எண்ணங்கள்

எண்ணங்கள் ...
உயிர்களுடன்
ஒட்டிப்பிறந்த
உடன்பிறப்பு!
எண்ணங்கள்...
உயிர்களை இயக்கும்
உந்துசக்தி !
எண்ணங்கள்...
மனத்திரையில் தோன்றும்
ஒருவகை மாயாஜாலம் !
எண்ணங்கள்...
மூளைமண்டலத்திலிருந்து
முகிழ்த்து வருவதாய்
விஞ்ஞானம் கூறுகிறது .
உள்ளத்திலிருந்து
உதித்து வருவதாய்
நம்மவர் நம்புகிறோம் .
உள்ளம் என்பதென்ன ?
இதயம்தான் உள்ளம் !
இதயம் என்பதென்ன?
இதயம் எங்கே இருக்கிறது ?
இருதயம்தான் இதயமா ?
கேள்விகள் உண்டு !
பதில்களும் உண்டு !
எண்ணங்களுக்கு
நதிமூலம் -ரிஷிமூலம் பார்த்தால்
மூளைதான் மூலம்!
எண்ணங்களுக்கு
எல்லை -வரம்பு
எதுவும் கிடையாது
எண்ணங்கள்...
அதுவொரு தான்தோன்றி !.
எப்படித் தோன்றுகிறது
ஏன் தோன்றுகிறது-என்று
யாருக்கும்தெரியாது .
ஆனால்
தோன்றிக்கொண்டேயிருக்கும்.
பிரபஞ்சத்தில்
பிருமாண்டத்தைநிகழ்த்தி
பிரபஞ்சத்தையே
அனுதினமும்
ஆட்டிப்படைக்கும்
மனித எண்ணங்கள்
மகத்துவம் மிக்கவை.
மனிதனின் .
ஆக்க எண்ணங்களால்
ஜொலித்தும்
அழிவு எண்ணங்களால்
வலித்தும்
பூமி சுற்றி கொண்டிருக்கிறது !
மனிதன்
ஓடிக்கொண்டிருப்பதும்
தினம்தினம்
எதையெதையோ
தேடிக்கொண்டிருப்பதும்
எண்ணங்களின் இயக்கமே !
எண்ணங்களை பிரசவிக்காத
வெறுமைஉள்ளம்
எங்கே-யாருக்கு இருக்கிறது?
மனிதன்
உறங்கும்போதுகூட
கனவு வடிவில்
எண்ணங்கள்
எரும்புச்சாரையாய்
ஊர்ந்து வருகின்றன .
வெறுமைஉள்ளம்
ஞானியர்க்குண்டாம்!
அதுகூட நம்புவதற்கில்லை !
இறந்தவன்
பிறக்காதவன்
இருவருக்குமட்டுமே
எண்ணங்கள் இல்லை .
இருப்பவர் அனைவரையும்
இயக்கும் எண்ணங்கள்
ஒரு
மகா மகா சக்தி !