14112014
இயற்கை தனக்கென்று
உருவாக்கிய ஓர் உவகை
குழந்தை..
கனாக்களும் வினாக்களும்
குழந்தையின் இருவிழி வாசல்கள்..
குழந்தை
மானுடச் சங்கிலியின்
தொடர் இணைப்பு...
பரம்பரை அடையாளம் கடத்தும்
அணுத்துகள்...
இன்பத்தின் விளக்கம்
ஈடற்ற உவகையின் உச்சம்...
எந்த மண்ணிற்கும் மூலதனம்
எந்த திசைக்கும் நம்பிக்கை
சங்கட வலையறுத்து
சந்தோஷ அலை எழுப்பும்
ஜீவிதக் கடல்..
ஆர்வத்தின் குவியல்
ஆற்றலின் அவியல்
அன்பளிப்பும் அறிவளிப்பும்
மட்டுமே எவரும் செய்யுங்கள் குழந்தைக்கு..
அடிக்காதீர் மழலைகளை…
ஒவ்வொரு அடியும்
மழலை இதயம் கிழிக்கும்
கத்தியின் கிழிசல்!
அடிக்காதீர்...கிள்ளாதீர்..
ஐயோ ..அவள் ஒரு குழந்தை..
கிறுக்கல் எல்லாம் ஓவியம்
கீறல் எல்லாம் காவியம்
தத்துபித்து நடையே நடனம்
ஓவென்ற அழுகையும் அழகு
-இவை குழந்தைக்கு மட்டும்
உலகில் பொருந்தும்!
அன்பை மட்டும் பொழியுங்கள்
ஒவ்வொரு அன்புச்சொல்லும்
மழலையின் நெற்றிக்கு வெளிச்சம்
அதுவே இம்மண்ணின்
வெற்றியின் விலாசம்!
ஏகவசன வசவுகள்
எதிர்மறைக் கட்டளைகள்
-விரும்புவதில்லை மழலையர்!
மாறாய்
உடன்பாட்டு உரைகள்
அன்பு நிறை சொற்கள்
மழலையரின் மகிழ்ச்சி மாடங்கள்
மாடங்கள் தோறும் இனி
புதிய எதிரொளிக்கற்றைகள்!