அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சந்தோஷ்

அம்மா..!
இந்த சொல்லை உச்சரிக்காத
ஜீவன் இவ்வுலகில்லை

வேற்று மொழிக்காரனிடம்
தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியா
ஆனந்த தமிழ்ச்சொல் இது.

எழுத்து தளத்திலும்
எந்த கவிஞரும் தவிர்க்கமுடியா
அற்புத கவிதை இது.

அம்மா......!
” திருமதி.சியாமளா ராஜசேகர்”


வெண்பா இயற்றி
அழகு கவிதை வடிப்பார்.
அன்பால் உற்சாகமூட்டி -தன்
உறவால் சாலை அமைப்பார்.

அம்மா இயற்றும்
பக்தி பாமாலையில்- அந்த
சக்திக்கும் தமிழ்பக்தி வரும்.
கருத்து பரிமாறலில்-எந்த
கல்நெஞ்சனுக்கும் அன்பு சுரக்கும்.

சந்தோஷத்திலும் துக்கத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
விழிநீர் என்மடியில் வீழ்வதற்குள்
ஆறுதலுக்கும் வாழ்த்துக்கும்
என் அலைபேசி திரையில்
அம்மாவின் பாசம் பளிச்சிடும் .

அன்பாய் எடுத்துரைத்து
பக்குவமாய் கடிந்துரைத்து
உரிமையாய் அறிவுரைக்கும்
தமிழ் தாய் கொடுத்த
அன்புத்தாய் இவர் மட்டுமே..!

அம்மா...!
உங்கள் கைப்பக்குவத்தில்
கவிதை நளப்பாகத்தில்
எங்களுக்கு என்றுமே
நீங்கள் இலக்கியச்சோறு
ஊட்டிவிட வேண்டும்.

வரும் நவம்பர் 23 அன்று
உங்களுக்கு பிறந்தநாள்.

மணக்கும் சந்தனமரத்தில்
இசைக்கும் வீணைசெய்து
கலைமகளின் கையில்
கைப்பொருளாய் கொடுத்திருக்கிறேன்.

23 ம் தேதி அதிகாலை
உங்கள் இல்லத்தில்
கலைமகள் - இந்த
கவிதை மகனின்
அன்பு வாழ்த்தினை
வீணை தந்தியில்
இசைத்து பாடுவாள் .

கேட்டு பாருங்களேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..!

இன்னும் இன்னும்
இனிமையாய் இளமையாய்
ஆரோக்கியமாய் நிம்மதியாய்
பல்லாண்டு வாழ்ந்து
எங்களை வழிநடத்தி நீங்கள்
எப்போதும் ஆசிர்வதிக்க வேண்டும்.



அம்மாவை வாழ்த்தும் பாக்கியம் பெற்றவனாய்...!

-இரா.சந்தோஷ் குமார்


--------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (21-Nov-14, 1:39 pm)
பார்வை : 13577

மேலே