வேறுலகம் செல்வோம்- ஷர்மா ஜின்னா
முன் குறிப்பு : தம்பி ஷர்மாவின் கவிதையை கொஞ்சம் சந்தத்தோடு மாற்றி எழுதியது...
================================================================================
நிலவின் ஒளியும் தெளிவாய் தெரியும்
----------அன்பே உந்தன் கருவிழியில்..! - உன்
மலரும் முகத்தின் அழகை சொல்ல
----------வார்த்தை இல்லை தாய்மொழியில்..!
புருவம் கொஞ்சம் அசைவதை கண்டால்
----------அய்யோ எனக்குள் யுத்தமடி..! - உன்
உருவில் கூட சோகம் என்றால்
----------நெஞ்சில் ஏதோ சத்தமடி..!
கோடை வெயிலில் தனியும் தாகம்
----------உன்னை கண்டால் எனக்குள்ளே..! - பெரும்
வாடைக் குளிரை அனலாய் மாற்றும்
---------சக்தியும் உண்டோ உனக்குள்ளே..!
சாரல் மழையின் துளியில் கூட
----------அழகாய் தெரிவது உன்முகமே..! - அதை
ஓர விழியின் உள்ளே வைத்து
----------ஒட்டிக் கண்டது என்மனமே..!
கவிதை கடலில் மூழ்கிக் கொண்டே
---------- உன்னைத் தேடும் கவிஞன் நான்.. - இப்
புவியில் கூட அழகாய் உள்ளது
---------- பெண்ணே உந்தன் கண்கள்தான்..
காமம் அறிய காதல் செய்யும்
----------கற்பு கலைந்த உலகமிது - இதில்
காமம் இல்லா காதல் செய்வோம்
----------கண்ணே சொல்உன் கடமை இது
காதல் வைத்து குடிசை எரித்து
----------அரசியல் செய்யும் உலகமடி - இம்
மோதல் கொண்டு உயிரைப் பறித்து
----------முடித்து வைத்தது கலகமடி
சாதிச் சொல்லி காதல் பிரிக்கும்
----------சாத்தான்(கள்) உள்ளது இம்மண்ணே - அட
மீதி வாழ்க்கை வாழ்ந்துக் கொள்வோம்
----------வேறு உலகம் வா பெண்ணே!