சில்லறை பாக்கி

தாம்பரம் வர்ர வரை பொறுமையா உக்காந்திருந்தேன். தாம்பரத்துல வண்டி நின்னு ஆளுங்கள ஏத்திக்கிட்டு மறுபடி கிளம்பும் போது மொத்த பேருந்தும் பிதுங்கி வழியாததுதான் குறை. எக்கச்சக்கமா டிக்கெட்டுகள ஏத்திக்கிட்ட குஷியில பேருந்து எருமைய முழுங்குன மலைப்பாம்பு கனக்கா உர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு நவுந்தது வேற வெயிலு நேரத்துல செம்ம எரிச்சலா இருந்துச்சு. எனக்கு முன்னாடி சீட்டுக்கு வர்ற வரைக்கும் கண்டக்டரையே பாத்துகிட்டு இருந்தேன். பழைய படங்கள்ள வர்ற வில்லன் நடிகர் மனோகர் மாதிரி ஒரு உருவம் அவருக்கு இருந்தது வேற கொஞ்சம் உள்ளுக்குள்ள கிலிய ஏற்படுத்தினிச்சு....

கோயம்பேட்டுல இருந்து இதுவரைக்கும் பத்து தடவை மனுசன் என்னை க்ராஸ் பண்ணிப் போயிருப்பான் ஆனா கண்டுக்காத மாதியே டிக்கெ....டிக்கெ....ன்னு கடைசியில சொல்ல வேண்டிய 'ட்'டன்னாவ மென்னு தின்னுகிட்டே போறானே தவிர எனக்கு கொடுக்க வேண்டிய சில்லற பாக்கிய திரும்பக் கொடுக்கவே இல்ல.....இன்னும். 1000 ரூபாய் நோட்ட மொத்தமா கொடுத்தது எம்புட்டு தப்பாப் போச்சுடா ஈசுவரா? ஊர்ல எல்லாம் லோக்கல் பஸ்ல டிக்கெட்டுக்கு பின்னாடி எம்புட்டு காசு வாங்கினோம்னு எழுதி கொடுப்பாய்ங்க அட்லீஸ்ட் அதைக் காட்டியாச்சும் பேலன்ஸ் காசை திரும்பி வாங்கிக்க முடியும்....இவன் டிக்கெட் பின்னாடியும் ஒண்ணும் எழுதிக் கொடுக்கல, எழுதிக் கொடுங்களேன்னு கேட்டா தப்பா எடுத்துக்குவானோன்னு நினைச்சு கொஞ்சம் டீசண்டா நடந்துக்கிட்டது தப்போ....மிச்சக் காசக் கொடுப்பானா...? மாட்டானா?

யோசிச்சுக்கிட்டே சரி சரி என்கிட்ட வந்துட்டுதானே க்ராஸ் பண்ணிப் போகணும் மீதிக்காச கொடுங்க அண்ணேன்னு கேட்டுப் பார்ப்போம்னு முடிய கிடிய வெட்டிக்கிட்டு கொஞ்சம் மீசைய ஒதுங்க வச்சு கொஞ்சம் ஜெண்டிலா வரக்கூடாதா...பத்துக் கொலை பண்ணிட்டு பதினோராவது கொலை செய்ய ஆளுக் கிடைக்க்காம தேடிக்கிட்டு இருக்க மாதிரியே ஒரு அப்பியரன்ஸ வச்சிருக்காய்ங்களே....ரொம்பச் சங்கடம்டா உங்க கூட எல்லாம் டீல் பண்றதுன்னு வடிவேலு மாதிரி பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டே கண்டக்டரையே வச்ச கண் வாங்காம பாத்துகிட்டு இருந்தேன்...

