உன்னை சிந்தித்தால் - போட்டிக் கவிதை - தேன்மொழி

உன்னை சிந்தித்தால் - தேன்மொழி
---------------------------------------------------
ஒருமுகமாய் ஓடும் - உந்தன்
சுகமான சுயநலத்தை எரித்து
முழுமனதாய் அன்பை - கருணை
அகமான பொதுநலத்தில் விதை ..!
பதில் சொல்லாத
பறவைகளின் பாதையில்
கடல் நீர் கடந்தாலும்
கானல் நீராய் போவதை போல்
உந்தன் கவலை கடந்து
உவகையின் தேடலை
ஆழ்மனதில் அசையாமல்
அழுத்தமாய் பதிய வை ..!
தாமதம் தகுதியிழந்து
வன்முறை வயதிழந்து
தரையில் துகளாய் சிதற வை ..!
தியாகமே குணமாக
புரிதல் ஒன்றே நீயாக
திறமையை தினம்தினம் உயர வை ,,!
குழந்தை மனதிலே மிதக்க
குறுநகை இதழில் பிறக்க
நிம்மதியை நெஞ்சில் நிறைய வை ..!
ஓடைகளின் ஓட்டமாய்
இலைகளின் சுவாசமாய்
தாகத்தின் தேவையை நிறைவு செய் ..!
அள்ளி தரும் உணர்வுகளை
கிள்ளி விட்டு செல்லாமல்
நரம்புகளில் நயமாய் துடிக்க வை ..!
கோபத்தின் குணத்தை
குரல்வளையில் தடுத்து
பக்குவத்தின் தேடலை விழியில் வை ...!
இதமான பொழுதுகளில்
கனமான நினைவுகளை
கண்ணிமை சிமிட்டலில் உடைய வை ..!
நகரும் கணங்களில்
உணராத உன்னை உள்வாங்கி
உள்ளத்தின் உச்சத்தில் உலவ வை ..!
சிந்திக்கும் சில நொடியில்
மனிதத்தின் மகத்துவத்தை
சிகரத்தின் சின்னமாய் சிரிக்க வை ..!
- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிட பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு .