எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 9

ஆலய வாசலில் ஒரு தரிசனம் 1

மார்கழி பனியில்
குளிரும் காலையில்
கையில் ஏந்திய
தட்டில்
பூவும் பழமும்
பின்னிய கூந்தலில்
சூடிய மல்லிகை
ஆரஞ்சு வண்ண
பாவடை தாவணியில்
ஆலய வாயிலில்
ஒரு தேவியின்
தரிசனம் .
========================================================================

மலரோடு வருவாள் 2

மலரோடு வருவாள்
மாலை தோறும்
வருவாள்
மாலையிட்ட போது
இது
நமக்கு
காலை என்று சொன்னாள்.
========================================================================

அருந்ததி 3

அருந்ததி பார்க்கச்
சொன்னார்
தாரகை அருகில் இருக்கிறாள்
வானத்தை ஏன் பார்க்க வேண்டும்
என்றான்
ஐயர் முறைத்தார்
அவள் சிரித்தாள்
========================================================================

முழு நிலவில் ஒரு முதல் இரவு 4

முழு நிலவு வீசிய
முதல் இரவில்
சாளரத்தை
திரையினால்
மூடினான்

ஏன் என்றாள்

அருகில் வந்தான்
அமர்ந்தான்
விழி அருகில் குனிந்து
இந்த இரவுக்கு
இரண்டு நிலவு
தேவை இல்லை என்றான்

அவள் சிவந்தாள்
அவன் தோளில்
சாய்ந்தாள்

பின் ?
திரை
========================================================================

தேன் நிலவு 5

தேன் நிலவு
எங்கே
உதகையா
கொடைகானலா
என்றாள்

இங்கேயே
இப்போதே
உன் விழியின் நிழலில்
என்றான்
========================================================================

யாரை பார்த்தாள் ? 6

பஸ்ஸில்
நண்பர்கள் இடையில்
பூசல்
உன்னை என்னை என்று ......
பின் யாரைப் பார்த்தாள் ?

கீழே இறங்கியதும்
அவளிடமே கேட்டனர்

யாரைப் பார்த்தாய் ?

அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்றுமே சொல்லாமல்
நகர்ந்தாள்
அந்த ஒன்றரை விழியாள் !

ஒருமுறை திரும்பி
பார்த்தாள் !

பானிபட் யுத்தம்
மீண்டும் துவங்கியது !
========================================================================

என்னை கவிஞன் ஆக்கினாள் 7

முகவரி
எழுதிக் கொண்டிருந்தேன்
பேனா கேட்டாள்
தந்தேன்
பின் சின்னப் புன்னகையுடன்
நன்றி சொல்லி
திருப்பித் தந்தாள்

நன்றி வேண்டாம் என்று
ஆங்கிலத்தில் மறுத்தேன்
மறுபடியும் புன்னகைத்தாள்
கை அசைத்து சென்றாள்

நான் மீண்டும்
முகவரி எழுதவில்லை
கவிதை எழுதத்
தொடங்கினேன்.
========================================================================

நின்றாள் சிலையாக 8

தூரிகையால் உன்னை தொட்டால்
வார்த்தைகளில் வந்து சிரிக்கிறாய்
வார்த்தைகளுக்கு பேனா எடுத்தால்
வண்ணங்களில் வானவில்லாய் விரிகிறாய்

இங்கும் அங்குமாக மாறினால்
எதை தொடுவேன் எதை முடிப்பேன்
ஓவியம் எழுதுவதா கவிதை வரைவதா
சொல் .ஓரிடத்தில் நில்

அவள் சிரித்தாள்

பேனாவையும் தூரிகையும்
விட்டெறிந்தேன்

மௌனமாய் ஓர் ஓரத்தில்
சென்று அமர்ந்தேன்
அவள் அமைதியாய்
நினைவுகளில் வந்து
நின்றாள் சிலையாக
========================================================================

தோளின் துணை 9

தாயின் மடியில்
தவழ்ந்த போது
அன்பின் சுகம்
புரிந்தது

தந்தையின் கரம்
பிடித்து நடந்த போது
வாழ்கையின்
வழி தெரிந்தது

ஆசானின் படிப்பினையில்
அறிவுப் புத்தகம்
கை வந்தது

இன்று உன் தோள்
சாய்ந்து நடக்கும் போது
உலகை பார்க்க
துணிவு பிறந்தது .
========================================================================

அழகு அலையாக 10

தேனாறு ஓன்று திசைமாறி வந்து
இவள் இதழ்மீது பாய்ந்தோடியதோ

தெள்ளமுது வான் இறங்கி வந்து
இவள் வடிவானதோ

பாலாறு விழிதன்னில் கயல் இரண்டு
துள்ளி விளையாடியதோ

நினைவாறு தன்னில் அவள்
அழகலைகள் நின்றாடியதே!
=========================================================================
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-14, 4:39 pm)
பார்வை : 104

மேலே