எங்க சார் போறீங்க...எனக்கு முன் சீட்டில் இருந்த ஆளுகிட்ட அதட்டுற மாதிரியே கேட்டாரு கண்டக்டர், நான் கண்டுக்கல, கண்டுக்காத மாதிரி ஜன்னல் பக்கம் முகம் திருப்பிக்கிட்டு ஓரக்கண்ணால கண்டக்டரைப் பார்த்தேன்....பயபுள்ள செம்ம பார்ம்ல முகத்த கடுகடுப்பா வச்சிக்கிட்டு நிக்குது, கண்ணு எல்லாம் செவந்திருக்கு குடிகாரரா இருப்பாரோ? இருந்தாலும் ஒரு கவர்மெண்ட் சர்வெண்ட்க்கு இம்புட்டு ஆகதுய்யா..ன்னு உள்ளுக்குள்ள பொறுமிக்கிட்டிருந்தேன். முன் சீட்டுக்கு டிக்கெட்டக் கொடுத்துப்புட்டு என்ன க்ராஸ் பண்ணும் போது மறுபடி டிக்கெ...டிக்கெ....

சார்..கோயம்பேட்ல ஏறுனது கும்பகோணம் போறேன்... சில்லற கொடுக்கல நீங்க...........நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள ...கொடுக்குறேன் கொடுக்குறேன்...எங்கயும் ஓடிப்போகல இங்கதானே இருக்கேன்...ம்ம்ம்...நியாபகம் இருக்கு முறைச்சுப் பாத்துக்கிட்டே வெடுக்குன்னு சொல்லிட்டு அடுத்த சீட்டுக் போய்ட்டான் அந்தப் பாழாப்போன கண்டக்டர். எனக்கு பின்னாடி சீட்ல ஒரு ஆளு ஆயிரம் ரூபாயை நீட்டி திண்டிவனத்துக்கு டிக்கெட் கேக்கவும் எனக்கு ரொம்ப சந்தோசமா போயிடுச்சு ங்கொய்யால நம்ம கூட சோடிய இன்னொருத்தன் வரப்போறான்யா....னு உள்ளுக்குள்ள் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசமும் அடுத்த நிமிசமே காணாமப் போயிருச்சு...

சரக் சரக்குனு ரூவா நோட்டுகள எண்ணி எனக்கு பேக் சீட்ல இருந்தவனுக்கு சில்லறை கொடுத்த கண்டக்டர பாத்து இன்னும் டென்சனாகிப் போச்சு எனக்கு. யோவ் என்னய்யா நினைச்சுகிட்டு இருக்க....என்ன வெள்ளாடுறியா...? ஊர்ல இருக்க அம்புட்டு பேருக்கும் சில்லற கொடுக்குற எனக்கு மட்டும் கொடுக்க மாட்டேங்குற....என்னையப் பாத்த எப்புடித் தெரியுது உனக்கு....காச வாங்கிக்கிட்டு யார ஏமாத்தப் பாக்குற......கொடுய்யா மீதிச் சில்லறையன்னு கத்தி......

கேக்க நினைச்ச வார்த்தை எல்லாம் தொண்டையோட திரும்பிப் உள்ள போயிருச்சு. இவன் நமக்கு மிச்சக் காசைக் கொடுக்க போறது இல்லை, காசை கேட்டா எப்பவோ சில்லறைக் கொடுத்திட்டேனேன்னு அவன் சொன்னா நம்மகிட்ட என்ன எவிடன்ஸ் இருக்கு 1000 ரூபாய் கொடுத்ததுக்கு..., என்ன படிச்சு என்ன இப்படி ஏமாளியாப் போய்ட்டமேன்னு அழுகையும் ஆத்திரமும் வர சரி சரி போகட்டும் கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடி கேட்டுக்கலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன். காலையில எட்டு மணிக்கு ஏறுன வண்டிய...என்னமோ அமரர் ஊர்தி மாதிரி அழிச்சாட்டியமா ஓட்டிக்கிட்டுப் போன டிரைவர நினைச்சு ரொம்ப பெருமைப்பட்டுக்கிட்டேன், பெட்ரோல சேவ் பண்றாராம்மா.....எப்படியோ போய்த்தொலையட்டும் கவர்மெண்ட் பஸ்சு அந்த ஸ்பீட்ல போறதுதான் நமக்கு சேப்டின்னு ஆறுதல் பட்டுக்கிட்டாலும்

