குறைகளெல்லாம் குறைகளன்று
குறைகளெல்லாம் குறைகளன்று
பாவலர் கருமலைத்தமிழாழன்
காதிரண்டும் கேளாத பீத்தோ வன்தான்
காதில்லை எனச்சோர்ந்தோ அமர்ந்தி டாமல்
மேதினியோர் வியக்கின்ற சிம்போன் என்னும்
மேன்மையான இசையளித்தே புகழைப் பெற்றார் !
வீதிதனில் நடப்பதற்கே ஒருகால் இல்லா
விட்டாகர் மனம்தளர்ந்தே அமர்ந்தி டாமல்
சாதிக்கும் முயற்சியுடன் எவரெஸ்ட் ஏறி
சாதனையைப் படைத்திட்டார் செயற்கைக் காலில் !
படிப்புனக்கோ ஏறாதென் றேசிக் கற்கும்
பள்ளிவிட்டே அனுப்பிவிட்ட ஐன்ஸ்டின் என்பார்
இடிந்துமனம் தளர்ந்திடாமல் முயற்சி செய்தே
இணையில்லா அறிவியலின் அறிஞரானார் !
படிப்பதற்கே வசதியில்லா பார்டே என்பார்
பகலெல்லாம் அச்சகத்தில் பணியை யாற்றி
அடிமனத்துள் இருந்திட்ட ஆர்வத் தாலே
அற்புதமாய் மின்காந்தம் கண்ட ளித்தார் !
உள்ளத்தில் உறுதியென்னும் உயிர்ப்பி ருந்தால்
உடற்குறையோ குறையாக இருந்தி டாது
பள்ளத்தில் விழுந்தாலும் முடியும் என்றால்
படிக்கற்கள் வந்துன்றன் முன்னே நிற்கும்!
வெள்ளம்போல் சோதனைகள் உனைச்சூழ்ந் தாலும்
வெறியோடே எதிர்த்துநின்றால் வழியைக் காண்பாய்
எள்ளல்கள் முயலுமுன்றன் அடிவ ணங்கும்
என்றென்றும் உழைப்பொன்றே உனையு யர்த்தும் !