நான் உனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்-வித்யா
நான் உனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்-வித்யா
எனக்கு நீ
தாலாட்டுப் பாடியதில்லை
நிலவைக்காட்டி சோறூட்டியதில்லை
பேய்க்கதை சொல்லி பயமுறுத்தியதில்லை
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய்
உன்மார்போடு துயில் கொண்டதில்லை
உன் முதுகில் உப்பு மூட்டை ஏறியதில்லை
மரியாதை நிமித்தமென
உன்னோடு நெருங்கி அமர்ந்ததில்லை
சத்தமாகப் பேசியதில்லை
எனக்கான விடியல்களிலெல்லாம்
நீயே வெளிச்சமாய் நிறைந்திருக்கிறாய்......
எனக்கான பாதைகளிலெல்லாம்
பூக்கள் பரப்பி காத்திருக்கிறாய்
யார் யாரோ எழுதிய உவமைகளிளெல்லாம்
நீயே வாழ்கிறாய்.......!!
எனக்காக நீ முத்தங்கள் ஏதும்
சேமித்ததே இல்லையா......?
எனக்கான அணைப்புகள்
யாருக்கான மிச்சப்படுத்தலில்..?
வயதுகள் வந்து
விபரங்கள் அறிந்ததும்
நான் பெண் என்பதும்
நீ ஆண் என்பதும்
உறவுகளின் புனிதத்தில்
புதைக்கப் பட்டுவிட்டது.......!!
உன் மடியின்
வெறுமையில் எப்போதும்
நான் அமர்ந்திருப்பதாய்
தோன்றும் கானல் நினைவுகள்.....
ஏக்கங்களின் நிமித்தங்களாய்......!!
எனக்கான தேடல்கள்
உன்னுள் புதைந்து
என்னைத் தேடுகின்றன........!!
இனியொரு ஜென்மம்
வேண்டுகிறேன்.......
அதிலுன் மகனாகப்பிறக்க
ஏங்குகிறேன்.......!!
அதற்கான கனவுகளில்
ஒத்திகைப் பார்க்கிறேன் ......!