டிவிஎஸ் எக்ஸெல் எல்லாம் நான் போன பஸ்ஸ ஓவர்டேக் பண்ணிட்டு போன அந்தக் கொடுமைய எங்க போய் நான் சொல்றது. இடை இடையில என்ன என்னவோ ஊர்ல எல்லாம் வண்டிய நிறுத்தி ஆளுகள ஏத்திக்கிட்டாய்ங்க...இப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் நான் கண்டக்டர பாக்குறதும் அவரு என்னைய கண்டுக்காம போறதும்னு ஒரு பெரிய போராட்டமே அங்க நடந்துகிட்டு இருந்துச்சு. ஒரு தடவை அவரு என்னைய க்ராஸ் பண்ணிப் போகும் போது எதுக்கும் இருக்கட்டுமேன்னு கொஞ்சம் ஸ்மைல் பண்ணி வச்சேன்....பதிலுக்கு கண்டக்டரும் லைட்டா என்னையப் பாத்து ஸ்மைல் பண்ணின உடனே கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு....ஆகா...லைட்டா சிரிக்கிறான்யா நல்லவனாத்தான் இருப்பானோ, நாமதான் ஒருவேளை தப்பா நினைச்சுட்டோமோ...கண்டிப்பா சில்லறை கொடுத்துடுவாருன்னு ஒரு சின்ன சந்தோசத்துல கொஞ்சம் ப்ரஸர் எனக்கு டவுன் ஆக ஆரம்பிச்சுது....




சேத்தியாத் தோப்பு தாண்டி சாப்ட வண்டிய நிறுத்துன உடனே கட கடன்னு கீழே நானும் கண்டக்டர் டிரைவர் கூடவே போயி அவைங்க எந்த டேபிள்ல சாப்ட உக்காந்தாங்களோ அதுக்கு நேரா போய் உக்காந்துக்கிட்டேன். ஒரு வேளை சாப்டு எந்திரிச்சுப் போய் வண்டிய எடுத்துக்கிட்டு பறந்துட்டாய்ங்கன்னா.....அப்புறம் பிரச்சினை ஆயிடும் இல்லையா...

அவைங்க சாப்டுறத வச்ச கண்னு வாங்காமா பாத்துக்கிட்டே நான் சாப்டுகிட்டு இருந்தேன். நெருப்புக் கோழி முழுங்குற மாதிரி கண்டக்டர் அவசரம் அவசரம முழுங்கிகிட்டே என்னையப் பாத்து என்னம்மோ டிரைவர்கிட்டசொல்லிக்கிட்டே டிரைவர சீக்கிரம் சாப்பிட சொல்ற மாதிரி எனக்குப் பட்டிச்சு.....

ஆகா...ப்ளான் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...., என்னைய இப்டியே விட்டுப்புட்டு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பிப் போறதுதான் உங்க ப்ளானா...? அடப்பாவிகளா ஆயிரம் ரூவாய்க்கு என்ன என்ன ப்ளான் பண்றாய்ங்கன்னு நினைச்சப்ப கெதக்குனு இருந்துச்சு எனக்கு. அது எப்படி கண்டக்டர் டிரைவர்கிட்ட உங்களப் பாத்து ஏதோ சொன்னது உங்கள கழட்டி விட்டுட்டுப் போறதுதான்னு சொல்றீங்கன்னு நீங்க எல்லோரும் கூட்டமா நின்னு கேக்குற லாஜிக் எல்லாம் சரிதான்...ஆனா... என்னையப் பாத்து பேச அவைங்க ரெண்டு பேருக்கும் என்ன இருக்குன்னும் நீங்க யோசிக்கணும்...?

அவைங்க என்ன என் கூட்டாளியா? அங்காளி பங்காளியா? பக்கத்து வீட்டுக்காரனா? இல்லை எதிர்த்த வீட்டுக்காரனா? பொண்ணு கொடுத்து இருக்காய்ங்களா? எல்ல எடுத்திருக்காய்ங்களா? இல்லை எங்கூடப் படிச்சாய்ங்களா? என்னையப் பாத்துப் பேச என்ன இருக்கு இவைங்களுக்குன்ற என்னோட லாஜிக்கையும் நீங்க புரிஞ்சிக்கணும்..? விடுவனா நானு அவைங்களுக்கு முன்னாடியே சாப்டு முடிச்சுட்டு பஸ் கிட்டக்க வந்து எச்சரிக்கையா நின்னுக்கிட்டேன். வண்டில ஏறப்போன கண்டக்டரை பாத்து மறுபடி ஸ்மைல் பண்ணினேன்....அவரும் ஒரு சிகரெட்ட பத்த வச்சிக்கிட்டே என்னப் பாத்து சிரிச்சு வச்சாரு. சில பேருக்கு மாத்திரம் பிரத்தியோகமான டெரர் முகத்தை கடவுள் வச்சிடுறான். எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ங்கொய்யால ஈரக்கொலை அறுந்து கீழ விழுகுற மாதிரி உள்ள பதறுது....

