எனது கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 4

அவளும் ஒரு பெண் 1
அவள்
இரவின் இலக்கியம்
இலக்கணம் மீறிய கவிதை
சமூகம் சிதைத்த ஓவியம்
அவளும் ஒரு பெண் .
========================================================================
பிரான்ஸ் வித் லவ் 2
எலெக்ட்ரானிக்ஸ்
இ மெயில் காலத்தில்
மனம் திறந்து
மடல் வரையவா சொல்கிறேன்
தமிழில் இரண்டு வார்த்தை
ஆங்கிலத்தில் புரிகிற மாதிரி
இரண்டு வார்த்தை
ஒரு எஸ் எம் எஸ் "பிலி டூ "
பிலி டூ என்றால்
பிரஞ்சில் காதல் கடிதம்
புரிந்ததா
என் அப்பாவி அறிவு ஜீவிதா
=====================================================================
காதல் முரண்பாடு 3
காதலை கடைபிடிப்பவர்கள்
கவிஞன் முதல் கடைசி மனிதன் வரை
உலகில் எத்தனையோ பேர்
அதில்
காதலியை கைபிடித்தவர்கள்
எத்தனை பேர் என்பதுதான்
வாழ்கையின் பெரிய முரண்பாடு
=====================================================================
துள்ளுவதெல்லாம் மான் அல்ல ! 4
முகில் நிறம்
விழியில் வெளிச்சம்
ஒரு வெகுளித்தனம்
வெள்ளைச் சிரிப்பு
அந்திக் கருமையின்
அதிசயா வடிவம்
அவள் சோள கொண்டையை
பல்லால் கடித்தபடி வயல் வெளியெல்லாம்
துள்ளி திரிந்த போது
எனக்கு ஒன்று புரிந்தது
துள்ளுவது எல்லாம் மான் அல்ல
=====================================================================
மௌனத்தின் வித்தியாசம் 5
இறுதி ஊர்வலத்திலும் மௌனம்
இரண்டு உள்ளங்கள் சந்திப்பிலும் மௌனம்
ஒரு வித்தியாசம்
முன்னதில் சாவின் கனம்
பின்னதில் உயிர்த்துடிப்பின் லயம்.
வெறும் நிசப்த்தம் மௌனம் இல்லை
எண்ண அலைகள் அடங்கிய
இதய தடாகத்தின் ஏகாந்தம் மௌனம்
ஓசையின்றி உள்ளே பொழியும்
ஆனந்த அருவி
அதன் விரிவு எல்லை அற்றது
அதன் ஆழம் அளக்க முடியாதது
ஞானியின் தவம்
மானுடத்தின் மகத்தான தத்துவம்
=====================================================================
இமை மூடி நின்றால் 6
மழை பொழியும் வானம்
பொழியாது போனால்
நதி எங்கு போகும்
மலர் தூவும் மரங்கள்
பூக்காமல் நின்றால்
மலர்ச் சோலை என்ன ஆகும்
குளிர்தென்றல் காற்று
வீசாமல் நின்றால்
இளவேனில் எங்கு போகும்
விழி பேசும் மௌனம்
இமை மூடி நின்றால்
காதல் மொழி எங்கு போகும் !
=====================================================================
சிட்டுக் குருவி 7
சிட்டுக் குருவி நான்
சிறகடிக்கும்
சின்னப் பறவை நான்
பருந்த்களைப்போல்
பெரிய சிறகுகளும் இல்லை
காக்கையைப் போல்
அழகிய கருமை நிறமும் இல்லை
ஆனாலும்
எனக்கும் அந்த வானம் வேண்டும்
உங்கள் முற்றத்தில் நீராடுவேன்
சுற்றாத மின்கற்றாடியில்
சற்று இளைப்பாறுவேன்
நீங்கள் சிதறிய மணிகளைத்
தின்று வயிராறுவேன்
பாரதி எங்களை உங்கள் சாதி என்பான்
மறந்து விடாதீர்கள் எங்களை
சிட்டுக் குருவி நான்
சிறகடிக்கும் சின்ன சீவன் நான்
மற்றவர் எப்படியோ
கவிதை எழுதும் நான் மறக்கவில்லை
நானும் சிட்டுக் குருவிதான்
சிறகடிக்கும் சின்னப் பறவைதான்
எனக்கும் அந்த வானம் வேண்டும் !
=====================================================================
சத்திய ஞானம் 8
மெய் என்பது
பொய் என்பதுதான் மெய்
சத்தியத்திற்க்காகவே
வாழ்ந்த அரிச்சந்திரனும்
இந்தப் பொய்யை
சுமந்துதான் திரிந்தான்
எல்லாம்
தற்காலிக நிஜங்கள்
நிரந்திர பொய்கள்
=====================================================================
மாலை நமக்காகவே காத்திருக்கிறது 9
என் பார்வைக்கு
மொழி தந்தாய்
காதல் என்று
பெயர் சொன்னாய்
உயிருக்கு
உணர்வு தந்தாய்
உணர்வுகளெல்லாம்
கவிதை என்றாய்
கவிதை எல்லாம்
நீ நடந்தாய்
தேவதையே
இன்று நேரில் வந்தாய்
மாலை நமக்காகவே
காத்திருக்கிறது
=====================================================================
தமிழன் நல்லவன் வல்லவன் 10
பேசாத நடிகையையும்
பேசாத நடிகனையும்
வைத்து
பேசும் படம்
எடுக்கும் தமிழன்
நல்லவன்
கலை வல்லவன்
=====================================================================
-----கவின் சாரலன்