எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 3

ஏதேன பூந் தோட்டம் 1

தேன் சிந்தும் மலர்கள்
துள்ளி ஓடும் மான்கள்
தாவி ஓடும் சிற்றோடைகள்
இவைகளுடன் அவர்களும் இருந்தனர்
அந்தப் பூந்தோட்டத்தில்
அவர்கள் ஆடை ஏதும் அணியவில்லை
ஆனாலும் அங்கே விரசம் இல்லை
அவர்கள் அன்பு விழியால் பேசினார்
அதில் அழகிருந்தது
தூய்மையின் மனித வடிவாம் அவர்கள்
அவள் பெயர் ஏவாள் : அவன் பெயர் ஆதாம்
அவர்கள் பேசிய மொழி மானுடம்
ஆமென்
=====================================================================
பறவைக் கூடு 2

தென்றல் தாலாட்டும்
மரக் கிளையில் தேன் வண்டு
இசை பாட
தேடித் தேடி பறந்து சென்று
சேர்த்த சிறு துரும்பால்
கூர் அலகு கொண்டு கட்டிய
மாணிக்கத் தொட்டில் !
=====================================================================

மனச் சுவர் கிறுக்கல்கள் 3

மனங்களில் எல்லாம் எழுதிச செல்கிறேன்
கவிதைகளா இவை?
கிறுக்கல்கள்
மனச் சுவர் கிறுக்கல்கள்
என்று வெகுண்டெழுந்து அழித்து விடுகிறீர்கள்
அழித்தபின்
எழுதிய வரிகளை நினைத்து பார்கிறீர்கள்
அப்போது நான் மீண்டும்
வாழத துவங்குகிறேன்
கவிதைகளா இவை
இல்லை
மனச் சுவர் கிறுக்கல்கள் !
=====================================================================

கவிதைக்கு அழகு 4

கவிதைக்கு
சொல் அழகு
சொல்லுக்கு
கருத்தழகு
கருத்துக்கு
சுவை அழகு
சுவைக்கு
ஆறழகு
ஆறுக்கு
முருகு அழகு
முருகிற்கு
தமிழ் அழகு
அந்த தமிழுக்கு
நான் அடிமை !
=====================================================================

மதுக் கிண்ணம் 5

கவிதை
தனிமையின் இனிமை
எழுத எழுத வரும்
போதை
நான் ஏந்தி நிற்கும்
மதுக் கிண்ணம் .
=====================================================================

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-14, 10:30 am)
பார்வை : 97

மேலே