பிறர் படைப்பை அபகரித்தால்
கற்பனைப் புரவியேறி
பலகாதம் பயணம்செய்து
கருகிடைத்தக் களிப்பினிலே
சொந்தமாகச் சொல்லடுக்கி
அலங்கரித்து அழகுபார்த்து
உணர்வுகளை உட்புகுத்தி
உள்ளத்தில் உவகையுடன்
உலவவிட்டோம் தளத்தினிலே !!
பத்திரமாய் இருக்குமென
பதிந்துவைத்தோம் எழுத்தினிலே
பலர்பார்க்க முகமலர்ந்தோம்
பகிர்வுகளால் அகமகிழ்ந்தோம்
கருத்திற்காய் காத்திருந்து
கிடைத்தவுடன் பூரித்தோம் !!
அசராமல் அலுக்காமல்
அனுமதியும் கேட்காமல்
வடித்தவர் அறியாவண்ணம்
வலிக்காமல் வெட்டிஒட்டி
தன்னுடைமை யாக்கிக்கொள்ளல்
தரங்கெட்ட செயலன்றோ ??
வலித்துப்பெற்ற கவிக்குழந்தைகளை
வளர்க்கயெமக்குத் தெரியாதோ ?
தொட்டில்குழந்தையாய்ப் போடவில்லை
தூக்கிப்போய் பிறர்வளர்க்க
தத்துயாரும் கொடுக்கவில்லை
பித்துபிடித்த நிலையிலுள்ளோம் !!
கவித்திருடனே ...கடத்தல்காரனே
கள்ளத்தனம் விட்டுவிடு
உன்மதியை உபயோகித்தால்
உலகமே உனைவியக்கும்
பிறர்படைப்பை அபகரித்தால்
பழிபாவம் வந்துசேரும் ......!!!