மனச்சரிவு – கே-எஸ்-கலை
காலையில் வறட்டு ரொட்டி – கொஞ்சம்
கசக்கும் தேயிலைச் சாயம் !
மாலையில் வெற்றுச் சட்டி – நெஞ்சம்
கசக்கிப் பிழியும் ஆயம் ! (ஆயம் = துன்பம்)
படிக்க வசதிகள் இல்லை – அங்கு
பசித்தால் உணவும் இல்லை !
துடிக்கும் சின்னப் பிள்ளை – அதற்கு
குடிக்கப் பாலும் இல்லை !
மருத்துவ வசதிகள் இல்லை – நல்ல
மகப்பேற்று விடுதிகள் எங்கே ?
பிரசவ வேதனைக் கொண்டால் – பாவம்
சவங்களே பிரசவம் அங்கே !
சோற்றைக் கண்டால் சொர்க்கம் – என்ற
சோகமே இங்கு நித்தம் !
நாட்டைக் காக்கும் கூட்டம் – இவரைக்
காப்பார் இல்லை வெட்கம் !
நாட்டுக்காய் உழைக்கும் மக்கள் – இவர்
வீட்டினில் விளக்குகள் இல்லை !
ஓட்டுக்காய் குரைக்கும் நாய்கள் – இதை
உணர்ந்திட அக்கறை இல்லை !
வாழ்ந்தது பத்தடி வீடு – அதில்
வளர்ந்தது பிள்ளைக ளோடு !
நேர்ந்தது மாபெரும் கேடு – அதில்
நெரித்தான் எமன்மண் னோடு !
கிழக்கே காணா ஏழை – அவர்
கிடந்தது தேயிலைப் பாலை !
விடிந்தது அந்தக் காலை – அது
விழுங்கிப் போனது ஊரை !
பாடைக் கட்டக் கூட – அவரிடம்
பணமே இல்லை என்றோ
மேடை இடித்துத் தள்ளி – மொத்தமாய்
மூடிப் போனது அம்மண் ?