எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 8

ஒதெல்லொவின் கைக்குட்டை 1
ஒதெல்லோ கருப்பு அழகன்
டெஸ்டிமோனா வெள்ளை அழகி
இனிய காதலர்கள்
வெள்ளைப் பனியிலும் தூய்மையானது
அவள் காதல்
இடையே புகுந்தான்
இயாகோ என்ற வில்லன்
கைக்குட்டையை விட்டெறிந்தான்
காதலன் காதலியை சந்தேகித்தான்
காதல் கண்ணீர் ஆனது
சந்தேகத்தை விட்டெறி
கைகுட்டையும்
காதல் கவிதை ஆகலாம் .
=====================================================================
ஹே ராம் ! ----ஒரு கவிதாஞ்சலி . 2
எதிர்ப்பவனை அன்பினால் வெல்
அமைதிக்கென்று ஒரு வழி இல்லை
அமைதிதான் வழி
என் மாபெரும் ஆயுதம் மௌனமான
பிரார்த்தனை
என்று சொல்லிய மனிதன்
கொடியவன் குண்டினால்
மண்ணில் விழுகிறான்
ஹே ராம் என்கிறான்
அப்போது மூவர் வந்தனர்
அரக்கன் தலை எடுத்து வீழ்த்திட
சரம் தொடுத்தேன்
இரக்கமற்றவன் சுடும்போதும்
என் பெயர் எடுத்தாய். அன்பினாலே
வென்றாய் எனக்கும் பாடம் தந்தாய்
மானுடம் வென்றதம்மா!
ராமா எனும் நாமம் வென்றதம்மா!
ரத்தம் சிந்தி சிலுவையில் மாய்ந்தேன்
ஆயினும் அன்புவழி நின்றேன்
தேவகுமாரன் நான்
ரத்தம் சிந்தி மாய்ந்திடும் போதும்
தெய்வத்தின் பெயர் சொன்னாய்
அன்புவழி நின்றாய்
மனித குமாரனாய்ப் பிறந்து
தேவகுமாரனாய் உயர்ந்தாய்
ஆமென்
இரை போட்டு வளர்க்கும் மனிதர்களே
இந்த ஆட்டை கொன்று தின்கின்றனர்
யாருக்காக வாழ்ந்தாயோ அவர்களாலே
கொல்ல்ப்படுகிறாய் ஆயினும்
கருணை வடிவாய் நின்றாய்
நான் போதித்த வழியிலே வாழ்ந்தாய்
உன்னிலும் உயர்ந்த சீடன்
எனக்கு யார் உண்டு மகாத்மா ?
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
=====================================================================
இறைவன் யோசிக்கிறான் 3
தென்றல் தேடியது
மலர்கள் இல்லை
வானம் தேடியது
நிலவும் கதிரும் இல்லை
நதிகள் தேடியது
அலைகள் இல்லை
ஆலயம் தேடியது
பக்த்தர் இல்லை
அரசியல் தேடியது
நல்ல தலைவன் இல்லை
நாடு தேடியது
உறுதியான இளைஞன் இல்லை
மானுடம் தேடியது
மனிதர் இல்லை
படைத்த இறைவன் யோசிக்கிறான்
என்ன செய்ய ?
=====================================================================
விழியின் நிழலில் ஒரு கடிதம் 4
உன் விழியின் நிழலில்
விழுந்து கிடந்தது
ஒரு முகவரி இல்லாத கடிதம்
நான் அதை
நிலவின் ஒளியில்
பிரித்துப் பார்த்த போது
நீ எனக்கு எழுதிய
காதல் வரிகள் புரிந்தது
உன் இதழில் குவிந்து கிடந்த
புரியாத மௌனங்கள்
இதயத் தென்றலில்
இசையாய் மலந்தது
உன் நினைவுகளின்
ஸ்பரிசம்
நெஞ்சில் ஒரு
வசந்த வாசலை
திறந்து வைத்தது
=====================================================================
ஒரு முறை பார்த்தால் என்ன ? 5
ஒன்றை ஓன்று
பார்த்துக் கொள்ளாத
கிரகங்கள் உன்னைப்
பார்க்கவேண்டும் என்று
சுற்றி சுற்றி
வருகிறாயே
நீலவன் தோழன்
நிலவின் தூதுவன்
நான்
ஆலய வாசலில்
பக்தியுடன்
காத்திருக்கிறேன்
ஒரு முறை
பார்த்தால் என்ன ?
=====================================================================
காதல் ரத்தினமே 6
நகைக் கடையில் நண்பன்
காதலுக்கு அதிர்ஷ்டக்கல்
தேடினான்
காதல் ரத்தினத்தை
கண்களில் தேடடா
கடை வீதியில்
என்ன தேடுகிறாய்
என்றேன்
கடைப்பெண் நிலவின் தோழி
ஓரவிழியால் என்னைப் பார்த்தாள்
மூடன் ரத்தினத்தை
வாங்கிச் சென்றான்
சித்திரம் என்னுடன் வந்தாள் !
=====================================================================
பேனாவின் சுயசரிதை 7
எழுத்தும் இலக்கியமும்
இணைய தளத்தின்
பக்கங்கள் ஆனபின்
பேனா
அருங்காட்சியகத்தில்
இறகின் அருகமர்ந்து
சுயசரிதை
எழுதுகிறது
=====================================================================
இரங்கல் கவிதை 8
இலை உதிர்ந்தது
உடன் ஒரு
மலரும் உதிர்ந்தது
இலை அமைதியாய்
கிடந்தது
மலர் பனித்துளியை
இலை மேல் தெளித்தது
மலர் சொல்லிற்று
இலையே
உனக்கு என் இரங்கல் கவிதை
பின்
மலர் மௌனமானது
=====================================================================
யார் அவன் 9
பார்க்கும் முகம்
ஓராறு !
காக்கும் கரம்
ஈராறு !
கூவும்
தோகை
மயில்
கூர் வேல்
ஒன்று !
அணைத்த
கொடி இரண்டு !
சேவல் கொடி
ஒன்று !
யாக்கும்
கவிதை
தமிழ் !
யார் என்று
கேளாதே
முருகா
என்று அழை. !
====================================================================
தாள் பணி 10
பத்து
அவதாரம் !
பதினெட்டு
போர் நாள் !
வெண்மை
ஊதும்
சங்கு !
கண்ணீர் துடைக்க
கை கொடுத்தால்
வளரும்
சேலை !
காண்டீபம் எடு
என்றால்
கீதை !
நிலத்திற்கும்
நீலத்திற்குமாய்
வளர்ந்து நிற்பான்
ஓங்கி உலகளந்த
உத்தமன் !
அவன்
தாள் பணிந்தால்
புண்ணியம் !
=====================================================================
-----கவின் சாரலன்