நித்தியனே உன்பொறுப்பு

என்குரலும் கேட்கலையோ
...ஏனுனக்கு செவியிலையோ
உன்தயவை நான்பெறவே
...உருகுவதும் தவறாமோ
பொன்பொருளைக் கேட்கலையே
...புகழதுவும் கேட்கலையே
என்மனத்தில் நிம்மதியை
...இரந்திடுவாய் என்னிறைவா

ஏன்படைத்தாய் இத்தரையில்
...என்னையொரு மனிதனென
வான்படைத்த உங்கரத்தால்
...வல்லோனே கூறிடுவாய்
கான்நடக்கும் புலியதன்முன்
...கவின்மிகுஅம் மானினைப்போல்
தான்படைத்தாய் நல்லவுள்ளம்
...தந்தெனையேன் தவிக்கவிட்டாய்

அழியாத அருளுனது
...ஆறுதலைத் தந்தாலும்
பொழியாத மழையதுவால்
...பூமியிது பெறுவதென்ன
விழிபோல வெறும்பணத்தை
...வேர்க்கவேர்க்க சேர்த்திடுமப்
பழிவாழ்வை எனக்குமட்டும்
...பக்கத்தில் வரதடுத்தாய்

குற்றங்கள் தினம்புரிந்தேன்
... கூர்மதியைக் கொண்டிலனே
சுற்றங்கள் வெறுத்தொதுக்கி
...சுதந்திரமாய் திரிந்தேனே
நற்றவங்கள் நானறியேன்
...நடுநிலையும் தானறியேன்
பெற்றவரின் மனம்கொதிக்க
...பேதமையில் உழன்றேனே

இறந்து விடத்தோன்றும்
...இழிவுகளை சந்தித்தால்
பறந்து விடத்தோன்றும்
...பாவமிகு செய்தபின்னே
மறந்து முனைத்தொழாமல்
...மண்ணுலகில் வாழ்வதினும்
மறைந்து விடல்நலமே
...மனம்மயங்கி அழுகிறதே

நீயாக உதவிடுவாய்
...நித்தநித்தம் நம்புகிறேன்
காயான என்வாழ்க்கை
...கனியாகும் பொறுமையுடன்
ஓயாமல் கேட்டபின்னும்
...ஒதுக்கிஎனை நீவிட்டால்
தேயாதோ என்மனது
...தெம்பதனைத் தாவுடனே

விசுவாசம் கொண்டவன்நான்
...விம்மியழு மிக்குரலில்
இசைவாக உன்கருணை
...ஈந்தெனையெ ஆட்கொள்வாய்
விசமான தீயவைகள்
...விட்டெனையே வெகுதூரம்
நிசமாக விரட்டிடுவாய்
...நித்தியனே உன்பொறுப்பே

எழுதியவர் : அபி (11-Nov-14, 1:23 pm)
பார்வை : 75

மேலே