===+++தாய் நெனப்பு+++===
பத்துமாசம் கருவில் சுமந்து - பல
இன்னல்களை நீயும் சுமந்து - என்னை
பக்குவமாய் ஈன்றெடுத்த
என்தாயே வணங்குகிறேன்...
ஈயெறும்பு தீண்டாமல்
இமைபோல காத்தவளே
ரத்தத்தை பாலாக்கி
எனக்கூட்டி வளர்த்தவளே
எங்கு சென்றாலும்
இடுப்பிலெனை சுமந்தவளே - உன்
பாதத்தில் முத்தமிட
பாவிமனம் தவிக்கிதடி...
பசியென்று நான் பதைத்தால்
உயிர்போகும் உனக்கல்லோ
இருப்பதொரு பருக்கையிலும்
முழுபங்கும் எனக்கல்லோ...
மகனிவன் தூங்கிடவே
மார்பினிலே மெத்தையிட்டாய்
ஆத்தா நீ தலைகோதி
ஆராரோ தினம் படித்தாய்....
பள்ளிக்குநான் சென்றாலும்
புத்தகத்தை நீ சுமந்தாய்
பாசம் அன்பு பாடங்களை
நீதானே கற்று தந்தாய்...
வறுமையிலே நீ மெலிந்தாய்
மூன்றுவேளை எனக்கீந்தாய்
வாட்டிவதைக்கும் குளிரினிலே
நீயெனக்கு போர்வையானாய்...
வாலிபனாய் வளர்ந்தபின்னும்
குழந்தையாகவே காத்தாய்
தெய்வம் நீயே என்றபின்னும்
எனக்காகநீ கோவில்சென்றாய்...
வெட்டியாக ஊரைச்ச்சுற்றி
வீணாக திரிந்தபோதும்
தேடி தேடி வந்தழைத்து
வட்டியிலே அன்னமிட்டாய்...
ஊதாரி என்ன்று என்னை
ஊரார்கள் சொன்னபோதும்
எம்புள்ள சீமதொரை
என்று நீயும் பதிலுரைத்தாய்...
அடுத்த நாடு போறேன்னு
அழுது என்னை அனுப்பிவைத்தாய்
அந்த கண்ணீர் மனக்குளத்தில்
இன்றும் சூழ்ந்து நிற்குதம்மா...
அடுப்பங்கரை அறியாத
உன்பிள்ளை இன்றிங்கே
அடுப்படியில் நிற்கின்றேன்
அம்மா உனை நினைக்கின்றேன்...!
----------------------நிலாசூரியன்.