அதோட இல்லாம் நாம எல்லாம் என்ன ஃபைட்டரா பாஸ்...? முடிஞ்ச வரைக்கும் கரைச்சல் இல்லாம அமைதியா போறதுதான் நல்லது. முடியாத பட்சத்துல பிரச்சினை வர்றப் பக்கமே நாமப் போகக்கூடாது அவ்ளோதான் நம்ம பாலிசி. ஏதாச்சும் ஏடாகூடமா பேசி அவர் படக்குன்னு மூக்குல குத்திட்டா ப்ப்ப்ப்ளக்க்கு ரத்தம் கித்தம் வந்துடும்ல...திருப்பி அடிக்கிறேன் பேர்வழின்னு அவர்கிட்ட சண்டை போட்டு நம்ம வந்த சோலிய விட்டுப்புட்டு இதுவா நமக்கு வேலை. சர்தான் கண்டக்டர் லைட்டா சிரிச்சு வைச்சுட்டாரு இதான் சமயம்னு ....

சார்......அந்த சேஞ்ச்ச்ச்ச்....? மெல்ல எச்சியை முழுங்கிக்கிட்டே கேட்டேன்....சார்...தர்றேன்னு சொல்லி இருக்கேன்ல.பென்னா சார் சும்மா அதயே கேட்டுக்கிட்டு சேஞ்ச் தானே எல்லாம் தருவாங்கோ மொத்தல்ல வண்டில ஏறுங்க சார் நேரமாச்சு..... சிடு சிடுன்னு என் மேல அவர் எரிஞ்சு விழுந்தவுடன் திருவிளையாடல் தருமி மாதிரி....

ஆயிரம் ரூபாயாச்சே...ஆயிரம் ரூபாயாச்சே.............சில்லற கொடுப்பானா மாட்டானானு தெரியலையே...............சொக்கா.........ன்னு உள்ளுக்குள்ள ஒருத்தன் புரண்டு அழ ஆரம்பிச்சுட்டான். இப்டி கும்பகோணம் நெருங்குற வரை கண்டக்டர நான் பாக்குறதும், அவர் பல பேருகளுக்கு சில்லறை கொடுக்கறதும், என்னை கண்டுக்கிடாம போறதும்னு அலுத்துப் போயி... ஜன்னல் கம்பியில தலை சாஞ்சு அப்டியே தூங்கியும் போய்ட்டேன்.

டக்குன்னு என்னோட செல் போன் அடிக்கவும் தூக்கி வாரிப் போட்டு எந்திரிச்சேன்...

சொந்த ஊர்ல பைக்ல போயிட்டு இருந்த மாமா அத்தை மேல ஏதோ லாரி மோதி மதுரையில ஐசியூல அவுங்கள வச்சிருக்கதா பெரியப்பா சொல்லிட்டே இருக்க எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சுது. எல்லோரும் கடவுள நல்லா வேண்டிக்கோங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரம்...

பேருந்து கும்பக்கோணத்திற்குள் நுழைந்திருந்தது.

பெரியப்பா போனை வச்ச உடனே வாசு சித்தி போன் பண்ணி ஒரே அழுகை....நீ எங்கடா இருக்க உடனே பொறப்பட்டு வாடா... மாமா சீரியாஸா கெடக்கங்கடான்னு, எனக்கு அழுகைய அடக்க முடியல, மாமாவோட ரெண்டு குட்டிப்பசங்கள நினைச்சா இன்னும் ரொம்பவே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு...5 வயசு ல ஒரு பொண்ணு 12 வயசுல ஒரு பையன். அத்தை பாவம் அவுங்களால எப்டி வலி தாங்கிக்க முடியும்....

