எனது கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 6

கோடி பெறும் 1

அரசியல் ஆலயமானால்
புனிதம் பெரும்
ஆலயம் அரசியலானால்
நாடு என்ன பாடுபடும்
இரு பாலரும் சித்தித்தால்
நாடு கோடிபெறும்
========================================================================

மீசை வளர்ப்போம் காதல் புரிவோம் 2

மீசை இளமையின் அழகு
காதலுக்கு வரைந்த வரவேற்பிதழ்
மீசை வைத்து காதல் பாடுங்கள்
தாடி வளர்த்து ஞானம் பாடாதீர்கள்
இளமையும் காதலும் செத்து விடும்
மீசையே உன் புனைப் பெயர் ஆண்மைதானே
நான் அறிவேன்
காதல் தூதுனனே நன்றி. !
========================================================================

மலர் ஆலயத்தின் ஒளி தீபங்கள் 3

மலர் ஆலயத்தின்
ஒளி தீபங்களே
தூய பனித்துளிகளே !
உங்கள் தரிசனதிற்க்குதான்
ஓடிவந்தேன்
அதற்குள்
மறைந்தது ஏன்?
========================================================================

தந்தச் சிற்பிகள் 4

சிக்கனமான
சில வரிகளில்
சின்ன சொற்களால்
செதுக்கப்படும்
தந்தச் சிற்பம்
புதுக்கவிதை
செதுக்குபவர்கள்
கவிஞர்கள் இல்லை
தந்தச் சிற்பிகள்
========================================================================

நான் ரோமியோ நீ ஜூலியட் 5

சில் என்று வந்து
மலர் இதழில்
முத்தமிட்டது
ஒரு பனித்துளி
மலர் சிலிர்த்து
நின்றது
நான் ரோமியோ
நீ ஜூலியட்
என்றது பனித்துளி
சரி போ
சிறிது நேரத்தில்
நீ மறைந்து விடுவாய்
நான் உதிர்ந்து விடுவேன்
சாவும் கல்லறையும்தானே
ரோமியோவுக்கும்
ஜுலியட்டிர்க்கும்
இந்த உலகில்
என்றது மலர்
========================================================================

புத்தக வரிகளில் இல்லை 6

புத்தக வரிகள் எல்லாம்
போதிக்கும் மரமாயின்
இங்கே எல்லோரும்
புத்தன்தான் ஆதி சங்கரன்தான்

காகிதத்தின் பக்கங்களில்
கடவுள் தெரிவதில்லை

வெறும் காகிதங்களை
விட்டெறிந்து விட்டு
உள்ளே பார்

வேதங்கள் எழுதப்படவில்லை
உரைக்கப்பட்டது
குருவின் அருகமர்ந்து கேள்
அமர்
உயர்
========================================================================

மனத் தோட்டம் 7

தேடலில்
காட்சிகள்
எங்களுக்கு தெரிவதில்லை
தொடலில்
உலகமே உறவாகிவிடுகிறது
நாங்கள் நடப்பது
மலர் தோட்டங்கள் இல்லை
நாங்கள் நடப்பது
மனத் தோட்டங்கள்
========================================================================

சாலையின் சோகம் 8

மணலை எல்லாம் கொள்ளை அடிச்சு
நதி ஆத்தா வயித்துல
மண்ணை அள்ளி போடறானுங்க

வாய் பந்தல் போட்டு போட்டு ஏழைங்க
வயித்திலும் வாழ்க்கையிலும்
மண்ணை அள்ளி போடறானுங்க

குண்டும் குழியும் பள்ளமுமா ரோடெல்லாம்
ரணமாகி கிடக்கோம் எங்கே மேல
மண்ணை அள்ளி போடுவாரில்லையே சாமி !
========================================================================

பேசும் விழி பேசாது மொழி 9

நிலவின் நிஜத்தை படைத்து
விழியில் கயல் எழுதி
இதழில் வீணையை
பறித்து விட்டாயே இறைவா !
பேசும் விழி பேசாது மொழி ஏன் ?
சொல்லும் இசையும்
இவளுக்கு இல்லை என்றால்
உலகில்
ராகங்கள் மௌனமாகிவிடும் !
========================================================================

மானுடம் வாழ்வது தாயினால் 10

தாய்
தாலாட்டும் கவிதை
அன்பின் இலக்கியம்
எழுதி முடிக்கமுடியாத
பாசத் தொடர்கதை
அவள் அன்பு
படிக்க வேண்டிய
முதல் புத்தகம்
அவள்
மனிதனுக்கு
இறைவன் அளித்த
வரப் பிரசாதம்
மானுடம் வாழ்வது
தாயினால்
========================================================================
=====கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-14, 4:47 pm)
பார்வை : 96

மேலே