முடிந்து வைத்த ஆசை

நரைகள் நிறையா
நாட்களுக்குள் நான் இருந்து
நாளும் காண ஆசை
.
சொந்தம் பந்தம்
விட்டுச் சென்று
சொர்கத்தில் ஓர்நாள்
குடியேற ஆசை
.
ஆளை மயக்கா
அழகுபெற ஆசை
.
சலனம் என்னைச்
சபிக்காதிருக்க ஆசை
.
மனம் வென்ற மனதுடன்
மனம் சேர்க்க ஆசை
.
தாய்மடியில் என்றும்
தகைத்திருக்க ஆசை
.
கவியில்லா ஒருலகை
காலன் காலடியில்
கடத்திச் சேர்க்க ஆசை
.
என்றும் திறமைக்கு பக்கத்தில்
வாய்ப்பினை வைத்து பார்க்க ஆசை
.
நள்ளிரவில் கரையோரம்
நான்மட்டும் தனித்திருந்து
அலைகடலோடு கொஞ்சம்
அளவளாவ ஆசை
.
நேற்றின் நிஜங்களுக்குள்
ஊடுருவிச் சென்று
நிழலாய் மாற்றிவர ஆசை
.
காரிருளின் ஒளியூற்றி
கரைத்து முடித்த பின்னும்
இன்னமும் நானெழுதும்
புலமை பெற ஆசை
.
கண்மூடா சில கனவுகள்
கைகூட ஆசை
.
வெட்டிய மறுகணம்
உயிர்பெறும் மரம்தனை
நட்டு வளர்க்க ஆசை
.
காலஇயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து
காவியங்கள் அனைத்தும்
கண்டுவர ஆசை
.
இத்தனையும் ஓர் இரவுக்குள்
நான் பெற்றுவிட ஆசை...
.


நிறைவேற துடிக்கும் ஆசைகளுடன்...
கி.ராதா
.
.

எழுதியவர் : கி,ராதா (20-Nov-14, 11:33 pm)
பார்வை : 211

மேலே