சித்தி போனை கட் பண்ணவும் வண்டி கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்ல நிக்கவும், உடனே அம்மாகிட்ட இருந்து போன் வரவும் சரியா இருந்துச்சு....

ஹலோ அம்மா.. நான் கும்பகோணம் வந்துட்டேன்மா....இந்த 10 நிமிசத்துல வந்துடுறேன்மா வீட்டுக்கு, மாமாவுக்கு ஒண்ணும் ஆகாதும்ம்மா கவலைப்படாதீங்க... பேச்சிக்கிட்டே அம்மாவோட கதறல தாங்கிக்க முடியமா....

பட படன்னு பேக்க எடுத்துக்கிட்டு ஓடிக்குதிச்சு பஸ்ஸ விட்டு வெளில வந்து ஆட்டோல ஏறி ஏம்பா....பாரதி நகர் போப்பா கொஞ்சம் அவசரம்பா ன்னு சொல்லி ஆட்டோ ட்ரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வண்டி நகரும் போது யாரோ பின்னால ஓடி வந்து ஆட்டோத் வேகமா தட்ட

வண்டிய நிறுத்திட்டு இறங்கிப் பாத்தா... சென்னையில இருந்து வந்த அரசுப் பேருந்தோட கண்டக்டர் மூச்சு இறைக்க நின்னுட்டு இருந்தாரு....

" சாரி சார்... இறங்கும் போது சில்லறை கேப்பீங்கன்னு நினைச்சேன் மறந்துட்டுப் போய்ட்டீங்க....நீங்க கடைசியாத்தானே இறங்குவீங்க அதான் கும்பகோணத்துல வந்து சில்லறை கொடுத்துக்கலாம்னு இருந்த சில்லறைய வழில ஏறின பாசஞ்சர்ஸ் எல்லோருக்கும் கொடுத்துட்டேன்...

இடையிலஅந்த ஹோட்டல்ல சாப்டும் போது கூட டிரைவர் அண்ணன் கிட்ட சொன்னேன் அந்த சிகப்பு டீசர்ட்டு போட்டு இருக்க சார்க்கு 1000 ரூவாய்க்கு சில்லறை கொடுக்கணும் கும்பகோணம் வந்ததும் நான் மறந்தாலும் எனக்கு நினைவு படுத்துங்க மறுக்கா அந்த சார் கேக்குறதுக்கு முன்னாடி கொடுத்துறனும்னு சொன்னேன்....

அவரும் நியாகப்படுத்தினாரு..நான் கொடுக்க வர்றதுக்குள்ள நீங்க இறங்கி வேகமா ஓடி வந்திட்டீங்க.....இந்தாங்க சார் சில்லறை..."ன்னு மூச்சு இறைக்க சொல்லிட்டு காசைக் கொடுத்திட்டு....

திரும்பி வேகமா போய்ட்டாரு அந்தக் கண்டக்டர்.

ஆட்டோவுல ஏறி உக்காந்த உடனே....அம்மா போன் பண்ணி மாமாவுக்கு ஒண்ணும் இல்லையாம்பா...அத்தைக்கும் நினைவு திரும்பிருச்சாம் ஆபத்து இல்லேன்னு பெரியப்பா சொன்னாங்கப்பா நீ பதறாம வா...ன்னு சொல்லிட்டு போன வச்சுட்டாங்க...

ஆட்டோகாரண்ணே...வண்டிய மெதுவாவே ஓட்டுங்கண்னேன்னு சொன்னேன்.

அந்த அரசுப் பேருந்தோட கண்டக்டர் மூச்சிறைக்க ஓடி வந்து காசைக் கொடுத்துட்டுப் போனது மனசை அறுக்க ஆரம்பித்திருந்தது எனக்கு....

என்ன என்ன நினைச்சுட்டோம்.....ச்ச்சே...!!!!!

எழுதியவர் : Dheva .S (13-Nov-14, 3:51 pm)
Tanglish : sillarai baakki
பார்வை : 350

மேலே