிவு பேசவோ, பட்டிமன்றம் நடத்தவோ, வலுவில்லாத மனம் அதற்குமேல் அசையாது நின்றது.

எனக்காகவேனும் உள்ளே செல்லென்று, மழை எனை செல்லமாய் கொட்டியது. சொல்புத்தியென்பதுதான் அறவே கிடையாதே. மீண்டும் சுயபுத்தி குறுக்கிட, மழைக்கு ஒதுங்கிய கூட்டத்தோடு ஐக்கியமானேன் அந்த திண்ணையில் நானும்.

மழை ரசிக்கும் மனநிலையற்றவளாய் மலங்க விழித்தபடி மரமாய் நின்றிருந்தேன்.
அந்த கோவில் வாசலில் பாதி நனைந்தவனாய் ஒதுங்க முடியாமால் தவித்துக் கொண்டிருந்தான் இரு காலிழந்த இரவலன் ஒருவன். இறைவனை பார்க்கும் அவசரத்தில் இருந்தவர்கள் யாரும் அந்த இரவலனை கண்டுவிடவில்லை.

உதவிசெய்யலாமென கரம்கொடுத்தேன், அவன் மறுத்துவிட்டான். இதை வேண்டுமானால் எடுத்துகொண்டுவா என்று அழுக்குமூட்டையொன்று இருக்குமிடம் காட்டினான். எடுத்துக்கொண்டேன் அது ஏற்கனவே பாதி ஈரமாகிவிட்டிருந்தது. இருவரும் திண்ணையினை அடைந்தோம். அத்தனை கண்களும் அவனோடு சேர்த்து என்னையும் அலட்சியமாய் பார்த்தது. சில மூக்கை மூடிக் கொண்டு என்னை முறைக்கவும் செய்தது. நிற்க இடமற்று நெரிசலாய் கிடந்த திண்ணை வெறிச்சோடி போனது அடுத்த சில நொடிகளில். என்னையும் அந்த இரவலனையும் தவிர மற்றவர்கள் யாருமில்லை. எனக்கொன்றும் விளங்கவில்லை மழைக்கும் ஒதுங்குகிறார்கள் மனிதனுக்கும் ஒதுங்குகிறார்கள்.

மழை விடவில்லை என் மனதிலும். அடக்க முடியாத் துயரம், அலை யலையாய் கேள்விகள், ஆதங்கத்தின் நுனியில் அந்நியப்பட்டுக் கிடந்தவளின் அமைதியை களைத் ததொரு குரல். அது அந்த இரவலனின் குரல்தான்.

கோவிலுக்கு வந்தியா?
என்னிடம் பதிலில்லை. அவன் தொடர்ந்தான்
எங்கே இருந்து வர்ற?
சொன்னேன்.
சொந்த ஊரே சென்னைதானா?
பிறந்ததும் பிழைப்பதும் சென்னை சொந்தம் கொண்டாட நான் யார் என்றேன்.
விரக்தியா பேசுறியேமா?
உண்மை பலவகையாக பார்க்கபடுகிறது என்றேன்.
உனக்கு ஏதோ பிரச்சனை என்றான்.
நான் ஒன்றும் சொல்லவில்லை
படிக்கிறியா?
ஆம் மனிதர்களை.
காதல் தோல்வியா பிச்சைக்காரனோடெல்லாம் பெசிக்கொண்டிருக்கிராயே என்றான்.
சின்னதாய் சிரித்துவிட்டு மௌனமானேன். வயதிற்கேற்றார்போல உலகம் துயரத்திற்கான காரணங்களை தரம் பிரிக்கிறதென்று தெரிந்துகொண்டேன். அவனிடம் பேச முயற்சித்தேன்.

அவனோ
அர்ச்சனை கடைகாரனுக்கு சில்லறை கொடுத்து அதற்குரிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தான்.
அன்னதானம் எப்போதென்று பக்தர் ஒருவருக்கு நேரம் சொன்னன்.
எத்தனை மணிக்கு என்ன பேருந்து, வெளியூர் வாசிக்கு விளக்கம் சொன்னன்.
இடையிடையே தட்டையேந்தி சில்லரையும் சேகரித்தான்.
ஆலய வரலாறென்று ஏதேதோ சொல்லி, பரிகாரம் பல சொல்லி, தம்பதியர்களை வியக்க வைத்தான்.

படிச்சவங்க பரிகாரம் தேடுறாங்க பாரு, கடவுளெல்லாம் எங்க இருக்கு? எல்லாம் மனிதர்களோட வேலை. பகுத்தறிவு பேசினான்.
நான் அமைதியாய் இருந்தேன்.

என்ன நினைத்தானோ...!

அந்த அழுக்கு மூட்டையிலிருந்து கசங்கிய காகிதத்தில் சுருட்டி வைத்திருந்த இனிப்பை எடுத்து என் முன்னால் நீட்டினான். அது ஈரமாக காகிதத்தோடு ஒட்டியிருந்தது. மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டேன்.
அதை நான் சாப்பிடுகிறேனா இல்லையா என்பதை பற்றிய ஆர்வமற்றவனாய் மீதமுள்ள இனிப்பை மூட்டைக்குள் பத்திரப்படுத்துவதில் மும்முரமாய் இருந்தவனிடம் விடைபெற்று நகர்ந்தேன்.

கடைசிவரை என்னிடம் காசேதும் கேட்கவில்லை அவன்.

பேருந்து நிறுத்தம் வந்தடைந்தபோது, கையிலிருந்த இனிப்பை திறந்து பார்த்தேன். என் கவலைகள் மறந்து கேள்வி எழுந்தது.

உண்மையில் யார் யாசகர்?


(மீள்பதிவு - ஜூன் 2013 நிகழ்வு)
---- யாழ்மொழி

எழுதியவர் : யாழ்மொழி (5-Nov-14, 11:46 am)
பார்வை : 232

மேலே