இதயதேசத்து இம்சையரசி

கவிச்சுடரே
கவியில் பிழைதிருத்தும்
கண்ணம்மா - இந்த
கவியின் நலம்விரும்பும்
செல்லம்மா..

நான்கரை ஆண்டுகள்
நட்போடு நகர்ந்துவிட்டது
நடந்தேறிய நாடகங்கள்
எதிலுமா எனை வெறுக்கவில்லை..?

தமிழன்னை பரிசளித்த
பொற்கிழியே!
தவறுகள் கண்டுமா - எனை
ஒதுக்கவில்லை...?

தொட்டவையாவும்
துலங்காதபோதும்
தோல்வியே இவளுக்கு
நிலையானபோதும்
உறவுகளின் வஞ்சத்தில்
வதைபட்டபோதும்

பணமிழந்து பொருளிழந்து
பிச்சையெடுத்தபோதும்
பெற்றவளே சிலநேரம்
குற்றம் சொன்னபோதும்

சீ !
என்று விலகிடாமல்
சேர்த்துக்கொள்வதேனடி...?

பால்வடியும் பூவே
தேன் சூழ்ந்த தீவே
வான்மாட ஒளியே
நான்பாடும் கவியே

பாதாளி என்மீதா - நீ
பாசக்கணை தொடுக்கின்றாய்..?
அழலென்று தெரிந்துமா
அன்பை வாரி இரைக்கின்றாய்?

வரமாக வந்தவளே
வணக்கத்திற்குரியவளே
என்
நட்பு குளத்தின் ஒற்றை தாமரையே
இதயதேசத்தின் இம்சையரசியே

வரங்கள் சில கேட்கின்றேன் - என்
விருப்பம் நிறைவேற்றிடு

கோபம்கொள்
கொடும்வார்த்தை பேசு
மன்னிக்காதே - எனை
நிராகரித்துவிடு
கன்னத்தில் அறை
காரி உமிழ்
முகத்தில் விழிக்காதே யென - எனக்கு
முழுக்குப் போடு

பாசநதியே
பட்டுவிடா நட்பே
நேசக்குடையே - நான்
நனையும் மழையே

பழகிப்போன ஏதேனுமொன்றை
நீயும் செய்யடி....

மாறாக ஏனடி?

எந்நாளும் துணையிருந்து
எனக்காக கண்ணீர் விட்டு
எல்லாம் மாறுமென
மனதை தேற்றுகிறாய்
உனை இழந்திடுவேனோ - என்ற
அச்சத்தை தூண்டுகின்றாய்...!

எழுதியவர் : யாழ்மொழி (8-Nov-14, 12:38 pm)
பார்வை : 234

மேலே